நெருப்பாற்றில் நீந்துவாரா அன்புமணி?

கடந்த 2009 முதல் தோல்வி வளையத்தில் இருந்து வரும் பாமகவை நெருப்பாற்றில் நீந்தி வெற்றி பாதைக்கு அழைத்துச் செல்வாரா அன்புமணி? என்ற கேள்வி எழுந்துள்ளது.

1989 இல் தொடங்கப்பட்ட பாமகவின் நிறுவனத் தலைவராக மருத்துவர் ச.ராமதாஸ் இருந்து வருகிறார்.  எனது குடும்பத்தில் இருந்து யாரும் கட்சி, ஆட்சி பொறுப்புக்கு வரமாட்டார்கள். அப்படி வந்தால் என்னை முச்சந்தியில் வைத்து அடியுங்கள் என்று ராமதாஸ் தொடக்க காலத்தில் அறிவித்தார். இப்போது ராமதாஸின் மகனே பாமகவின் தலைவராக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.

அக்கட்சியின் முதல் தலைவராக பேராசிரியர் தீரன், அவரைத் தொடர்ந்து எடப்பாடி கணேசனும், 1998 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து 25 ஆண்டுகளாக ஜி.கே.மணி பதவி வகித்து வந்தார். ஜி.கே.மணியின் பதவி காலத்தில் தான் பாமக மத்திய அமைச்சரவையில் பங்கு வகித்தது. வடதமிழகத்தில் பாமக அங்கம் வகிக்கும் கூட்டணியே வெற்றிபெறும் என்ற சூழல் அப்போது நிலவியதால் பாமகவால் உச்சபட்ச அதிகாரத்தை சுவைக்க முடிந்தது.

இருப்பினும், 2009 மக்களவைத் தேர்தலில் இருந்து தொடர்ந்து 12 ஆண்டுகளாக தலா 3 மக்களவைத் தேர்தல்கள், பேரவைத் தேர்தல்கள் என 6 தேர்தல்களில் பாமக தொடர்ந்து தோல்வி வளையத்திலேயே உள்ளது.

2026 இல் தமிழகத்தில் பாமக ஆட்சி என்ற இலக்குடன் பயணிக்கும் ராமதாஸ், அடுத்த பேரவைத் தேர்தலை மனதில் வைத்து கட்சிக்குப் புதிய தலைமை என்ற முக்கிய நகர்வை செய்திருக்கிறார்.

சென்னை திருவேற்காட்டில் மே 28 இல் நடந்த பாமகவின் அவசர பொதுக்குழுக்கூட்டத்தில் புதிய தலைவராக அன்புமணி பதவியேற்றுள்ளார். இதுவரை இல்லாத அளவுக்கு பாமக நெருக்கடியான அரசியல் சூழ்நிலையில் பயணிக்கும் காலகட்டத்தில் தான் அன்புமணி அக்கட்சிக்கு தலைமை ஏற்றுள்ளார்.

பாமகவின் வெற்றி தோல்விகள்:

மக்களவைத் தேர்தலோ, பேரவைத் தேர்தலோ எதுவாக இருந்தாலும் பாமக அங்கம் வகிக்கும் கூட்டணியே வெற்றிபெறும் என்று இருந்த நிலை மாறி பாமகவை கூட்டணிக்கு சேர்த்துக் கொண்டால் அந்த அணியின் வெற்றி கேள்விக்குறியாகும் என்ற சூழல் 2009 மக்களவைத் தேர்தலுக்குப் பின்னர்  உருவாகிவிட்டது. 2016 இல் மாற்றம், முன்னேற்றம், அன்புமணி என்ற கோஷத்தை முன்வைத்து நவீன அரசியல் உத்திகளுடன் பாமக தனித்துப் போட்டியிட்டும்கூட முதல்வர் வேட்பாளரான அன்புமணி உள்பட ஒருவர் கூட வெற்றிபெற முடியாத சூழலே இருந்தது.

