கருப்பு உடை கருப்பு முகக்கவசம் அணியலாம் -பினராயி விஜயன்

கேரளாவில் கருப்பு உடை, முகக்கவசத்துக்கு தடையில்லை என்று முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

திருவனந்தபுரம் யு.ஏ.இ தூதரக பார்சல் மூலம் தங்கம் கடத்தல் வழக்கில் சிக்கி ஜாமீனில் வெளியே உள்ள ஸ்வப்னா சுரேஷ், கேரள மாநில முதல்வர் பினராயி விஜயனுக்கு எதிராக பல்வேறு குற்றாச்சாட்டுக்களை தெரிவித்து வருகிறார்.

தங்கம் கடத்தலில் கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் அவரது குடும்பத்தாருக்கு தொடர்பு இருப்பதாக தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார். அண்மையில் இது தொடர்பாக சிலர் தன்னுடன் பேசியதாக ஒரு ஆடியோவையும் ஸ்வப்னா வெளியிட்டிருந்தார். இதையடுத்து முதல்வர் பதவியிலிருந்து பினராயி விஜயன் விலக வேண்டும் என, எதிர்க்கட்சிகள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன.

கேரள மாநிலம் முழுவதும் கடந்த சில நாட்களாக முதல்வர் பினராயி விஜயன் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். முதல்வர் செல்லும் இடங்களில் சாலை மறியல் செய்தும், கருப்புக்கொடி காட்டியும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. போராட்டக்காரர்களை காவல்துறையினர் தடியடி நடத்தியும், கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியும், தண்ணீரை பீய்ச்சி அடித்தும் கலைத்து வருகின்றனர்.

இதனிடையே, கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு அளிக்கப்பட்டு வந்த பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், முதல்வர் கலந்து கொள்ளும் விழாக்களில் கருப்பு முக கவசம், கருப்பு உடை அணிந்து வர தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகின. அதேபோல், முதல்வர் செல்லும் வழியில் போலீசார் போக்குவரத்தை முடக்குவதாகவும் செய்திகள் வெளியாகின.

இந்நிலையில், கேரளாவில் கருப்பு உடை, முகக்கவசத்துக்கு தடையில்லை என்று முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். கேரள மாநிலம் கண்ணூரில் நடந்த ஒரு நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பினராயி விஜயன், “பொதுமக்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப உடை அணிய உரிமை உண்டு. அதே போல் கருப்பு நிற முக கவசம் அணிய எந்த தடையும் இல்லை. கேரளாவில் சாலையில் செல்ல அனைவருக்கும் உரிமை உண்டு. அதனை தடுக்க எந்த சக்திக்கும் அதிகாரம் இல்லை. இதுதொடர்பாக , பொய்யான பிரச்சாரம் செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அரசுக்கு களங்கத்தை ஏற்படுத்த சிலர் முயற்சி செய்து வருகிறார்கள்.” என்றார்.

முன்னதாக, இது தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என, கேரள ஆளுநர் ஆரிஃப் முகமது கான் தெரிவித்திருந்த நிலையில், முதல்வர் பினராயி விஜயன் விளக்கம் அளித்துள்ளார். இதனிடையே, முதல்வருக்கு எதிராக பல்வேறு இடங்களில் கருப்பு உடை அணிந்து போராட்டங்கள் நடைபெற்றன. காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகள் இந்த போராட்டத்தை முன்னெடுத்தன. சில இடங்களில் முதல்வருக்கு கருப்பு கொடி காட்டியவர்கள் விரட்டியடிக்கப்பட்டதுடன், பேரணியாக செல்ல முயன்றவர்களையும் போலீசார் தடுத்து நிறுத்தினர்.