இன்று உலக பால் தினம்

கடந்த 2001ம் ஆண்டில் தான் உலக பால் தினத்தை ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண் அமைப்பு (FAO) அறிமுகப்படுத்தியது. உலகளாவிய உணவாக பாலின் முக்கியத்துவத்தை அங்கீகரிப்பதற்கும், பால் துறையை கொண்டாடுவதற்கும், ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 1ம் தேதி உலக பால் தினமாக கொண்டாடப்படுகிறது.

பால் மனிதனுக்கு இயற்கை வழங்கிய அற்புதமான கொடை. நம் நாட்டில் பொதுவாக எல்லோரும் பால் மற்றும் பால்பொருட்களை அன்றாட வாழ்வில் பயன்படுத்துகின்றோம்.

குழந்தையின் முதல் உணவு பால். பல நூறு ஆண்டுகளுக்கு முன், மனிதன் விவசாயத்திலும் கால்நடை வளர்ப்பிலும் ஈடுபட்டிருந்த போது, விலங்குகளின் பாலைப் பயன்படுத்தத் தொடங்கினர்.

ஆடு, பசு, எருமை, கழுதை, குதிரை ஏன் ஒட்டகத்தின் பால் வரை மனிதன் பயன்படுத்தாத  பாலே இல்லை. ஆனால், ‘தாய்ப்பாலுக்கு அடுத்தது பசும்பாலே குழந்தைகளுக்கு எளிதில் ஜீரணம் ஆகும்’என்கிறது மருத்துவ உலகம். உலகளாவிய பால் உற்பத்தியில், பசும்பால் உற்பத்தி மட்டும் 85 சதவிகிதம் உள்ளது.

தினசரி காலை மாலையில் டீ மற்றும் காபி, மதிய உணவில் தயிர், வெப்பத்தைத் தணிக்க மோர், உணவின் சுவையைக் கூட்ட நெய் போன்ற பால் பொருட்களை பயன்படுத்தாத நாளே கிடையாது. குழந்தைகள் முதல்  கர்ப்பிணிகள், வயதானவர்கள் மற்றும் நம் வீட்டு செல்லப்பிராணிகள் வரை என, அனைவருக்கும் ஏற்றது பால்.

பசும்பால் தாய்ப்பாலுக்கு இணையானது, ஃபோலிக் அமிலம் தயமின், பொட்டாசியம் நிறைந்தது. பசும்பாலில் அனைத்து விதமான அமினோ அமிலங்களும் உள்ளன. ஆனால், புரதத்தின் அளவு மட்டும் குறைவு.

இதில் கால்சியம், லாக்டோஸ் நிறைந்ததுள்ளது. இது உடலுக்குள் சென்று லாக்டிக் அமிலமாக மாறுகிறது. லாக்டிக் அமிலம், உடலுக்குத் தேவையான புரதம், நார்ச்சத்துக்களை உறிஞ்ச உதவுகிறது. வயிற்றுப்புண்ணின் வீரியத்தைக் குறைக்கிறது.

பால் குடிப்பதால், 45 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு மெனோபாஸ் நிலையில் ஏற்படும், `எலும்பு அடர்த்தி குறைதல்’எனும் ஆஸ்டியோபொரோசிஸ் பிரச்னையைப் போக்குகிறது. குழந்தைகளின் எலும்பு வளர்ச்சிக்கு மிகவும் உதவியாக இருக்கிறது. வயதானவர்களுக்கு எலும்பு தேய்மானம் அடைவதைத் தடுக்கிறது.

ஐந்து முதல் நாற்பது வயதுக்குட்பட்டவர்கள், தினமும் 400 மி.லி பாலை குடிப்பது நல்லது. 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் கொழுப்பு நீக்கப்பட்ட பால் உட்கொள்வது சிறந்தது. இளம் வயதினர் மிதமான கொழுப்புள்ள பாலை குடிப்பது நல்லது.