பேரவைத் தேர்தலைப் பொறுத்தவரை 1991 இல் தனித்து போட்டியிட்டு ஒரு இடம் (5.9 சதவீத வாக்கு), 1996 இல் வாழப்பாடி ராமமூர்த்தி தலைமையிலான ராஜீவ் காங்கிரசுடன் கூட்டணியாக போட்டியிட்டு 3 இடங்கள்

(6 சதவீத வாக்கு), 2001 இல் அதிமுக கூட்டணியில் 20 இடங்கள் (5.6 சதவீத வாக்கு),  2006 இல் திமுக கூட்டணியில் 18 இடங்கள் (5.6 சதவீத வாக்கு), 2011 இல் திமுக அணியில் மூன்று இடங்கள் (5.2  சதவீத வாக்கு) என வெற்றிபெற்றுவந்த பாட்டாளி மக்கள் கட்சி, 2016 ஆம் ஆண்டு தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டும் ஒரு இடத்தைக்கூட (5.36 சதவீத வாக்கு) பெறவில்லை.

இந்த நிலையில், 2021ஆம் ஆண்டு தேர்தலில் மீண்டும் அ.தி.மு.கவுடன் கூட்டணி அமைத்த அக்கட்சி ஐந்து இடங்களுடன் (3.8 சதவீத வாக்கு) தற்போது தமிழக சட்டப்பேரவையில் செயல்பட்டு வருகிறது.

மக்களவைத் தேர்தல்களைப் பொறுத்தவரை, 1989 இல் முதல் முறையாக அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட்டு ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாவிட்டாலும் 6 சதவீத வாக்கு வங்கியை பாமக பெற்றது.  1998 இல் அதிமுக அணியில் 4 இடங்கள் (6 சதவீத வாக்கு), 1999 இல் திமுக அணியில் 5 இடங்கள் (8.2 சதவீத வாக்கு), 2004 இல் திமுக அணியில் 5 இடங்கள் (6.7 சதவீத வாக்கு) என வெற்றி பெற்ற பாமக 2009 இல் அதிமுக அணியில் ஒரு இடத்தைக்கூட பெற முடியவில்லை. 2014 இல் திமுக, அதிமுகவை தவிர்த்துவிட்டு பாஜக, தேமுதிக அங்கம் வகித்த தேசிய ஜனநாயக கூட்டணியில் ஒரு இடத்தை (4.4 சதவீத வாக்கு) பெற்ற பாமக 2019 இல் ஒரு இடத்தையும் (5.36 சதவீத வாக்கு) பெற முடியவில்லை.

மேலும், எப்போதும் இல்லாத அளவுக்கு கடந்த பேரவைத் தேர்தலில் பாமகவின் வாக்கு வங்கி 3.8 சதவீதமாக சுருங்கியது. அடுத்து  வந்த 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் (வடதமிழகத்தில் 7 மாவட்டங்கள்),  நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் தனித்துப் போட்டியிட்ட பாமகவால் பெரிய அளவில் சாதிக்க முடியவில்லை. தொடர்ந்து தோல்வி வளையத்தில் இருக்கும் பாமகவை, வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்ல வேண்டுமெனில் அன்புமணி பல சவால்களை சந்தித்தாக வேண்டும்.  பாமகவை பொறுத்தவரை அதன் மீது படிந்துள்ள கடும் விமர்சனங்களை முதலில் களைந்தால் மட்டுமே மீண்டும் வெற்றிப் பாதைக்கு பாமகவை அன்புமணியால் அழைத்துச் செல்ல முடியும்.

வடதமிழகத்தில் மட்டுமே வாக்கு வங்கியை வைத்திருக்கும் கட்சி, சமூக நீதி பற்றி பேசினாலும் அது வன்னியர்களுக்கான அரசியல் கட்சி என்ற பார்வை பொதுமக்களிடமும், அரசியல் கட்சிகளிடமும் இரண்டறக் கலந்துவிட்டது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தென்தமிழகம், கொங்கு மண்டலம், டெல்டா மாவட்டங்களிலும் பாமகவை வளர்க்கும் செயல் திட்டங்களை உருவாக்குவது தான் அன்புமணியின் முதல் இலக்காக இருக்க வேண்டும்.

