தலைமை கோட்டையை நோக்கி பேரணி நடத்தும் பாஜக

பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வலியுறுத்தி தலைமைச் செயலகத்தை நோக்கி பாஜக சார்பில் இன்று பேரணி நடைபெற்றுவருகிறது.

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு மே 21 ம் தேதி அதிரடியாக குறைத்தது. அதன்படி, டீசல் விலை லிட்டருக்கு 7 ரூபாயும், பெட்ரோல் விலை 9 ரூபாய் 50 காசுகளும் குறைக்கப்பட்டன.

இதுதொடர்பாக அண்ணாமலை கூறும்போது, மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை மீண்டும் குறைத்துள்ளது. ஒரு பக்கம் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து கொண்டே இருந்தாலும் கூட பிரதமர் மோடி விலையை குறைத்து இருக்கிறார். திமுக அரசு செயல் தன்மை இல்லாத அரசு. தேர்தல் அறிக்கையில் சொன்னதை செய்யாமல் இருக்கிறது. அரசியல் லாபத்திற்காக தேர்தல் அறிக்கையில் பெட்ரோல் டீசல் விலையை திமுக அரசு குறைப்பதாக அறிவித்திருந்தது.

இதனிடையே, தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலையை 72 மணி நேரத்திற்குள் குறைக்க வேண்டும். இல்லையெனில் கோட்டையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என பாஜக  தலைவர் அண்ணாமலை எச்சரிக்கை விடுத்திருந்தார். ஆனால், அவர் விடுத்திருந்த கெடு முடிவடைந்தும் முற்றுகை போராட்டம் நடைபெறாமல் இருந்தது.

இந்நிலையில், தமிழ்நாட்டில் மாநில அரசு பெட்ரோல் – டீசல் விலையை குறைக்காததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக சார்பில் இன்று பேரணி நடத்தி வருகிறது.  அதன்படி, அண்ணாமலை தலைமையில் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் இருந்து பேரணி துவங்கி, தலைமை செயலகத்தை நோக்கி பாஜக சார்பாக பேரணி தொடங்கியது.