சீனியர் ஹாக்கி லீக் போட்டியில் பி.எஸ்.ஜி.கலை கல்லூரி வெற்றி

கோவை மாவட்ட ஹக்கி சங்கம் சார்பில் நடைபெற்ற, ஆண்களுக்கான சீனியர் ஹாக்கி லீக் 2021-22 போட்டியில் பி.என்.பிரசாத் நினைவுக் கோப்பையை கோவை பி.எஸ்.ஜி. கலை மற்றும் அறிவியல் கல்லூரி தட்டிச்சென்றது.

இந்த ஆண்டு கோவை மாவட்ட அளவில் 11 அணிகள் பங்கேற்றன. ஏப்ரல் 2ல் துவங்கிய இந்த போட்டி, பல சுற்றுகளுக்கு பின் மே 15 ல் முடிந்தது. இப்போட்டிகள் குமரகுரு தொழில்நுட்ப கல்லூரி, பி.எஸ்.ஜி டெக் மற்றும் கோயம்புத்தூர் இன்ஸ்டியுட் ஆப் டெக்னாலஜி ஆகிய இடங்களில் வார இறுதி நாட்களில் லீக் மற்றும் சூப்பர்லீக் போட்டிகளாக நடைபெற்றன.

லீக் போட்டியின் முதல் சுற்றில், 11 அணிகளில் 4 அணிகள் சூப்பர் லீக் போட்டிக்கு தேர்வாயின. இறுதியில் பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரியின் ஹாக்கி அணி போட்டியில் வென்றது. 2-ம் இடத்தை சக்தி இன்ஸ்டியூட் ஆஃப் இன்ஜினியரிங் அண்டு டெக்னாலஜி கல்லூரியின் ஹாக்கி அணி வென்றது.

போட்டியின் பரிசளிப்பு விழா, காந்திபுரம் சுகுணா பிப்ஸ் பள்ளியில் நடைபெற்றது. கோவை மாவட்ட ஹாக்கி சங்கத்தின் தலைவர் லட்சுமி நாராயணசாமி தலைமை விருந்தினராக பங்கேற்றார். மேலும் விழாவில் கோவை மாவட்ட ஹாக்கி சங்கத்தின் கௌரவச் செயலாளர் செந்தில்குமார், முதுநிலை துணைத்தலைவர் மெர்வின் ஜெஸ்ஸி, இணைச் செயலாளர் திருநாவுக்கரசு, பொருளாளர் உதயக்குமார், போட்டிக்குழு தலைவர் சோமசுந்தரமூர்த்தி ஆகியோர் பங்கேற்றனர்.

இப்போட்டிக்கான உதவிகளை ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் டவுன்டவுன் மற்றும் கிரின்சிட்டி திட்ட தலைவர் அமித் குமார் பிரசாத் மற்றும் சுமித்குமார் பிரசாத் ஆகியோர் செய்தனர். இப்போட்டியானது, அமித்குமார் பிரசாத் மற்றும் சுமித்குமார் பிரசாத் ஆகியோரின் தந்தை பி.என்.பிரசாத் நினைவாக நடந்தது குறிப்பிடத்தக்கது.

முதலிடம் பெற்ற அணிக்கு தங்கப்பதக்கங்கள், இரண்டாம் இடம் பெற்ற அணிக்கு வெள்ளி பதக்கம் மற்றும் இறுதி போட்டியில் பங்கேற்ற 4 அணிகளுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மேலும் சிறப்பாக விளையாடிய 7 பேருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.