கோவை சேர்ந்த மாணவிகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி

யுபிஎஸ்சி தேர்வின் இறுதி முடிவுகள் இன்று வெளியான நிலையில், கோவையைச் சேர்ந்த இரண்டு மாணவிகள்  தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்திய அளவில் சுவாதி ஸ்ரீ  42வது இடத்தையும், ரம்யா 46வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

மத்திய பணியாளர் தேர்வாணையம் ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் உள்ளிட்ட குடிமைப் பணிகளுக்கான, 749 பணியிடங்களை நிரப்புவதற்கு கடந்த ஆண்டு தேர்வுகள் நடைபெற்றன. முதன்மை எழுத்துத் தேர்வு, பிரதான எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு என மூன்று கட்டங்களாக தேர்வுகள் நடத்தப்பட்டன. அதன் முடிவுகளை மத்திய பணியாளர் தேர்வாணையம் அதன் அதிகாரப்பூர்வ இணையளத்தில் இன்று வெளியிட்டுள்ளது. இதில் தமிழகத்தில் இருந்து கோவையை சேர்ந்த இரண்டு மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

யுபிஎஸ்சி தேர்வு ஏழுதியவர்களில் 685 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. இந்தத் தேர்வில் இந்திய அளவில் உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த சுருதி சர்மா முதல் இடத்தையும், தமிழகத்தை சேர்ந்த சுவாதி ஸ்ரீ 42-வது இடத்தையும், ரம்யா 46வது இடத்தையும், பிடித்துள்ளனர். தேர்வில் வெற்றிபெற்றவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

உதகையில் பள்ளிப் படிப்பை முடித்த சுவாதி ஸ்ரீ, தஞ்சாவூரில் உள்ள ஆர்விஎஸ் வேளாண்மை கல்லூரியில் பி.எஸ்.சி அக்ரி படித்துள்ளார். முதல் முறை யுபிஎஸ்சி தேர்வெழுதியபோது பிரதானத் தேர்வில் தேர்வாகாத சுவாதி ஸ்ரீ, இரண்டாவது முறை முயற்சியில் இந்திய அளவில் 126-வது இடம் பிடித்து ஐஆர்எஸ் பதவிக்கு தேர்ச்சியடைந்துள்ளார். 3வது முறையாக எழுதிய யுபிஎஸ்சி தேர்வில், இந்திய அளவில் 42வது இடம் பிடித்துள்ளார்.

தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வீட்டையும் பார்த்தும், யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சியும் பெற்றுள்ளார். கோவை காட்டூர் பகுதியை சேர்ந்த ரம்யா இந்திய அளவில் 46வது இடத்தையும், தமிழக அளவில் 2வது இடத்தையும் பெற்றுள்ளார். இவருக்கு தந்தை இல்லை, வேலை பார்த்துக்கொண்டே, பள்ளிப் படிப்பையும் கல்லூரிப் படிப்பையும் முடித்தார். கோவையில் படித்த இவர் தனியார் கல்லூரியில் EEE முடித்துள்ளார்.