இனி வீட்டிலிருந்தே வேலை செய்வதற்கான வாய்ப்புகள் அதிகம் – ஆய்வில் தகவல்

கொரோனா பெருந்தொற்று காரணமாக பொது முடக்கம் ஏற்பட்டதால் பல நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்தே பணியாற்ற அறியுறுத்தி அவர்களுக்கான வசதிகளை செய்து கொடுத்திருந்தனர். ஆனால் தற்போது கொரோனா தொற்று குறைந்து அனைவரும் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர். பொருளாதாரமும் மெல்ல மெல்ல மீள ஆரம்பித்துள்ளது.

தற்போது கொரோனா தொற்று குறைந்துள்ள நிலையில் ஊழியர்களை மீண்டும் வேலைக்கு வரும்படி பல நிறுவனங்கள் அறிவித்துள்ளன. ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக வீட்டில் இருந்தே நிறுவனத்திற்கு தேவையான பணிகளை செய்ததால் தங்களுக்கு நிரந்தரமாக வீட்டில் இருந்து பணி செய்ய அனுமதி வழங்க வேண்டும் என்று ஊழியர்கள் கோரிக்கை விடுத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சமீபத்தில் CIEL HR என்ற நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில், 50% க்கும் அதிகமான நிறுவனங்கள் ஊழியர்கள் தங்கள் விருப்பத்திற்கேற்ப வீட்டில் இருந்தே பணிபுரியலாம் என்ற ஆப்ஷனை வைத்திருப்பதாக தெரிய வந்துள்ளது. மேலும், சில நிறுவனங்கள் வீட்டிலிருந்து வேலை புரியும் நிரந்தரப் பணியாளர்களையும் பணியமர்த்துவதாக அந்த ஆய்வு குறிப்பிடுகிறது.

கொரோனா பரவலின் காரணமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கினால், வீட்டில் இருந்தே பணியாளர்கள் வேலை பார்க்கலாம் என்ற நிலை இனியும் தொடரலாம் என ‘தி எகானாமிக் டைம்ஸ்’ பத்திரிக்கையுடன் பேசிய பல நிறுவனங்களின் நிர்வாகிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

மொண்டலெஸ் (Mondelez), டாடா ஸ்டீல் போன்ற சில நிறுவனங்கள் நிரந்தரமாக வீட்டிலிருந்து பணிபுரியவதற்கு ஊழியர்களை பணியமர்த்துவதாக தெரிவித்துள்ளது

ஐடி நிறுவனங்கள் தவிர மாருதி சுசுகி, ஐடிசி உள்ளிட்ட நிறுவனங்களும் தங்களின் ஊழியர்களுக்கு வீட்டில் இருந்தபடியே வேலை செய்வதற்கான வாய்ப்புகளை வழங்கியுள்ளது.

ஒரு நிறுவனத்தில் ஏற்கனவே பணியில் இருந்து WFH முறையில் பணிபுரியும் ஊழியர்களின் சம்பளத்தில் எந்த மாற்றமும் இல்லை என்றாலும், புதிதாக பணிக்கு சேர்ந்து நிரந்தரமாக வீட்டிலேயே இருந்து பணியாற்றுபவர்களுக்கு 15% குறைவான சம்பளம் கிடைப்பதாக CIEL HR சேவைகளின் தலைமை நிர்வாகி ஆதித்ய மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

புதிதாக பணியமர்த்தப்பட்டவர்களில் 10% பேர் நிரந்தரமாக வீட்டில் இருந்தே பாணியாற்றுவதாகவும் இந்த கணக்கெடுப்பு கூறுகிறது.

சக ஊழியர்களுடன் சிறப்பாக பணியாற்றவும், வணிகம் சார்ந்த செயல்பாடு மற்றும் நிறுவனத்தின் கொள்கைகளை ஊழியர்கள் பின்பற்ற வேண்டும் என்பதால் குறிப்பிட்ட அளவில் மட்டுமே வீட்டில் இருந்து பணிபுரிவதை பரிசீலிக்கிறோம் எனவும், அலுவலகம் மற்றும் WFH ஊழியர்களுக்கு இடையே ஊதிய வேறுபாடு இல்லை எனவும் குறிப்பிடுகிறார் மொண்டெலெஸ் நிறுவனத்தின் ஹெச்.ஆர் மற்றும் தலைவர் ஷில்பா வைட்.

கடந்த 2020 ஆம் ஆண்டு டாடா ஸ்டீல் நிறுவனம் ஊழியர்கள் வேகமாகவும் துடிப்பாகவும் பணியாற்றுவதற்காக (Agile Working Model) என்ற முறையை அறிமுகப்படுத்தியது. இதன் கீழ் இரண்டு முறைகள் உள்ளன. ஒன்று, ஊழியர்கள் வீட்டிலிருந்தே முழுமையாக வேலை செய்யலாம். இதில் பணியாளர்கள் இந்தியாவில் எந்த இடத்திலிருந்தும் பணி செய்து கொள்ளலாம். மற்றொன்று, குறிப்பிட்ட இடத்தில் இருந்து, ஒரு வருடத்தில் எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் வீட்டிலிருந்து வேலை செய்யலாம்.

வணிகத் தேவைகளின் அடிப்படையில் இரண்டு வகையான பதவிகளுக்கும் ஆட்களை பணியமர்த்துவதாகவும், இவர்களின் சம்பளத்தில் எவ்வித வேறுபாடும் இல்லை என்றும் டாடா ஸ்டீல் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

நடுத்தர அளவிலான ஐடி/ஐடிஇஎஸ் (IT/ITeS) வங்கி, உள்கட்டமைப்பு, சில்லறை வணிகம், இரசாயனம், தளவாடங்கள் மற்றும் உற்பத்தித் துறைகளில் உள்ள 50%க்கும் அதிகமான ஊழியர்கள் அலுவலகங்களில் இருந்து பணிபுரிகின்றனர்.

பெரும்பாலான பெரிய நிறுவனங்களில் குறிப்பிட்ட சில பதவிகளுக்கு நிரந்தரமாக வீட்டில் இருந்து வேலை செய்யும் வாய்ப்பு வழங்கப்படுகிறது. இதர பிற நிறுவனங்களில் ஊழியர்கள் அலுவலகத்தில் வேலை செய்வதற்கும் வீட்டிலிருந்து வேலை செய்வதற்கும் இடையில் தங்கள் நேரத்தை பிரித்துக் கொள்ள உதவும் ஹைபிரிட் முறை பயன்படுத்தப்படுகிறது எனவும் இந்த ஆய்வு தெரிவிக்கிறது.