‘கிங்’ ஆவாரா ?  ‘கிங் மேக்கர்’

அரசியல் வியூகம் வகுப்பதில் வெற்றிக் கொடியை நாட்டியுள்ள பிரசாந்த் கிஷோரின், அரசியல் சநீநீதியாக மாறும் முயற்சி வெற்றியை பெறுமா என்பதை அரசியல் நோக்கர்கள் கூர்ந்து கவனித்து வருகின்றனர்.

இந்தியாவில் அரசியல் வியூகம் வகுப்பதில் முன்னணியில் இருப்பவர் ஐபேக் நிறுவனர் பிரசாந்த் கிஷோர்.  இவர் பல தேர்தல்களில் தேசிய, மாநில அரசியல் கட்சிகளுக்கு வேலை செய்து பெரும்பாலும் வெற்றியையே பெற்றுள்ளார். எந்த தேர்தலாக இருந்தாலும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்க வாய்ப்புள்ள கட்சிகளுக்கு மட்டுமே வேலை செய்யும் பிரசாந்த் கிஷோர், மூன்றாவது அல்லது வளரும் கட்சிகளுக்கு வேலை செய்வதில்லை.

2012 குஜராத் பேரவைத் தேர்தல், 2014 மக்களவைத் தேர்தலில் மோடிக்கும், 2015 பீகார் பேரவைத் தேர்தலில் நிதிஷ் குமாருக்கும், 2017 பஞ்சாப் தேர்தலில் காங்கிரஸுக்கும், 2019 ஆந்திர பிரதேச பேரவைத் தேர்தலில் ஜெகன் மோகன் ரெட்டிக்கும், 2020 தில்லி பேரவைத் தேர்தலில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும், 2021 பேரவைத் தேர்தலில் மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜிக்கும்,  தமிழகத்தில் மு.க.ஸ்டாலினுக்கும் தேர்தல் பணியாற்றி வெற்றியை தேடித் தந்தார்.

2017 உ.பி. பேரவைத் தேர்தலில் காங்கிரஸுக்கு வேலை செய்து தோல்வி அடைந்தார். அத்தேர்தலில் 100 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் 8 தொகுதிகளில் மட்டும் வெற்றிபெற்றது. இவர் தில்லியில் முதல்வராக இருந்த ஷீலா தீட்சித்தை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தினார். ஆனால், கடைசி நேரத்தில் காங்கிரஸ் தலைமை சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணிக்குச் சென்றது.

மேலும், தீட்சித்தை முன்னிறுத்தியதால் மாநில காங்கிரஸ் தலைவராக இருந்த ரீட்டா பகுகுணா ஜோஷி, பாஜகவுக்கு சென்றுவிட்டார்.  இது பிரசாந்த் கிஷோரின் வியூகத்துக்கு மிகப்பெரிய பின்னடைவாக மாறி, அது காங்கிரஸ் கட்சியின் வாக்கு வங்கியை பெரிதும் பாதித்தது.

அதேபோல 2019 பேரவைத்தேர்தலில் உத்தவ் தாக்கரே மகன் ஆதித்ய தாக்கரேவை ஒர்லி தொகுதியில் போட்டியிடும் யோசனையை கொடுத்தது பிரசாந்த் கிஷோர். அந்த குடும்பத்தைச் சேர்ந்த யாரும் தேர்தலில் போட்டியிட்டு வரும் வழக்கம் இல்லாத சூழலில் ஆதித்ய தாக்கரேவை தேர்தலில் போட்டியிடச் செய்து முதல்வர் வேட்பாளர் போல தோற்றம் கொடுத்ததால் சிவசேனா கூட்டணி பலவீனப்பட்டதுடன், சிவசேனாவின் வெற்றி விகிதமும் பாதிக்கப்பட்டது. இவ்வாறாக வியூகம் அமைப்பதில் பெரிய அளவில் வெற்றியும், சிறிய அளவில் தோல்வியும் கண்டவர் பிரசாந்த் கிஷோர்.

