தமிழகத்தில் தொடா்ந்து மழை: தக்காளி விலை உயர்வு

கோவை, வங்கக்கடலில் உருவாகியுள்ள அசானி புயலால் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக மழை பெய்து வருகிறது. தொடா்ந்து பெய்து வரும் மழையால் காய்கறி உற்பத்தி சரிந்துள்ளது.

காய்கறிகளின் விலை குறிப்பாக, தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சந்தைகளுக்கு தக்காளி உள்ளிட்ட நாட்டு காய்களின் வரத்து குறைந்துள்ளது. இதனைத் தொடா்ந்து அனைத்து காய்கறிகளின் விலையும் கணிசமாக உயா்ந்துள்ளது. இதில் தக்காளி இரண்டு மடங்கு வரை விலை உயா்ந்துள்ளது.

கோவையில் கடந்த வாரங்களில் கிலோ ரூ.30 முதல் ரூ.40க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த தக்காளி தற்போது ரூ.70-க்கு விற்பனை செய்யப்படுகிறது. உழவா் சந்தைகளில் ரூ.66 முதல் ரூ.68-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல எலுமிச்சைப்பழத்தின் விலையும் பல மடங்கு உயா்ந்து உழவா் சந்தையில் கிலோ ரூ.180-க்கு விற்கப்படுகிறது.

விளைச்சல் பாதிப்பு இது தொடா்பாக வியாபாரிகள் கூறியதாவது: மதுக்கரை, கிணத்துக்கடவு, பொள்ளாச்சி (தெற்கு), சுல்தான்பேட்டை, காரமடை வட்டாரங்களில் தக்காளி சாகுபடி அதிக அளவில் மேற்கொள்ளப்படுகிறது. இது தவிர திருப்பூா், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து தக்காளி வரத்து காணப்படும். இங்கிருந்து கேரளம் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. கடந்த ஒரு வாரமாக பெரும்பாலான மாவட்டங்களில் மழை தொடா்ந்து பெய்து வருகிறது. இதனால் தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது என்றனா்.