இரு திராவிட கட்சிகளுடன் இனி ஒருபோதும் கூட்டணி இல்லை என 2016 இல் முழங்கி தனித்து போட்டியிட்டுவிட்டு மீண்டும் ஒரு திராவிட கட்சியான அதிமுகவுடன் கூட்டணிக்கு தாவியது நடுநிலை வாக்காளர்கள் மத்தியில் பாமகவின் நம்பகத் தன்மையை கேள்விக்குறியாக்கியுள்ளது. 2026 இல் மீண்டும் பாமக தலைமையில் ஆட்சி என்ற இலக்கை பாமக நிர்ணயம் செய்தாலும் தொடர்ந்து தனித்துப் போட்டி என்பதில் அக்கட்சி உறுதியாக இருக்குமா என்ற நடுநிலை வாக்காளர்களின் அவநம்பிக்கையை அன்புமணி ராமதாஸ் எப்படி களையப் போகிறார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

2004 முதல் 2009 வரை மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக பதவி வகித்தபோது, புகையிலை ஒழிப்புக்காக அவர் மேற்கொண்ட நடவடிக்கைகள், இளம் தலைவர், படித்த தலைவர் போன்றவை புதிய அரசியல் தலைவராக உருவெடுக்க அன்புமணிக்கு சாதகமாக உள்ளன. பாமக தொடங்கியப்பின்னர் உருவாகிய, 5 சதவீத வாக்கு வங்கிக்குமேல் பெற்றிருந்த மூப்பனார் தலைமையிலான தமாகா, விஜயகாந்த் தலைமையிலான தேமுதிக, வைகோ தலைமையிலான மதிமுக ஆகியவை காலவெள்ளத்தில் கரைந்து நிற்கின்றன. ஆனால், பாமக தொடர்ந்து 5 சதவீத வாக்கு வங்கியை 30 ஆண்டுகளாக வைத்திருந்தது. கடந்த பேரவைத் தேர்தலில் மட்டுமே பாமகவின் வாக்கு வங்கி 3.8 சதவீதமாக சுருங்கியது. இருப்பினும் அரசியல் சக்தி என்ற அந்தஸ்தை இதுவரை இழக்காமல் இருப்பது பாமகவின் பலமாக உள்ளது.

ஒவ்வொரு முறையும் பாமக பின்னடைவை சந்திக்கும்போது மீண்டும் வாக்கு வங்கியை பலப்படுத்த ஜாதி அரசியலை கையில் எடுக்கிறது என்ற விமர்சனம் உள்ளது.  மீண்டும் பின்னடைவு ஏற்பட்டால், ஜாதி அரசியலுக்கு பாமக செல்லாது என்ற எண்ணத்தை பாமக உருவாக்க வேண்டிய கட்டாய சூழலில் உள்ளது.

வடதமிழகத்தில் 30 சதவீத வன்னியர்களின் வாக்கு வங்கியை மட்டுமே பிரதானமாக நம்பியிருக்கும் பாமக, அரசியல் களத்தில் தனக்கு நேர் எதிராக திரும்பும் 30 சதவீத ஆதிதிராவிடர்கள், 30 சதவீத பிற்பட்டோர் சமூக வாக்குகளை சமாதானப்படுத்துவதற்கான முன் முயற்சிகளை எடுக்காவிட்டால் 2026 இல் ஆட்சியைப் பிடிப்பது பகல் கனவாகவே மாறிவிடும். மாற்று சமூகங்களை அரவணைப்பதற்கான செயல் திட்டங்களை உடனடியாக அன்புமணி எடுத்தாக வேண்டும். பாமக தொடக்க காலத்தில் கையாண்ட உத்தியான, வேறு சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கும் அதிக பிரதிநிதித்துவம் என்பதை மீண்டும் அமல்படுத்த வேண்டும்.தென்தமிழகத்தில் அரசியல் பிரதிநிதித்துவம் கிடைக்காத தேவேந்திர குல வேளாளர் சமூகத்தை 1989 முதல் 1998 வரை அரவணைத்து வாக்கு வங்கியை உயர்த்தியதுபோல, மீண்டும் தென்தமிழகம், கொங்கு மண்டலம் ஆகியவற்றில் வாக்கு வங்கியை உயர்த்த புதிய அரசியல் உத்திகளை பாமக கையாண்டாக வேண்டும்.

