பூச்சி, நோய்க் கட்டுப்பாடுகள்

பருத்தி

சாறு உறிஞ்சும் பூச்சிகளான இலைப்பேன் தருமபுரி, விழுப்புரம், தேனி, சேலம் மாவட்டங்களில் மழைக்காலங்களில் அதிகம் தென்படுகின்றன. எனவே, இவற்றைக் கண்காணிக்க விவசாயிகள் மஞ்சள் ஒட்டும் பொறி 5 எண்ணிக்கை ஒரு ஏக்கருக்கு வைக்கவும். மேலும், மீன் எண்ணெய் சோப் 1 கிலோவை 40 லிட்டர் தண்ணீரில் கலந்து ஒரு தெளிக்கவும்.

பருத்தியில் சிவப்பு காய்ப் புழுவின் தாக்குதல் தென்பட்டால், விவசாயிகள் இனக் கவர்ச்சிப் பொறிகளை ஏக்கருக்கு 5 வைத்து அந்திப் பூச்சிகளைக் கவர்ந்து அழிக்கவும், பூச்சிகளின் நடமாட்டத்தைக் கண்காணிக்கவும்.

 

நிலக்கடலை

 

இலைச் சுருட்டுப் புழுவின் தாக்குதலைக் கட்டுப்படுத்த ஹெக்டேருக்கு ஒரு விளக்குப்பொறி வைத்து அந்திப் பூச்சிகளைக் கவர்ந்து அழிக்கவும். மேலும், சிவப்பு கம்பளிப் பூச்சியின் நடமாட்டத்தை கண்காணிக்கவும். தேவைப்பட்டால் வேப்பங்கொட்டை சாறு 5 சதம் நீரில் கலந்து தெளிக்கவும்.

இலைப் புள்ளிகளின் தாக்குதல்களைக் கட்டுப்படுத்த கார்பண்டாசிம் 200 கிராம் (அ) மான்கோசாப் 400 கிராம் (அ) குளோரோதலானில் 400 கிராமை சரியான விகிதத்தில் கலந்து தெளிக்கவும். தேவைப்பட்டால் 15 நாள்கள் கழித்து மறுபடியும் தெளிக்கவும்.

 

கரும்பு

இடைக் கணுப் புழுத் தாக்குதலைக் கட்டுப்படுத்த டிரைக்கோகிராமா கைலோனிஸ் முட்டை ஒட்டுண்ணியை நான்கு மாத பயிரில் தொடங்கி 15 நாள்கள் இடைவெளியில் ஏக்கருக்கு 1 சி.சி. என்றளவில் 6 முறை வெளியிடவும்.

 

முந்திரி

முந்திரியில் கொசு, ஈ தாக்குதல் பரவலாக காணப்படுகிறது. கொசு தாக்குதலை கட்டுப்படுத்த புரோமினோபாஸ் (0.05 சதம்) (அ) குளோர் பயிர்பாஸ் (0.05 சதம்) (அ) கார்பாரில் (0.1 சதம்) நீரில் கலந்து தெளிக்கவும்.