தி.மு.க.வின் ஓராண்டு பயணம் குறை ஒன்றும் இல்லை!

மே 7, 2021க்கு முன் தமிழகம் பார்த்த திமுக தலைவர் ஸ்டாலினுக்கும் அதற்கு பின் தமிழகம் பார்த்து வரும் முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினுக்கும் இருக்கும் வித்தியாசங்களை கடந்த ஓராண்டு காலமாக தமிழகத்தோடு சேர்ந்து டில்லியும், பிற மாநிலங்களும் பார்த்து வியந்து வருகிறது.

தேர்தலில் வெற்றிபெற ஜாதகத்தில் ஒரு வாய்ப்பும் இல்லை என்று பலர் கூறினாலும், ஒட்டுமொத்த தமிழ்நாட்டு ஜனங்களின் நம்பிக்கையின் வெளிப்பாடாக  2021 சட்டமன்ற தேர்தலில் மாபெரும் வெற்றி கண்டு, மே 7, 2021ல் ஆட்சி அமைத்து ஓராண்டை நிறைவு செய்யவிருக்கிறது திமுக தலைமையிலான அரசு.

ஜனரஞ்சகமான பல திட்டங்களை அறிவித்ததோடு இல்லாமல் அவற்றில் பலவற்றை நிறைவேற்றி வருகிறது இந்த அரசு. ‘இந்த வாக்குறுதி என்னாச்சு?, அந்த வாக்குறுதி ஏன் கால தாமதம் ஆகுது?, எதுக்கு வருமான வரி சோதனை?’ என்று ஆங்காங்கே சில சலசலப்புகள் எழுந்தாலும் சுறுசுறுப்பாக செயல்படுகிறது இந்த அரசு எனவும், மொத்தமாக இந்த அரசின் ஓராண்டு பயணத்தில் குறை ஒன்றும் இல்லை என்று தான் கருத்து நிலவுகிறது.

இப்பயணத்தில் திமுக தலைமையிலான அரசு நடைமுறைப்படுத்திய மக்கள் நல திட்டங்களை பற்றி பொதுவாழ்க்கையில் உள்ள முக்கிய நபர்கள் தங்கள் வெளிப்படையான கருத்துக்களை நம்மிடம் அலைபேசி வழியாக பகிர்ந்தது:-

உழைப்பு என்றால் முதல்வர் ஸ்டாலின் தான்!

 – என்.ராம், மூத்த பத்திரிகையாளர்

பெண்களின் முன்னேற்றத்திற்கான பல திட்டங்களை தி.மு.க அரசு செய்து வருகிறது. இதை ஒரு நல்ல செயலாக பார்க்கிறேன். அவர்களுக்கான திட்டங்கள் குறித்து ஆழமாக சிந்தித்து, பரிசீலனை செய்துள்ளதோடு, பெண்களின் வளர்ச்சிக்கு எம்மாதிரியான செயல்பாடுகள் முக்கியமோ, அதை நிறைவேற்றியுள்ளார்கள்.

எதிர்பார்த்திராத அளவிற்கு மிகசிறந்த முறையில் செயல்பட்டு வருவதோடு, தேர்தலில் அளித்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றி வருகிறார்கள். அதில் இன்னும் பல திட்டங்கள் செயல்படுத்தப்பட வேண்டியுள்ளது.

மு.க. ஸ்டாலின் தலைமையிலான இந்த ஓராண்டு கால ஆட்சி மிக சிறப்பாக உள்ளது. இந்தியாவில் பிற மாநிலங்களில் பார்க்க முடியாத சாதனைகள் தமிழகத்தில் நடந்துள்ளது. இந்தியாவில் உள்ள பெரிய மாநிலங்களோடு தமிழ்நாட்டை ஒப்பிட்டால், முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் தமிழகம் நம்பர் 1 ஆக திகழ்கிறது.

இந்த ஓராண்டு ஆட்சியில் மாநில அரசின் நிதிநிலையை கையாளுவது, முதலீடுகளை ஈர்ப்பது ஆகியவற்றில் திமுக அரசின் செயல்பாடுகளுக்கு A++ மதிப்பீட்டை தருவேன்.

தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர் சமீபத்தில் தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கைக்கு நல்ல வரவேற்பு இருப்பதோடு ஏற்றம், குறை இல்லாமல் அந்தந்த துறைக்கு தகுந்த நிதி, சமமாக ஒதுக்கப்பட்டு உள்ளது. கடந்த 10 ஆண்டு காலமாக தமிழகத்தின் நிதி தவறாக கையாளப்பட்டது. இதை தற்போது ஒரு நல்ல ஆரோக்கியமான நிலைக்கு கொண்டு வந்துள்ளார்கள்.

ஒரு மாநிலத்தின் வளர்ச்சியும், சமூக நீதியும் ஒரே நிலையில் சமமாக கொண்டு செல்லப்பட வேண்டும். தமிழ்நாட்டில் அது சிறந்த முறையில் தற்போது நடப்பதாக நான் நினைக்கிறேன்.

தமிழக நிதி துறையில் என்ன நிலைமை நிலவுகிறதோ, அவை வெளிப்படையாக மக்களுக்கு தெரிவிக்கப்படுகின்றன. இதில் ஸ்டாலின் மற்றும் பி.டி.ஆர் ஆகிய இருவரும் முக்கிய பங்கு வகிக்கின்றனர். மேலும் நிதி துறையை ஒரு நல்ல பாதையில் கொண்டு செல்கிறார்கள். இதனால் அந்த துறை ஆரோக்கியமானதாக விளங்கும்.

தமிழக ஆளுநர் ஆர்.என் ரவியோ, மாநிலத்தின் நலனுக்காக பணியாற்றாமல் மத்திய அரசின் உத்தரவுகளையும், அறிவுறுத்தல்களையும் பின்பற்றுகிறார். அவர் இந்திய அரசியலமைப்புக்கு எதிராக செல்கிறார் என்றும் கூட சொல்லலாம். அமைச்சரவை நிறைவேற்றிய மசோதாவை அனுப்பி வைக்காமல் இருப்பது மிக தவறு. கவர்னரின் வேலையே அதை பரிசீலனை செய்து உரிய இடத்திற்கு அனுப்பி வைப்பது தான்.

மாநிலத்தின் மக்களின் உணர்வுகளை மதித்து ஆளுநர் செயல்பட வேண்டும். மாநிலத்திற்கு என்று ஒரு தனி சுயாட்சி இருக்க வேண்டும். இவற்றை எல்லாம் புரிந்து கொள்ளாமல் ஆளுநர் ஒரு தலைபட்சமாக நடந்து கொள்கிறார். அரசு ஆளுநரை கண்டிப்பதும், விமர்சிப்பதும் சரியானதுதான். ஏன் என்றால் அதில் தவறுமில்லை, வேறு வழியுமில்லை. இப்படி செய்தால் தான் ஓர் அழுத்தம் உருவாகும்.

தமிழக மக்களிடம் நீட் தேர்வு வேண்டாம் என்ற நிலைப்பாடு உள்ளது. அது ஏழை மாணவர்களின் வாய்ப்பை பறிப்பதாக உள்ளது. ஆனால் அதற்கு மாறாக நீட் விஷயத்தில் ஆளுநரின் செயல்பாட்டை, மாநிலத்திற்க்கு உகந்தது அற்றகாகவும், அரசியல் சட்டத்திற்கு விரோதமான போக்காகவும் நான் பார்க்கிறேன். எனவே இதனை தமிழக அரசு எதிர்ப்பது நியாயமும், தேவையும் கூட.

மக்கள் மத்தியில் பரவலாகவே இந்த ஆட்சியின் மீது நன்மதிப்பு உள்ளது. மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற நல்ல நோக்கம் முதல்வருக்கு இருக்கிறது. ஸ்டாலின் முதல்வர் ஆவதற்கு முன்பே, கலைஞர் ‘உழைப்பு என்றால் ஸ்டாலின்’ எனக் கூறியிருக்கிறார். இன்று நானே அதை கண் கூடாக பார்க்கிறேன்.