அதன்பிறகு, 2018-இல் நிதிஷ்குமாரின் ஜே.டி.யு கட்சிக்கு பிராமணர் மற்றும் உயர் சாதியினர் மத்தியில் எதிர்ப்பு இருந்ததால் அதை நீர்த்து போக செய்ய பிரசாந்த் கிஷோரை கட்சியில் சேர்த்துக்கொள்ளும்படி அமித்ஷா, நிதிஷ்குமாரிடம் கேட்டுக்கொண்டார். அதன்படி ஜேடியு துணைத் தலைவராக  பதவியேற்றுக்கொண்டார் பிரசாந்த் கிஷோர்.

இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு 2020-இல் சி.ஏ.ஏ.வை நிதிஷ்குமார் ஆதரிப்பதாகவும், அதை எதிர்த்தும் பிரசாந்த் கிஷோர் போராடினார். இதன் காரணமாக ஜேடியு எம்பி பவன்குமார் வர்மாவுடன் சேர்த்து பிரசாந்த் கிஷோரையும் நீக்கினார் நிதிஷ்குமார். இதற்கு பீகாரில் ஒருவர் கூட எதிர்விளைவு செய்யவில்லை என்பது தான் உண்மை.

தொடர்ந்து அப்போதைய பஞ்சாப் முதல்வர் கேப்டன் அமரிந்தர் சிங்கின் அரசியல் ஆலோசகராக அமைச்சர் அந்தஸ்தில் பஞ்சாப்பில் பொறுப்பு வகித்தார் பிரசாந்த் கிஷோர். இவருக்கும், அமரிந்தர் சிங்குக்கும் சரியான உறவு இல்லை. மேலும், சித்துவுடன் நெருங்கிய உறவாக இருந்தார் பிரசாந்த் கிஷோர். சித்துவை மாநில காங்கிரஸ் தலைவராக்க ராகுல் காந்திக்கு ஆலோசனை கொடுத்தார்.

மாநிலத் தலைவர் பதவியைக் கைப்பற்றிய சித்து, சட்டப்பேரவைக் கட்சித் தலைவர் பதவியையும் கைப்பற்றி முதல்வர் பதவியில் அமரும் முயற்சியில் இறங்கினார். சித்து முதல்வராக பதவியேற்பார் என்ற சூழ்நிலை வந்தபோது, சித்துவை முதல்வராக ஆக்கினால் கட்சியைவிட்டு விலகுவேன் என்றும், சித்துவை பாகிஸ்தான் ஆதரவாளராகவும் தோற்றம் கொடுக்கும் முயற்சியில் அமரிந்தர் சிங் இறங்கியதால் சித்துவுக்கு பதிலாக சரண்ஜித்சிங் சன்னியை முதல்வராக்கினார் ராகுல் காந்தி.

பேரவைத் தேர்தல் வருவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பு, சித்துவை முதல்வராக மாற்றுவதற்கான வியூகத்தை வகுத்தார் பிரசாந்த் கிஷோர். ஆனால், முதல்வரான சரண்ஜித் சிங் சன்னி, அரசியல் வியூக வகுப்பாளர்  ஜான் ஆரோக்கியசாமியை பயன்படுத்தி தன்னை வலுப்படுத்தி தன்னையே முதல்வர் வேட்பாளராக காங்கிரஸ் தலைமையை அறிவிக்கச் செய்தார். இதில் பிரசாந்த் கிஷோரின் வியூகம் தோல்வி அடைந்தது. காங்கிரஸ் கட்சிக்குள் கோஷ்டி அரசியல் செய்யும் மனநிலையில் இருப்பவர் பிரசாந்த் கிஷோர் என்பது பிரசாந்த் கிஷோரின் பஞ்சாப் நடவடிக்கை மூலம் வெட்ட வெளிச்சமானது.

