வெஸ்ட்னைல் வைரஸ் தமிழ்நாட்டில் பரவாமல் தடுக்க முயற்சி – மா.சுப்பிரமணியம்

கோவை மருத்துவமனையில் அதி தீவிர சிகிச்சை பிரிவு துவக்கம்

குரங்கம்மை நோய் தமிழகத்தில் இல்லை, பொதுமக்கள் யாரும் பயப்பட வேண்டாம் என, சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அதி தீவிர சிகிச்சை பிரிவை துவக்கி வைத்த தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் 15 பேருக்கு இலவச கண் கண்ணாடிகளை வழங்கினார். அதன் பின், அரசு மருத்துவமனையில் 110 கோடி ரூபாய் மதிப்பில் ஜைக்கா திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் புதிய கட்டிடப் பணிகளை பார்வையிட்டார்.

முன்னதாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் 2,099 படுக்கைகள் கொண்ட அதிதீவிர சிகிச்சை பிரிவுகள் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

அதனைத்தொடர்ந்து, கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 32 படுக்கைகளுடன் கூடிய அதி தீவிர சிகிச்சை பிரிவு (மே 30) திங்கள்கிழமை அன்று பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இதில் நவீன உபகரணங்களை கொண்ட சிகிச்சை பிரிவு இருக்கிறது. இது நோயாளிகளுக்கு மிகுந்த பயனை தரும், 12 படுக்கைகள் கொண்ட தனி தீவிர சிகிச்சை பிரிவில் தற்கொலை முயற்சி செய்யும் நோயாளிகளுக்கான தனி சிகிச்சை பிரிவு சி.எஸ்.ஆர் நிதியின் மூலம் தொடங்கப்பட்டுள்ளது.

ஜைக்கா நிதியில் கட்டப்படும் கூடுதல் கட்டிடப் பணிகள் நடப்பாண்டு இறுதிக்குள் முடிவடையும். நோயாளிகளின் தேவைக்கு ஏற்றவாறு, கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கட்டமைப்பு மேம்படுத்தப்படும் என்று தெரிவித்தார். மேலும், வெஸ்ட்னைல் வைரஸ் பாதிப்பு கேரளாவில் ஒருவருக்கு மட்டும் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்திற்கு நோய் பரவல் வராமல் தடுக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறை இணைந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. குரங்கம்மை நோயை பொறுத்தவரையில் இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ் போன்ற 12 நாடுகளில் பரவ தொடங்கியுள்ளது. வெளிநாடுகளில் இருந்து வருபவர்களை கண்காணிக்க அனைத்து சர்வதேச விமான நிலையங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

யூ.கே நாட்டிலிருந்து சென்னைக்கு வந்த விமான பயணி ஒருவரின் முகத்தில் கொப்பளம் இருந்தது. அதனால், அவருடைய ரத்த மாதிரி புனே ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதில் நெகட்டிவ் என முடிவுகள் கிடைத்துள்ளன. இதன்மூலம், தமிழகத்தில் குரங்கம்மை நோய் பாதிப்பு இல்லை என்று தெரியவந்துள்ளது. குரங்கம்மை நோய் குறித்த அறிகுறியோ, சந்தேகமோ பொதுமக்களுக்கு இருந்தால் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். மேலும், இந்த நோய் குறித்து பொதுமக்கள் யாரும் பயப்பட வேண்டாம் என்று அறிவுறுத்தினார்.

கோவையில் மருத்துவ சுற்றுலாவை மேம்படுத்த பல்வேறு ஆலோசனைகள் பெறப்பட்டுள்ளன. கோவை விமான நிலைய விரிவாக்க பணிகள் 70 சதவீதம் முடிவடைந்துள்ளன. அடுத்த இரண்டு ஆண்டுகளில் பணி முடிவடையும் போது மருத்துவ சுற்றுலா மேம்பாடு அடையும் என்று தெரிவித்தார்.