செவிலியர்களின் தன்னலமற்ற சேவைக்கு ஓர் அங்கீகாரம்!

– பி.எஸ்.ஜி மருத்துவமனையில் செவிலியர் தின கொண்டாட்டம்

பி.எஸ்.ஜி மருத்துவமனையில் செவிலியர் தினம் வியாழக்கிழமை அன்று கொண்டாடப்பட்டது.

புளோரன்ஸ் நைட்டிங்கேலின் பிறந்தநாளைக் குறிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மே 12 ஆம் தேதி, சர்வதேச செவிலியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.

நோய்க்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவருக்கு அடுத்து, நோயாளிகளை பராமரிக்கும் பணியில் ஈடுபடுவது செவிலியர்களே. அவர்களின் உழைப்பு, அர்பணிப்பு மற்றும் உயிர்களைக் காப்பாற்றுவதில் பங்களிப்பு ஆகியவற்றை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே இந்நாள் கொண்டாடப்படுகிறது.

இந்நாளை கொண்டாடும் வகையில் பி.எஸ்.ஜி மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்விற்கு மருத்துவமனையின் செவிலியர் துறை தலைவர் அனுராதா வரவேற்புரை ஆற்றினார்.

மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர் ஜெ.எஸ். புவனேஷ்வரன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசுகையில்: மருத்துவத் துறையின் இரண்டு கண்களாக உள்ளவர்கள் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் தான் எனக் கூறிய அவர், செவிலியர் துறையின் பங்களிப்பு பற்றி எடுத்துக் கூறினார். தன்னலம் இல்லாமல் பிறருக்காக சேவை செய்பவர்கள் செவிலியர்கள் என்றும் பாராட்டினார்.

இதனைத் தொடர்ந்து சிறந்த செவிலியர்களுக்கான விருதுகள் (Best Clinical Nurses Award) வழங்கப்பட்டன.
பின்னர், செவிலியர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் பி.எஸ்.ஜி. மருத்துவக் கல்லூரியின் முதல்வர் சுப்பாராவ், மருத்துவமனையின் புற்றுநோய் துறையின் இயக்குனர் பாலாஜி, மருத்துவ இயக்குனர் ராஜ்குமார் மற்றும் செவிலியர்கள் கலந்து கொண்டனர்.