கே.பி.ஆர். ஐ.ஏ.எஸ் அகாடெமி மாணவர்கள் சிவில் சர்வீஸ் தேர்வில் சாதனை

ஐ.ஏ.எஸ், ஐ.பி. எஸ்., உள்ளிட்ட சிவில் சர்வீஸ் பணிகளுக்கான தேர்வு, கடந்த ஜனவரியிலும், வெற்றி பெற்றவர்களுக்கான நேர்முக தேர்வு ஏப்ரல் மாதமும் நடந்தது. இறுதி தேர்வு முடிவுகள் மே 30- ம் தேதி வெளியிடப்பட்டன அதில் 685 பேர் தேர்ச்சி பெற்றனர். இதில் கோவை கே. பி, ஆர்., ஐ.ஏ.எஸ்., அகாடெமியில் பயிற்சி பெற்ற 8 பேர் குடிமைப்பணிக்கு தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இங்கு பயிற்சி பெற்ற கோவை காட்டூர் பகுதியை சேர்ந்த ரம்யா இந்திய அளவில் 46 வது இடத்தையும் தமிழக அளவில் 2-வது இடத்தையும் பெற்றுள்ளார். 2013 இல் கல்லூரி படிப்பை முடித்த பின்பு பணிக்குச் சேர்ந்த இவர் சிவில் சர்வீஸ் தேர்வுக்கு பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என்பதற்காக வேலை விட்டு விட்டார். இத்தேர்விற்காக 5 ஆண்டுகள் பயிற்சி மேற்கொண்டுள்ளார். தோல்விகள் வந்தாலும் அடுத்த கட்டத்தில் அதை சரி செய்ய முடியும் என்ற நம்பிக்கை இருக்க வேண்டும் என தெரிவிக்கிறார்.

2018 இல் பொறியியல் கல்லூரி படிப்பை முடித்த காமலேஸ்வர் ராவ், இரண்டு முறை இத்தேர்வில் தோல்வியைச் சந்தித்து, தற்போது 297 வது இடத்தைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியைச் சேர்ந்தவர் சிவராமன். பொறியியல் முடித்துள்ள இவர், சிவில் சர்வீஸ் தேர்வில் மூன்று முறை தோல்வியை தழுவி இருந்தாலும் நான்காம் முறை 363 வது இடத்தைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

கே.பி.ஆர். குழும நிறுவனங்களின் தலைவர் கே.பி.ராமசாமி, ஐ.ஏ.எஸ். அகாடமியின் இயக்குனர் சிகாமணி, கே.பி.ஆர் நிறுவனங்களின் மேலாண்மை இயக்குனர் நடராஜன் ஆகியோரை சந்தித்து இவர்கள் வாழ்த்து பெற்றனர். கே.பி.ஆர் குழுமங்களின் நிர்வாக இயக்குனர்கள் அனந்த கிருஷ்ணன் மற்றும் சக்திவேல் ஆகியோர் உடன் இருந்தனர்.

பின்னர் கே.பி.ஆர் கல்லூரி வளாகத்தில் உள்ள கே.பி.ஆர் ஐ.ஏ.எஸ் அகாடமியில் சிறப்பு பயிற்சி பெறும் மாணவர்களிடையே உரையாற்றினார்கள். அதில் வெற்றி பெற்ற மாணவர்கள் விடாமுயற்சியும் தன்னம்பிக்கையும் இருந்தால் இது போன்ற தேர்வுகளில் வெற்றி பெற்று சாதிக்கலாம் அதற்கு, இதுபோன்ற பயிற்சி தரும் அகடமியில் படித்து இங்கு உள்ள ஆசிரியர்களின் வழிகாட்டுதலுடன் தேர்வுகளை மேற்கொள்ளும்போது எளிதாக மாணவர்கள் வெற்றி பெறலாம் எனப் பேசினர்.

இதுகுறித்து கே.பி.ஆர் ஐ.ஏ.எஸ். அகாடமி பயிற்சி இயக்குனர் பழனி முருகன் கூறுகையில்: 2022-23 ஆம் ஆண்டுக்கான பயிற்சி வகுப்புகள் ஜூலை மாதத்தில் தொடங்க உள்ளது. மேலும் எங்களது பயிற்சி மையத்தில் வெளியூர் மாணவர்கள் மாணவிகள் தங்கி பயிற்சி பெறுவதற்கான வசதிகளும் உள்ளன. பட்டப்படிப்பு முடித்தவர்கள் மட்டுமல்லாமல், கல்லூரி படித்துக்கொண்டிருக்கும் மாணவர்களும் இப்பயிற்சியில் சேரலாம் என்றும் தெரிவித்தார்.