பல மாநில எதிர்க்கட்சி தலைவர்களுடன்  பேசும்போது நான் தெரிந்துகொண்டது, தேசிய அளவிலான ஒரு அணியை திரட்டி  நியாயமான கோரிக்கைகளை முன்னெடுத்து செல்ல ஸ்டாலின் முயற்சி எடுக்கவேண்டும்  என்ற எதிர்பார்ப்பு  இருக்கிறது. இதை மெதுவாக செய்வார் என்று கருதுகிறேன். மேலும் எதிர்க்கட்சிகள் மத்தியில் அனைவராலும் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒரு முகமாகவும் ஸ்டாலின் இருக்கிறார். அரசியலில் இது ஒரு சாதகமான நிலையாகத்தான் இருக்கும்.

ஸ்டாலின் ஆட்சியில், தமிழ்நாட்டின் புகழும், மதிப்பும் உயர்ந்து விட்டது. இது இன்னும் அதிகரிக்கும். மேலும் தமிழ்நாடு இப்போது ஒரு நல்ல நிலையில் இருக்கிறது. வரும் காலத்தில் கலை, மொழி, தொல்லியல் ஆகிய துறைகளிலும் நாம் சிறந்த நிலையை அடைய இந்த அரசு முயற்சி எடுக்க வேண்டும்.

இங்கு அரசாங்கத்தின் நிர்வாகம் மிகச் சிறப்பாக இருப்பதால் தான், நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர்கள், இந்தியாவின் மிக முக்கியமான மதிக்கத்தக்க பொருளாதார நிபுணர்கள் ஆகியோர் இங்கு வந்து அவர்களுடைய நேரத்தையும், அவர்களுடைய ஆற்றலையும் செலுத்துகின்றனர். இந்த ஐவர் கொண்ட பொருளாதார குழுவை நல்ல முறையில் இயக்கி வருகிறார்கள். இன்னும் தொடர்ந்து சிறப்பாக இயங்கும் பட்சத்தில் நிச்சயமாக தமிழ்நாடு ஒரு நம்பர் 1 மாநிலம் ஆக வரும் என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் கிடையாது என்பேன்.

 

தமிழகத்தை முன்னோடி மாநிலமாக உயர்த்துகிறார்!

– முத்தரசன், மாநில செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 

2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற கடுமையாக முயற்சி செய்து வருகின்றனர். தமிழகம் எதிர்கொள்ளும் நிதி நெருக்கடியையும் சமாளித்து கொடுத்த வாக்கினை நிறைவேற்ற வேண்டும் என்பதில் முதல்வர் முழுகவனம் செலுத்தி வருகிறார்.

தன்னை முன்னிலைப்படுத்த வேண்டும் என்பதை விட தமிழ்நாட்டை முன்னிலைப்படுத்த வேண்டும் என்ற அவரின் முயற்சி பாராட்டுக்குரியது. சட்டம் ஒழுங்கை காப்பாற்றுவதில் அரசு கடுமையான கவனம் செலுத்தி வருகிறது.

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது, பெண்களுக்கான ரூ.1000 நிதியுதவி, ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரம் செய்வது போன்ற சில பிரச்சினைகள் உள்ளன. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி வருவது போல, மற்ற கோரிக்கைகளையும் பூர்த்தி செய்யவேண்டும். அதற்கான கால அவகாசம் உள்ளது. ஆனால் நிதி நெருக்கடி உள்ளதால் அதனை சமாளித்து நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை உள்ளது.

அனைத்து மக்கள் திட்டங்களும் மக்களிடம் சேர வேண்டும் என கடுமையான முயற்சி மேற்கொண்டு வருகிறார். உள்ளாட்சி அமைப்புகளை இன்னும் சிறப்பாக செயல்பட வைத்தால், மக்களுக்குரிய திட்டங்கள் அனைத்தும் அவர்களிடம் போய் சேர்வதற்கு வழிவகுக்கும்.

