குன்னூரில் ஈரக்கழிவுகளை பதப்படுத்தும் மையம் துவக்கம்

மைக்ரோலேண்ட் அறக்கட்டளை, தன்னார்வ தொண்டு நிறுவனமான கிளீன் குன்னூர் மற்றும் குன்னூர் நகராட்சியுடன் இணைந்து, ஓட்டுப்பட்டறையில் உள்ள ஈரக்கழிவு பதப்படுத்தும் பிரிவை சுமார் 60 லட்சம் ரூபாய் செலவில் மேம்படுத்தியுள்ளது.

இங்கு பிரித்தெடுக்கப்படும் கழிவுகள், ஏ தரச்சான்றிதழ் பெற்ற தரமான உரமாக மாற்றப்பட்டு, இப்பகுதியில் உள்ள விவசாயிகள் மற்றும் தோட்டங்களுக்கு மண் புத்துயிர் பெறும் வகையில் விற்பனை செய்யப்படுகிறது.

ஈரக்கழிவு பதப்படுத்தும் பிரிவை தமிழ்நாடு சுற்றுச்சூழல், பருவநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாஹு திறந்து வைத்தார்.

நீலகிரி மாவட்ட ஆட்சியர் அம்ரித், குன்னூர் நகராட்சி தலைவர் ஷீலா கேத்ரின், நகராட்சி துணைத் தலைவர் வாசிம்ராஜா, நகராட்சி ஆணையர் கிருஷ்ணமூர்த்தி, மைக்ரோலேண்ட் அறக்கட்டளையின் அறங்காவலர் கல்பனா கார், நிர்வாக அறங்காவலர் சமந்தா ஐயன்னா, கிளீன் குன்னூர் அறங்காவலர் வசந்தன் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் கலந்து கொண்ட சுப்ரியா சாஹு கூறுகையில், இந்த மையத்தை அழகிய கழிவு மேலாண்மை வசதியாக மாற்றுவதன் மூலம் நாங்கள் தொடங்கிய பயணம் பிரத்யேக உரம் தயாரிக்கும் முற்றத்துடன் மேலும் விரிவடைந்து வருகிறது. ஈரக்கழிவு வசதியை மேம்படுத்துவது, பிரிக்கப்பட்ட கரிம வீட்டு சமையலறை கழிவுகள், பறவை வளர்ப்பு பண்ணைகளின் கழிவுகள், பிற சந்தை கழிவுகள் மற்றும் தோட்டக்கழிவுகளை கையாளுவதற்கு உதவுகிறது. சுற்றுலா காலங்கள் மற்றும் திருவிழாக்களின் போது அதிகரிக்கக்கூடிய கழிவுகளை கையாளும் திறன் தற்போது உருவாக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

இது மாதிரியான திடக்கழிவு மேலாண்மை வசதி மையங்களை நீலகிரியின் பிற பகுதிகளில் செயல்படுத்தி இந்த பிராந்தியத்தை சுற்றுசூழல் மாசுபாட்டிலிருந்து பாதுகாக்க மாவட்ட ஆட்சியர் அம்ரித் உறுதியளித்தார்.

குன்னூர் நகராட்சி ஆணையர் கூறுகையில், மூன்றே மாதங்களில் குறை திறன் ஈரக்கழிவு முற்றம் அடையாளம் காண முடியாத அளவு முன்னேறியுள்ளது குறித்து நாங்கள் பெருமிதம் கொள்கிறோம் என்றார்.

ஈரக் கழிவுகளை பராமரிப்பதற்காக ஒரு சிறப்பு மையம் உருவாக்கப்பட்டதன் மூலம் சிறிய நகரங்களுக்கு, குறிப்பாக சுற்றுலா நகரங்களுக்கு இது ஒரு முன்மாதிரியாக இருக்கும் என நம்புவதாக மைக்ரோலேண்ட் அறக்கட்டளையின் அறங்காவலர் கல்பனா கார் கூறினார்.