ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சார்பில் புகையிலையின் தீமைகளை விளக்கும் ‘ஃபிளிப்புக்’ வெளியீடு

உலக புகையிலை எதிர்ப்பு தினம் ஆண்டுதோறும் மே 31 ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. புகையிலை குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தும் பொருட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் புற்றுநோய் துறை சார்பில் புகையிலையின் தீமைகளை விளக்கும் டிஜிட்டல் பிளிப்புக் வெளியிடப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் மருத்துவமனையின் புற்றுநோய் துறை இயக்குனர் டாக்டர் குகன், எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் இணை நிர்வாக அறங்காவலர் சுந்தர் மற்றும் சிறப்பு விருந்தினராக கோவை போக்குவரத்து துணை ஆணையர் செந்தில்குமார் கலந்து கொண்டு பிளிப்புக்கை வெளியிட்டார்கள்.

ஒரு புத்தகம் போன்ற உணர்வை தரும் இந்த பிளிப்புக் தமிழ் மற்றும் ஆங்கிலம் என இரண்டு மொழியிலும் 15 பக்கங்களை கொண்டுள்ளது. மேலும், புகையிலையால் ஏற்படும் பாதிப்புகள், அறிகுறிகள், அதற்கான சிகிச்சைகள் குறித்த உரையாடல்கள், மற்றும் அனிமேஷன் வீடியோவும் இதில் அடங்கியுள்ளது. பிளிப்புக்கை அணுக (www.nosmokingsrior2022.digione.in) என்ற லிங்கை அணுகலாம்.

நிகழ்ச்சியில் மருத்துவர் குகன் பேசுகையில்: புகையிலையினால் பல மரணங்கள் ஏற்படுகிறது. இந்தப் பழக்கத்தினால் புற்றுநோய் போன்ற பல பாதிப்புகள் ஒருவருக்கு உண்டாகிறது. புகையிலையினால் வாழ்நாளில் தனது ஆயுட்காலத்தை ஒருவர் குறைத்துக் கொள்கிறார் என ஆய்வுகளின் முடிவுகள் கூறுகிறது.

2016 மற்றும் 2017 இல் நடத்திய ஆய்வின் படி இந்தியாவில் 3 அல்லது 4 % புகைபிடிக்கும் பழக்கம் குறைந்துள்ளது. இந்தியாவில் தற்போது 26.7 மில்லியன் மக்கள் புகையிலையை பயன்படுத்துகின்றனர். இதனால் கிட்டத்தட்ட 20 லட்சம் மரணங்கள் ஆண்டுக்கு நிகழ்கின்றன என தெரிவித்தார்.

புகையிலை பற்றிய விழிப்புணர்வை உருவாக்கி, அதனைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்தியாவிலேயே முதல்முறையாக இந்த பிளிப்புக் என்ற புதிய முயற்சியை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையால் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்றார்.

புகையிலை பழக்கம் ஒருவரை போதை பழக்கத்திற்கு அடிமையாக வைக்கிறது என்றும், ஒருமுறை அதை பயன்படுத்த ஆரம்பித்தோம் என்றால், அதில் இருந்து விடுபடுவது மிகக் கடினம் எனவும் இணை நிர்வாக அறங்காவலர் சுந்தர் தெரிவித்தார். இதற்கான அறிவுரைகளை மருத்துவர்களிடம் இருந்து பெறும் வகையில் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, மக்களுக்கு உதவும் வகையில் பிளிப்புக் வெளியிடப்பட்டுள்ளது எனக் கூறினார்.

சிறப்பு விருந்தினர் புகையிலையினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து கூறுகையில்: புகையிலை மற்றும் புகையிலையினால் ஆன பொருட்களை பயன்படுத்துவது ஒருவரது உடலில் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும். இந்தப் புகை சுற்றியுள்ளவர்களுக்கும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

பொது இடத்தில் புகை பிடிக்கக்கூடாது போன்ற கட்டுப்பாடுகள் வந்த பின் இந்தப் பழக்கம் சற்று குறைந்துள்ளது. புகைபிடிப்பவர்கள் தங்களது குடும்பத்தை பற்றியும் யோசித்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

புகைப்பழக்கத்தினால் உடலுக்கு பாதிப்பு தான் ஏற்படுமே தவிர, எந்த நன்மையும் நிகழாது. ஆரம்பத்தில் இப்பழக்கம் சிறிய மகிழ்ச்சியை அளித்தாலும், காலப் போக்கில் இதுவே தொடர் பழக்கமாக மாறி, நீண்ட நாள் பாதிப்பை ஏற்படுத்தி விடும். இதனை ஒரு பேஷனாக மாற்றி, நமது கலாச்சாரத்திற்குள் கொண்டு வரக் கூடாது என்ற வேண்டுகோளையும் அவர் முன் வைத்தார்.

உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பல நச்சுப் பொருள்கள் இதில் கலந்துள்ளதால், அனைத்து உறுப்புகளையும் பாதிப்படையச் செய்கிறது. புற்றுநோயை உருவாக்கும் என அறிந்தும் அதனை பயன்படுத்துவது சரியானது அல்ல. உடல் ஆரோக்கியம் முறையாக இருந்தால் மட்டுமே நம்மால் நன்றாக இயங்க முடியும் என்றார்.

இளைஞர்கள் ஆரம்பத்தில் இது போன்ற பழக்கங்களுக்கு அடிமையாகி, பின்னாட்களில் போதை பொருள்களுக்கும் அடிமையாகி விடுகின்றனர். இதனால் அவர்களால் எதையும் சரியாக சிந்தித்து செயல்பட முடியாத நிலை ஏற்படுவதோடு, சில தவறான செயல்களிலும் ஈடுபடுகின்றனர். எனவே குடும்பத்தில் முக்கிய அங்கம் வகிக்கும் பெண்கள், தங்களது குடும்ப உறுப்பினர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடாத வண்ணம்
பார்த்துக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.

புகைப்பழக்கத்தில் இருந்து ஒருவரால் மீளவே முடியாது என நினைப்பது தவறு. மருத்துவர்களின் வழிகாட்டலுடன் இதில் இருந்து படிப்படியாக மீண்டு விடலாம் எனவும் அவர் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் டீன் மற்றும் இயக்குனர் டாக்டர் சுகுமாரன், எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் தலைமை நிர்வாக அதிகாரி ராம்குமார், அறுவை சிகிச்சை புற்றுநோய் நிபுணர் டாக்டர் கார்த்திகேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.