வேரை அறுத்தாலும் மரங்கள் வெறுப்பை உமிழ்வதில்லை!

மூங்கில் காடுகளே வண்டு முனகும் பாடல்களே… தூர சிகரங்களில் தண்ணீர் துவைக்கும் அருவிகளே… என்னங்க பாட்டு பாடிட்டுருக்கீங்க தானே கேக்குறீங்க? அங்க போனால் பாட்டு தானாகவே வரும். எங்கே என்று நீங்க கேட்கலாம்? வாங்க பார்க்கலாம்.

காடு என்றால் யாருக்கு தான் பிடிக்காது, இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுலா என்றால் அது பொக்கிஷத்தை தேடிச்செல்வது போன்றது தான்.  குளிர்ந்த காற்றில், தண்ணீர் அருவியில் நனையும் பறவைகளை போல், நாமும் நனைந்து ரசித்த படி காட்டிற்குள் செல்லலாம் வாங்க. அப்படிப்பட்ட இயற்கை வனப்போடு நம்மை ஆரத்தழுவி அணைத்து வரவேற்கிறது கோவையிலுள்ள பரளிக்காடு.

மேற்குத் தொடர்ச்சி மலையில் இன்னும் இயற்கை மாறாமல் இருக்கும் ஒரு மலை கிராமங்களில் ஒன்று பரளிக்காடு. அங்குள்ள பூச்சிமரத்தூர் சுற்றுலா தலத்திற்கு போனால் உடலும், மனமும் புத்துணர்ச்சி கிடைக்கும்.  வெறும் ரூ. 500 இருந்தால் போதும் பரளிக்காட்டையே சுற்றிபார்த்துவிடலாம். அந்த சுற்றுலா தலத்தில் தங்கியும்,  ஒவ்வொரு இடமாக பார்க்கும் வசதிகளும் உள்ளன.

கோவை  மாவட்டத்தில் இருந்து  சுமார் 66 கி.மீ தொலைவில், இந்த பரளிக்காடு சுற்றுலாத்தலம் அமைந்துள்ளது. காரமடை, மேட்டுப்பாளையம், பகுதிகளை கடந்து சென்றாலும், இந்த இடத்தை எளிதாக அடைந்திடலாம். சுற்றுலாத்தலமான பரளிக்காடு, பில்லூர் அணைக்கு மிகவும் அருகில் அமைந்துள்ள பகுதி.  அதனால், சுற்றுலாவுக்கு  வரும் பொதுமக்கள் பலரும், பில்லூர் ஆற்றில் பரிசல் பயணம் மேற்கொள்வது மிகவும் பிரபலமானது. பரிசலில் பயணம் செய்தவாறே இயற்கை காட்சிகளை பார்த்து ரசிக்கலாம்.

வாகன புகை இல்லாமலும், மாசு படியாமலும்  மிகவும் சுத்தமான காற்று, அடர்ந்து வளர்ந்த மரங்கள், வளைந்து நெளிந்து ஓடும் ஆறு, எங்கும் பார்த்தாலும் பச்சைப் பசேல் என தெரியும் காட்சிகள், யாருக்கும் வஞ்சம் நினைக்காத பறவைகள் மற்றும் விலங்குகள்  என்று பரளிக்காடு பூச்சிமரத்தூர் சுற்றுலா தலத்தில் இயற்கை நிரம்பிக் கிடக்கிறது. அதைவிட அங்கு வாழும் மண் மணம் மாறாத மக்கள் இயற்கையோடு இணைந்து, பரளிக்காட்டை போற்றி பாதுகாத்து வருகின்றனர்.

நீங்கள் பூச்சிமரத்தூர் சுற்றுலா தலத்திற்கு செல்ல வேண்டும் என்றால் வனத்துறையினர் ஒப்புதல் பெற வேண்டும். தவிர, அங்கு சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டுமே சுற்றுலாவுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. ஒருவேளை அங்கு 20 பேருக்கு மேற்பட்டவர்கள் சுற்றுலா போக நினைத்தால், சிறப்பு அனுமதியுடன் வார நாட்களில் அனுமதிக்கப்படுகின்றனர். அதனால், முழுமையான திட்டமிடல் இருந்தால் மட்டுமே பரளிக்காடு பூச்சிமரத்தூர் சுற்றுலா தலத்திற்கு போக முடியும் என்பதை நினைவில் கொள்க.

பூச்சிமரத்தூருக்கு செல்ல பேருந்துகள் போதும் அளவில்  இல்லை. ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டும் தான் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதனால் பேருந்தில் செல்வது மிகவும் அரிது. இரு சக்கர வாகனங்களில்  செல்ல அனுமதி இருந்தாலும், வனவிலங்குகளுக்கு அதனால் தொந்தரவு ஏற்படக்கூடும். இதன் காரணமாக மலைப்பிரதேசங்களுக்கு ஏற்ற வாகனங்களில் சென்று வருவதே சரியானதாக  இருக்கும்.

பூச்சிமரத்தூர் பரிசல் துறைமுகத்தில் இருந்து சுற்றுலா தொடங்குகிறது. அங்கு வரும் பயணிகளுக்கு பரளிக்காடு மலைவாழ் மக்கள் மற்றும் வனத்துறையினர் சுக்கு காப்பி கொடுத்து வரவேற்பு தெரிவிப்பார்கள். அதை தொடர்ந்து பரிசலில் ஏறி பில்லூர் ஆற்றில் மிதந்து சென்றவாறே சுற்றுலாவை தொடங்கலாம்.

இரண்டு மணிநேர பரிசல் பயணத்திற்கு பிறகு, மலையடிவாரத்தில் பயணிகள் ஓய்வெடுக்கலாம். அதை தொடர்ந்து அந்த வனப்பகுதியில் வசிக்கும் மலைவாழ் மக்களின் குடியிருப்புகளை பார்வையிடலாம். அங்கேயே மதிய உணவு சுடச்சுட பரிமாறப்படுகிறது. இதை மலைவாழ் மக்களே தயார் செய்கின்றனர்.

மதிய உணவு முடித்தவுடன் காரமடைக்கு செல்லும் வழியில் உள்ள ஆற்றுக்கு பயணிகள் அழைத்துச் செல்லப்படுகின்றனர். அந்த ஆற்றில் பயணிகள் குளிக்கவும் அனுமதிக்கப்படுகின்றனர். அடர்ந்த வனப்பகுதியில் இருந்து தண்ணீர் வருவதால் இதை மூலிகை ஆறு எனவும் அப்பகுதிவாசிகள் குறிப்பிடுகின்றனர். அதற்கு பிறகு பயணிகள் பரிசலில் பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்படுகின்றனர்.

இங்கேயே சில நாட்கள் தங்கி சுற்றிப்பார்க்க விரும்புபவர்களுக்கு டிரெக்கிங் செல்லும் வசதியும் உள்ளது. ஒருநாள் சுற்றுலாவுக்கும், சில நாட்கள் தங்கி சுற்றிபார்ப்பதற்கும் தனித்தனியாக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஐந்து வயதுக்கு கீழுள்ள குழந்தைகளுக்கு கட்டணம் கிடையாது. பூச்சிமரத்தூர் சுற்றுலாத் தலத்தில் மொத்தம் 5 தங்கும் விடுதிகள் மட்டுமே உள்ளது. ஒவ்வொரு அறைகளிலும் 8 பேர் வரை தங்கலாம். இந்த சுற்றுலா முழுக்க முழுக்க வனத்துறையினரின் கண்காணிப்பு கீழ் நடப்பதால் குடும்பத்துடன் தைரியமாக வரலாம்.

 

Story: RADHA