பஞ்சு விலை உயர்வு: சிறு நூற்பாலைகளில் உற்பத்தி நிறுத்தம்

பஞ்சு விலை உயர்வால் சிறு நூற்பாலைகளில் உற்பத்தி நிறுத்தப்படுவதாக தென்னிந்திய நூற்பாலைகள் சங்கம் அறிவித்துள்ளது.

இது குறித்த பத்திரிகை செய்தியில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் கடந்த ஐந்து மாதங்களாக வரலாறு காணாத பஞ்சு விலை உயர்வை சிறு நூற்பாலைகள் சந்தித்து வருகிறது. கடந்த ஜனவரி 2022-ல் 356 கிலோ கொண்ட ஒரு கண்டியின் விலை ரூ. 75,000/- ஆக இருந்தது.

தற்போது படிப்படியாக உயர்ந்து, இன்றைக்கு (மே 21)பஞ்சின் விலை சராசரியாக ரூ. 1,15,000 ஆக உள்ளது. அதேபோல் ஜனவரி 2022-ல் ஒரு கிலோ நூலின் விலை ரூ. 328 ஆக இருந்தது. இன்றைக்கு (மே 21) ஒரு கிலோ நூலின் விலை ரூ. 399 ஆக உள்ளது.

இதனை கணக்கிடும் போது, சிறு நூற்பாலைகளுக்கு ஒரு கிலோவிற்கு ரூ. 50 முதல் ரூ.60 வரை நஷ்டம் ஏற்படுகிறது.

அபரிமிதமான பஞ்சு விலை உயர்வுக்கு, இவ்வாண்டு மிகவும் குறைந்த பருத்தி உற்பத்தியே காரணம். நாட்டின் பருத்தி உற்பத்தியின் விளைச்சலை துல்லியமாக அளவிடுவதற்கு, அரசாங்கத்திடமோ, தனியாரிடமோ எவ்வித சரியான புள்ளி விவரங்கள் இல்லை.

பருத்தி சீசன் ஆரம்பித்தவுடன், பெரிய பஞ்சு வியாபாரிகளும், பன்னாட்டு நிறுவனங்களும் அதிக அளவில் பஞ்சை கொள்முதல் செய்து இருப்பு வைத்துக் கொண்டார்கள்.

மேலும், வெளிநாட்டிற்கும் பஞ்சு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. பஞ்சு விலை கடுமையாக உயர்ந்து விட்டதால், எங்களது உறுப்பினர்களிடம் பஞ்சு கொள்முதல் செய்வதற்கு நடப்பு மூலதனத்தில் பற்றாக்குறை ஏற்பட்டு, பஞ்சை கொள்முதல் செய்ய முடியவில்லை.

பல சிறு நூற்பாலைகளில் நடப்பு மூலதனம் முற்றிலும் கரைந்து உள்ளது. இந்த அசாதாரண சூழ்நிலையில், தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் அனைத்து உறுப்பினர்களுடன் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

அதில் பஞ்சு மற்றும் நூல் விற்பனை விலையில் சீராகும் வரை ஆலைகளை இயக்குவதில்லை எனவும் இனி பஞ்சு கொள்முதல் செய்வதில்லை எனவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.