ஜெயலலிதா, கருணாநிதி மறைவுக்குப் பின்பும் கூட அதிமுக,  திமுகவின் வாக்கு வங்கியில் பெரிய அளவில் சேதாரம் ஆகவில்லை. நாம் தமிழர், பாஜக போன்ற கட்சிகள் தொடர்ந்து வேகமாக வாக்கு வங்கியை உயர்த்தி வருகின்றன. இவற்றையெல்லாம் மீறி பாமகவை வளர்த்தெடுக்க வேண்டிய பொறுப்பு அன்புமணிக்கு இருக்கிறது. இதை 2026 பேரவைத் தேர்தலுக்கு முன்பு அன்புமணியால் செய்ய முடியுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

2026 இல் தனித்து போட்டி அல்லது தனது தலைமையில் தனி அணி என்ற இலக்கை தெளிவாக நிர்ணயித்துவிட்டது பாமக. ஆனால், 2024 மக்களவைத் தேர்தல் பற்றி இதுவரை தெளிவுப்படுத்தவில்லை.

2024ல் பாமக எடுக்கும் முடிவு 2026 பேரவைத் தேர்தலிலும் எதிரொலிக்கும்.

மீண்டும் வெற்றிப் பாதைக்குச் செல்ல எத்தகைய அரசியல் வியூகத்தை அன்புமணி எடுக்கப்போகிறார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

நிலை கொள்ளுமா பாமக?

இது குறித்து அரசியல் விமர்சகர் ரிஷி கூறும்போது, பாமகவின் புதிய தலைவராக ராமதாசின் மகன் அன்புமணி ராமதாஸ் பொறுப்பேற்றுள்ளார். பாமகவை பொறுத்தவரை அது ராமதாஸ் அவர்களை மையப்படுத்திய கட்சி என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை. அந்தக் கட்சியை சேதாரமின்றி தன்னுடைய மகனுக்கு ஒப்படைக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே தற்போது அன்புமணி ராமதாசை தலைவராக்கி உள்ளார் ராமதாஸ்.

இந்தியாவில் காந்தி, பால்தாக்கரே, ராமதாஸ் ஆகிய மூவர் மட்டுமே கட்சியில் பொறுப்பில் இல்லாமல் அந்தக் கட்சியை கட்டுப்படுத்திய அரசியல் தலைவர்கள். கடந்த சட்டமன்ற தேர்தலில் சீமான் 6.85% வாக்குகளைப் பெற்று ஒரு தலைவராக உருவெடுத்துள்ளார். அதே போன்று தற்போது பாஜகவின் மாநில தலைவராக உள்ள அண்ணாமலையும் பல செயல்பாடுகளின் மூலம் தன்னை ஒரு தலைவராக நிலைநிறுத்திக் கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். மேலும் பெரும்பாலான வன்னியர்கள் அதிமுகவை நோக்கி செல்லும் காட்சிகளும் தெரிகின்றன.

இப்படிப்பட்ட சூழலில் ஒரு காலகட்டத்தில் 13 % வன்னியர் ஓட்டுகளில் முதலிடத்தில் இருந்த பாமக தற்போது  அதிமுக, திமுகவிற்கு அடுத்து மூன்றாவது இடத்திற்கு தள்ளப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இப்படிப்பட்ட சூழலில் 2016 போல் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் மாற்றம், முன்னேற்றம், அன்புமணி எனும் கோஷம் எடுபடுகிறதா, அதற்கு முன்பு 2024 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் பாமக எத்தகைய முடிவு எடுக்கப் போகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.