1 கிலோ டீ தூள் 1 லட்சத்திற்கு விற்பனை

இந்தியாவில் ஊட்டி, அசாம், டார்ஜிலிங் ஆகிய பகுதிகளில் தேயிலை பிரதான தொழிலாக உள்ளது. அதிலும் அசாமில் உற்பத்தி செய்யும் டீ தூளினால் தயாரிக்கப்படும் டீ க்கு உள்நாட்டில் மட்டுமல்லாமல் உலக நாடுகளிலும் டீமான்ட் உள்ளது.

இந்நிலையில் அசாமில் கோலகாட் மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் டீ தூள், 1 கிலோ 1 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. அப்படி அதில் என்ன சிறப்பு என நாம் யோசிக்க கூடும்.

பபோஜன் கோல்டு டீ (Pabhojan Gold Tea) எனப் பெயர் கொண்ட இந்த டீ தூளில், டீ தயாரிக்கும் போது, பிரகாசமான மஞ்சள் நிறத்தில் கிடைப்பதாகவும், இதன் சுவையும், தனித்தன்மையுடன் இருக்கும் என கூறப்படுகிறது.

இது அரிய ரக டீ என்பதால் டிமாண்ட் அதிகம் உள்ளதோடு, விலையும் மிக அதிகமாகவே உள்ளது. இந்நிலையில், அசாமில் ஜோர்ஹாட் டீ ஏல மையத்தில் ஜூன் 20 ஆம் தேதி பபோஜன் ஆர்கானிக் டீ எஸ்டேட்டால் பபோஜன் கோல்டு டீ ஏலம் விடப்பட்டது.

அஸ்ஸாமைச் சேர்ந்த தேயிலை நிறுவனமான ஈசா டீ நிறுவனம் இதை வாங்கியுள்ளது. இதன் மூலம் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு புதிய அனுபவத்தை கொடுக்க முடியும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

பபோஜன் ஆர்கானிக் டீ எஸ்டேட்டின் உரிமையாளர் ராக்கி தத்தா சைகியா கூறுகையில், இந்த அரிய வகை தேயிலையை ஒரு கிலோ மட்டுமே உற்பத்தி செய்தோம், மேலும் வரலாறு படைத்த இந்த புதிய சாதனை விலையில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். அது பெற்ற விலை, அஸ்ஸாம் தேயிலை தொழில் இழந்த புகழை மீண்டும் பெற உதவும்,” என்றார்.