இப்படிப்பட்ட சூழலில் காங்கிரஸில் சேருவதற்கான முயற்சியில் பிரசாந்த் கிஷோர் இறங்கினார். சோனியா காந்தியும், பாஜகவை தோற்கடிக்க வேறுவழியில்லை என்பதால் பிராந்த் கிஷோரை சேர்த்துக்கொள்ளும் மனநிலையில் தான் இருந்தார். ஆனால், பிரசாந்த் கிஷோர், சோனியா காந்தியை தலைவராக பொறுப்பேற்கச் சொல்லி, தான் இரண்டாவது இடத்தில் இருப்பதற்கான முயற்சியில் இறங்கினார்.

குறிப்பாக ஒரு காலத்தில் காங்கிரஸில் தேசிய தலைமைக்கு அடுத்து அகமது பட்டேல் வகித்த பதவியில் (அகில இந்திய பொதுச்செயலர்- நிர்வாகம்) அமர ஆசைப்பட்டார் பிரசாந்த் கிஷோர். ராகுல் காந்தி, பிரியங்கா காந்தியை மீறி சோனியா காந்திக்கு அடுத்த பொறுப்பில் இருக்கும் முயற்சியில் பிரசாந் கிஷோர் இறங்கியதால் அவரின் முயற்சியை காந்தி குடும்பம் ரசிக்கவில்லை.

தேசிய அளவில் காங்கிரஸில் 2 வது இடத்தை கைப்பற்றினால் பிராமணரான தான், 2024 மக்களவைத் தேர்தலில் மோடிக்கு எதிராக பிரதமர் வேட்பாளராக களம் இறங்கலாம் என கணக்குப் போட்டு காய் நகர்த்தினார் பிரசாந்த் கிஷோர். தங்களது இடத்தை காலிசெய்துவிட்டு கட்சியைக் கைப்பற்றும் வகையில் கட்சிக்குள் பிரசாந்த் கிஷோர் நுழைவதை ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் விரும்பவில்லை. இதனால் பிரசாந்த் கிஷோருடன் காங்கிரஸ் ஒப்பந்தம் கைகூடாமல் போனது.

மேலும், ராகுல் காந்தியின் ஆதரவாளரான விருதுநகர் தொகுதி எம்.பி. மாணிக்கம் தாகூர், தெலுங்கானா மாநில காங்கிரஸ் தலைவர் ரேவணாத் ரெட்டி ஆகியோர் பிரசாந்த் கிஷோருக்கு எதிராக கருத்துத் தெரிவித்தனர். மூன்றாவது அணி கட்சிகளை காட்டி சோனியா காந்தியை, பிரசாந்த் கிஷோர் உளவியல் ரீதியாக மிரட்டியதாக காங்கிரஸ் கட்சியினர் குற்றஞ்சாட்டுகின்றனர். சோனியா காந்திக்கு மோடி மீது இருக்கும் வெறுப்பில் நீச்சல் அடிக்க விரும்பிய பிரசாந்த் கிஷோரின் முயற்சி முற்றிலும் தோல்வியில் முடிந்தது.

அதேபோல, காங்கிரஸுடன் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும்போதே தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியுடன் 2023 பேரவைத் தேர்தலில் பணியாற்ற பிரசாந்த் கிஷோர் ஒப்பந்தம் போட்டார். அக்கட்சியும், காங்கிரஸும் நேர் எதிரிகள் என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை. இவர், 2023 பேரவைத் தேர்தலில் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதிக்கு வேலை செய்துவிட்டு 2024 மக்களவைத் தேர்தலில் பலவீனமாக காங்கிரஸையும், தெலுங்கானா ராஷ்டிரிய சமிதியையும் ஒரே கூட்டணிக்குள் கொண்டுவர முயற்சி செய்யக்கூடும் என்ற கருத்து இருந்தது.

இதனால், தெலுங்கானா பேரவைத் தேர்தலை 2024 மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து நடத்தலாம் என பாஜகவுக்கு ஆதரவான வியூக வகுப்பாளர்கள் சொன்னதும் சந்திரசேகரராவ், மோடி எதிர்ப்பை சற்று குறைத்துக்கொண்டு தனது வியூகத்தை மாற்றியுள்ளார். இப்போது அடுத்தக்கட்ட அரசியல் நகர்வை செய்யத் தொடங்கியுள்ளார் பிரசாந்த் கிஷோர்.

