மொழியை கற்பது கட்டாயமாக இருக்கக்கூடாது

-பாரதியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் பேச்சு

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் 37வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டனர். முன்னாள் இஸ்ரோ தலைவர் சிவன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

இந்நிகழ்வில் பேசிய தமிழ்நாடு உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி பேசுகையில், சிவன் மற்றும் நானும் தமிழ் வழி கல்வியில்தான் படித்தோம். தமிழ் மொழியில் படித்துதான் இந்திய அளவில் சிவன் உயர்ந்துள்ளார், நான் முனைவர் பட்டம் வரை பெற்று இன்று அமைச்சராக உள்ளேன். நாங்கள் எந்த மொழிக்கும் எதிரிகள் அல்ல, இந்தி மொழிக்கும் எதிரானவர்கள் அல்ல. மொழி கற்பது வாய்ப்பாக தான் இருக்க வேண்டுமே தவிர கட்டாயமாக இருக்கக்கூடாது என தெரிவித்தார்.

மேலும், நாங்கள் இந்தியை எதிர்க்கவில்லை, இந்தி திணிப்பை தான் எதிர்க்கிறோம் எனவும் கூறினார். மேலும், உலகத்தோடு உரையாட ஆங்கிலமும், எங்களுக்குள் உரையாட தமிழும் போதும் என்கிற போது இந்தி எதற்கு, இரண்டு மொழிகள் போதுமானது. மூன்றாவது மொழி படிப்பது விருப்பமாக தான் இருக்க வேண்டும் என்றார்.

புதிய கல்வி கொள்கையில் உள்ள நல்ல அம்சங்களை நாங்கள் ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறோம் எனவும் ஆனால் மும்மொழி கொள்கையை ஏற்றுக் கொள்ள முடியாது. தமிழ்நாட்டிற்கு என தனி கல்வி கொள்கையும் மொழி கொள்கையும் இருக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். ஆளுநர் இந்த மாநிலத்தின் உணர்வுகளையும் மாணவர்களின் உணர்வுகளையும் புரிந்து கொண்டு எங்களுக்கு உதவுவார் என நம்புகிறேன் என அவர் தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து, மாணவர்களுக்கு பட்டங்களையும் பதங்கங்கங்கையும் வழங்கிய ஆர்.என்.ரவி சிறப்புரையாற்றினார்.

அவர் பேசும்போது, பட்டம் பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்து கொள்கின்றேன் என தமிழில் வாழ்த்து கூறி, பட்டம் பெற்றவர்கள் புதிய வாழ்க்கையில் நுழைய போகின்றீர்கள் எனவும் நமது நாடு புதிய நம்பிக்கையுடன் பயணித்து கொண்டு இருக்கிறது எனவும் தெரிவித்தார். கடந்த 7 ஆண்டுகளில் மருத்துவ கல்லூரிகளின் எண்ணிக்கை இரட்டிப்பாக்க பட்டுள்ளதாகவும் மாவட்டத்திற்கு ஒரு கொண்டு வர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தவர். ஆயஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் மக்களின் உடல்நிலையில் இந்த அரசு கவனம் செலுத்துகின்றது எனவும், மத்திய அரசு எந்த மொழியையும் திணிக்கவில்லை எனவும் இந்தியையும் திணிக்கவில்லை என தெரிவித்தார். மேலும், புதிய கல்விக்கொள்கை தாய்மொழி கல்வியை ஊக்கப்படுத்துகிறது எனவும் மாநில மொழிகளிலேயே நடத்தப்படுகின்றது. பிரதமர் நீதிமன்றங்களில் வழக்காடு மொழியாக தாய்மொழியை கொண்டு வர பேசி வரும் நிலையில் மொழி திணிப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை என தெரிவித்தார்.

தமிழ் மொழி சிறந்த உயர்ந்த மொழி என கூறிய ஆளுநர், பிறநாடுகளில் உள்ள பல்கலைகழகங்களில் தமிழ் இருக்கை அமைத்து இருப்பதை போல, இந்தியாவில் உள்ள பிற பல்கலைகழகங்களிலும் இருக்கை அமைக்கப்பட வேண்டும் என கேட்டுகொண்டதோடு சுப்ரமணிய பாரதி பெயரில் பனராஸ் பல்கலையில் இருக்கை அமைக்கப்பட்டுள்ளதை குறிப்பிட்டார். எல்லா மொழிகளும் வளர ஊக்கவிக்கப்படும் எனவும் புதிய கல்விகொள்கையால் தமிழ்மொழி பிற மாநிலங்களில் மூன்றாவது மொழியாக கற்பிக்க வாய்ப்பாக இருக்கும் என அப்போது அவர் தெரிவித்தார்.