விவசாயிகளுக்கு அறிவுசார் தகவல்களை தரும் செயலி அறிமுகம்

சுமார் நாற்பது-ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு, எந்த தொழில்நுட்பம் விவசாயத்தில் புரட்சி செய்தது என்று பார்த்தால் கண்டிப்பாக டிரக்டர் என்று சொல்லலாம்.

அதற்குப் பிறகு தற்போது பல அதிநவீன தொழில்நுட்பங்கள் (Artificial Intelligence, Remote Sensing Technology) விவசாயத்தின் நலனுக்காக மறுவடிவமைக்கப்பட்டிருந்தாலும் அவை விவசாயிகளிடம் வந்து சேர்ந்ததா என்று பார்த்தால் இல்லை.

இன்று விவசாயிகளுக்கு பல சவால்கள் நிறைந்து காணப்படும் நேரத்தில், தமிழக விவசாயிகள் பயனடையும் விதத்தில் வேளாண் டிஜிட்டல் தளமான ‘பிக் ஹாட்’ தன்னுடைய புதிய செயலி ஒன்றை அறிமுகப்படுத்தி இருக்கிறது.

ஆண்ட்ராய்டு தளத்தில் இயங்கக்கூடிய இந்த செயலி விவசாயிகளுக்கு பல நலன்களை தரக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறது.

கோவையில் இதனுடைய அறிமுகம் நடைபெற்றது. அந்த நிகழ்வில் இந்த நிறுவனத்தின் இணை நிறுவனர் சச்சின் பேசுகையில் ஒரு நல்ல தகவல் ஒன்றை தெரிவித்தார்.

ஒரு மாவட்டம் முழுவதும் விவசாயிகள் ஒரு பயிரை பயிரிடுகிறார்கள் என்றால், உதாரணத்திற்கு மிளகாயை பயிரிட்டுள்ளனர் என்றால், அவர்கள் இந்த செயலியை பயன்படுத்தி தங்களுக்கு தேவையான தகவல்களை கேட்டு தெரிந்து கொள்வதோடு, ஒருவேளை அவர்களுடைய பயிரில் ஏதாவது நோய்த்தொற்று ஏற்பட்டிருந்தால் அதை எப்படி சரி செய்வது என்பதை அவர்கள் தெரிந்து கொள்ளலாம்.

அத்தோடு இப்படி ஒரு சூழ்நிலை பயிர்களுக்கு இருக்கிறது என்பதை அந்த செயலியில் பகிரும் பொழுது அந்த வட்டாரத்தில் இந்த செயலியை பயன்படுத்தும் அத்தனை விவசாயிகளுக்கும் இப்படிப்பட்ட ஒரு நோய் மிளகாய் செடிக்கு ஏற்பட்டு வருகிறது என்பதை குறித்த தகவலையும், அதை எவ்வாறு கையாள்வது என்பதை குறித்தும் அவர்களுக்கு அறிவுரை வழங்கமுடியும்.

இது இந்த செயலியின் ஒரு அம்சம் மட்டுமே! இது போல் பல நல்ல அம்சங்கள் இதில் அடங்கியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.

சச்சின் பேசும்பொழுது, கோவையில் 35 விழுக்காடு மக்கள் விவசாயத்தை நம்பி இருப்பதாக தெரிவித்தார். இந்த செயலி மூலம் நம் மாவட்ட விவசாயிகள் இணையும் பொழுது ஒருவருக்கொருவர் தங்களுடைய அனுபவங்களை பகிர்ந்து கொள்ளலாம், தங்கள் பயிர்களின் ஆரோக்கிய நிலையை அறிந்துகொள்ளலாம்.

அதை பிறர் எவ்வாறு கையாண்டார்கள் என்று தெரிந்து கொள்ளலாம். இந்த செயலி வழியாக வானிலை முன் அறிவிப்புகள், மத்திய மற்றும் மாநில அரசின் விவசாய நல திட்டங்கள் குறித்து தெரிந்துகொள்ளலாம்.

மேலும் பயிர்களுக்கு சிறந்த விலை கொடுக்க கூடிய நபர்களை விவசாயிகளே தேர்ந்தெடுக்கலாம். அவர்களிடம் நேரடியாகவே பேசலாம். மேலும், பயிர்களுக்குத் தேவையான உரங்கள் இதர பொருட்களையும் அங்கிருந்தே பெற்றுக்கொள்ளவும் முடியும்.

இந்த செயலி தற்போது ஆறு மொழிகளில் அறிமுகமாகியுள்ளது. இதற்கு நல்ல வரவேற்பு இதற்கு முன்பு ஆங்கிலத்தில் அறிமுகம் செய்யும் பொழுது கிடைத்தது. இதில் இருக்கக்கூடிய அத்தனை தகவல்களும் முழுக்கமுழுக்க தமிழிலும் இலவசமாக கிடைக்கிறது என்றார்.

எழுத்து – சு. டேவிட் கருணாகரன்