வியூகம் வகுப்பதில் பெரிய அளவில் நிபுணத்துவம் பெற்றுள்ள பிரசாந்த் கிஷோர், தன்னை அரசியல் சக்தியாக மாற்ற தவித்துக்கொண்டிருக்கிறார். இப்போது பீகாரில் புதிய அரசியல் கட்சியை தொடங்க இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். காரணம், பீகாரில் லாலு பிரசாத்தின் யாதவ சமூகத்தினரும், நிதிஷ்குமாரின் குர்மி சமூகத்தினருமே முதல்வர் பதவியை தொடர்ந்து வகித்து வருகின்றனர். இதனால் அங்கு பிற சமூகத்தினர் அதிருப்தி அடைந்துள்ளதால் பிராமணரான தன் பின்னால் உயர் சாதியினரும், தலித்களும் திரண்டு வருவார்கள் என கணக்குப் போட்டுள்ளார் பிரசாந்த் கிஷோர்.

அதேவேளையில், 2020 பேரவைத் தேர்தலில் பீகார் அரசியல் சூழல் சற்று மாறியுள்ளது. காரணம், நிதிஷ்குமார் பலவீனப்பட்டு பாஜக தான் ஆட்சியை நடத்துவது போன்ற தோற்றம் அங்கு உருவாகியுள்ளது. ஆகையால் பாஜகவின் பிடியில் நிதிஷ்குமார் இருப்பதாக தோற்றம் உருவாகியுள்ளதால், அது உயர் வகுப்பினரின் அதிருப்தியை குறைத்துள்ளது. இப்படிப்பட்ட சூழலில் பிரசாந்த் கிஷோருக்கு பீகார் அரசியல் கை கொடுக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

அரசியல் சக்தியாவாரா ?

இது குறித்து அரசியல் விமர்சகர் ரிஷி கூறும்போது, அரசியல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோர் அரசியல் சக்தியாவாரா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். நுட்பமாக பார்த்தால் வியூகம் வகுப்பதில் கூட பிரசாந்த் கிஷோர் பல நேரம் தோல்வி அடைந்துள்ளார். எடுத்துக்காட்டாக தமிழகத்தில் 2021 பேரவைத் தேர்தலில் திமுக எளிதாக 200 இடங்களை பிடித்திருக்க முடியும். 2019 மக்களவைத் தேர்தலில் 40-இல் 39 தொகுதிகளை பிடித்த திமுக கூட்டணி, பேரவைத் தேர்தலில் 159 இடங்களை மட்டுமே பிடித்தது.

அதேநேரத்தில் வியூக வகுப்பாளரான சுனில் வேலை செய்ததால், 2019-இல் 40-இல் ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றிபெற்றிருந்த அதிமுக கூட்டணி 75 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது. 200 தொகுதிகளுக்கு மேல் திமுக அணி வெற்றிபெற்றிருந்தால் பிரசாந்த் கிஷோரின் வியூகம் வெற்றிபெற்றதாக சொல்ல முடியும். 10 ஆண்டு அதிமுக ஆட்சியில் இருந்த நிலையில், திமுகவுக்கு மிகப்பெரிய வெற்றியை பிரசாந்த் கிஷோரால் பெற்றுத்தர இயலவில்லை என்பதே உண்மை.

காங்கிரஸ் கட்சிக்குள் புகுந்து அக்கட்சியை கைப்பற்ற இருந்த பிரசாந்த் கிஷோரின் முயற்சி தோல்வி அடைந்துள்ளது. இப்போது பீகாரில் 3,000 கி.மீ. பயணம் செய்து புதிய கட்சியைத் தொடங்க இருப்பதாக சொல்லும் பிரசாந்த் கிஷோர் அரசியல் சக்தியாவாரா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.  கிங் மேக்கர் ஒருபோதும் கிங் ஆக முடியாது என்பது தான் உண்மை.