உள்ளாட்சி அமைப்புகளுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படும் எனக் கூறியுள்ள முதல்வர், அந்த அமைப்புகள் சிறப்பாக செயல்படுவதற்கு அரசு உறுதுணையாக இருக்கும் என தெரிவித்திருந்தார். அதன் அடிப்படையில், திட்டங்களை மக்களிடம் கொண்டு போய் சேர்க்கலாம்.

மேலும் சமூக நீதியை நிலைநாட்டுவதில் முதல்வர் உறுதியாக உள்ளார். இந்த அரசும் அதற்கு உறுதுணையாக இருக்கும் என்பதை அவர் மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வருகிறார். சமூக  நீதியை நிலைநாட்டுவதில் முதல்வருக்கு மட்டுமல்ல, அனைவருக்கும் பங்கு உள்ளது.

இடைக்கால பட்ஜெட்டில் தமிழகத்துக்கு என மாநில கல்வி கொள்கை ஒன்றை உருவாக்க கல்வியாளர்கள் மற்றும் வல்லுநர்களைக் கொண்ட உயர்மட்ட குழு அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

புதிய கல்வி கொள்கையை வடிவமைக்க குழு அமைக்கப்பட்டுள்ளதோடு, அந்தக் குழுவின் அறிக்கையைப் பெற்ற பின்னர் அமல்படுத்தப்படும் எனக் கூறியுள்ளார். இது ஒரு நல்ல முயற்சி.

மாநில அரசின் உரிமைகளை மத்திய அரசு படிப்படியாக பறித்து வருகிறது. அனைத்து மாநிலங்களிலும் இது நடைபெறுகிறது. இதுபோன்ற செயல்கள் தமிழகத்தில் நடைபெற கூடாது என பல நடவடிக்கைகளை முதல்வர் எடுத்து வருகிறார்.

மக்கள் நல திட்டங்களை அமல்படுத்துவதன் மூலம் தமிழகத்தை ஒரு முன்னோடி மாநிலமாக உயர்த்துவதற்குரிய முயற்சிகளையும் மேற்கொள்கிறார்.

வேலையின்மை தற்போது பெரும் பிரச்சினையாக உள்ளது. அதனை தீர்ப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அனைவரின் ஒத்துழைப்போடு, இந்த அரசு சிறப்பான அரசாக செயல்படுவதற்கு உரிய சூழல் நிச்சயம் உருவாகும் என்று நம்புகிறோம்.

மக்களுக்காக ஓய்வில்லாமல் ஓடுகிறார்!

-துரை வைகோ, தலைமை கழக செயலாளர், மதிமுக 

கொரோனா இரண்டாம் அலை உச்சத்தில் இருந்த போது தமிழக முதலமைச்சராக ஸ்டாலின் பதவியேற்றார். இந்திய மாநிலங்களிலேயே முதன்முதலாக கொரோனா இரண்டாம் அலையை கட்டுப்படுத்திய முதல் மாநிலம் தமிழகம் தான். அரசாங்கம், சுகாதார துறை அதிகாரிகள் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் ஆகியோரின் முயற்சியினால் இது சாத்தியமானது.

தமிழக அரசின் நிதிநிலை மிக மோசமான நிலையில் இருந்தது. மத்திய அரசிடம் இருந்து நமக்கு வரவேண்டிய நிதியும் வரவில்லை. இந்த நிலையில், அதனை சரியாக சமாளித்து வருகின்றனர். மேலும், தேர்தல் வாக்குறுதியில் கூறியவற்றையும் நிறைவேற்றி வருகின்றனர்.

கொரோனா காலகட்டத்தில் தொழில் துறை கடும் நெருக்கடியை சந்தித்தது. நிறுவனங்கள் மூடல், வேலைவாய்ப்பு இழப்பு போன்ற வாழ்வாதாரப் பிரச்சினைகள் ஏற்பட்டது. ஆனால் இப்பொழுது அதனை சமாளிக்கும் வகையில் பல தொழிற்சாலைகள் தமிழகத்திற்கு வருவதற்கு உண்டான வாய்ப்புகளை திமுக தலைமையிலான இந்த அரசு உருவாக்கியுள்ளது. பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் இங்கிருக்கும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் முயற்சியை எடுத்துள்ளனர்.

கடந்த பத்து வருடங்கள் தமிழ்நாடு ஒரு தேக்க நிலையிலேயே இருந்தது. ஆனால் இன்று பல சவால்களை கடந்து திமுக அரசு பல நல்ல செயல்பாடுகளை செய்து வருகின்றனர். தமிழ்நாட்டின் சிறந்த முதல்வர்களுள் தானும் ஒருவர் என்பதை ஸ்டாலின் நிரூபித்து வருகிறார். அவர், மக்களுக்காக ஓய்வில்லாமல் ஓடிக்கொண்டே இருக்கிறார்.

சரியான நபரை தலைமை பொறுப்புக்கு தேர்ந்தெடுப்பது என்பது அவசியம். இறையன்பு, சைலேந்திர பாபு போன்ற சிறந்த அதிகாரிகளையும், ஒவ்வொரு துறைக்கும் தகுந்த அமைச்சர்களையும் நியமனம் செய்துள்ளார் முதல்வர். இதுபோன்ற சிறந்த குழு தான் தமிழக அரசாங்கம் நல்ல முறையில் இயங்குவதற்கு வழிவகுக்கிறது.

இந்த 12 மாதத்தில் இவ்வளவு சிறப்பாக அவர் ஆட்சி செய்வதற்க்கும், பிரச்சினைகளை சிறந்த முறையில் கையாளுவதற்கும் முதல்வரின் நிர்வாகத்திறனே காரணம். முதல்வருக்கு நிகர் வேறு யாரும் இல்லை என்றே கூறுவேன். சிறப்பான முறையில் அவர் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு வாங்கி தரும் முயற்சியில் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.  இதில் தீர்வு காணும் வரை இந்த நடவடிக்கைகள் தொடர வேண்டும். மேலும் மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள புதிய கல்வி கொள்கையில் ஆங்கிலத்தை புறக்கணித்து விட்டு, இந்திக்கு முன்னுரிமை வழங்க முயற்சி நடைபெறுகிறது. அந்த அறிக்கையை முழுமையாக படித்தோம் எனில், இது பற்றிய உண்மை நிலை நமக்கு புலப்படும். பிற நாடுகளுக்கு செல்லும் போது  நம் மாணவர்களுக்கு உண்டான ஒரு பெரிய பலமே அவர்களின் ஆங்கில புலமை தான். இதை மத்திய அரசு மாற்ற நினைக்கும் போது, பெரிய சிக்கல் உருவாகும்.

தமிழக அரசு நீட் தேர்வை எப்படி எதிர்க்கிறதோ, அதுபோலவே புதிய கல்வி கொள்கையையும் எதிர்க்க வேண்டும். ஆங்கிலத்திற்கு மாற்றாக இந்தியை திணிக்கும் முயற்சி அதில் இருப்பதோடு, அண்மையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறிய கருத்தின் பிரதிபலிப்பாகவும் இந்த கல்வி கொள்கை உள்ளது. எனவே, இதிலும் தமிழக அரசின் முழு எதிர்ப்பை காட்ட வேண்டும்.

பெரியாரின் பாதையில் பயணிக்கிறார்!

-கு.இராமகிருட்டிணன், பொதுச்செயலாளர், தந்தை பெரியார் திராவிடர் கழகம்

முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழக அரசு தமிழர்களுக்கான சிறப்பான ஆட்சியை, பதவியேற்ற இந்த ஓராண்டில் வழங்கியுள்ளது.

தமிழ், தமிழ்நாடு, தமிழர்கள் என திராவிட இயக்கத்தின் நோக்கங்களை முழுமையாக முதல்வர் நிறைவேற்றி வருகிறார். மக்கள் குறைகளை உடனடியாக தீர்த்து வைப்பதையே இந்த ஆட்சியின் நிறையாக நான் பார்க்கிறேன். தேர்தல் அறிக்கையில் கூறியது போல அனைத்து திட்டங்களையும் படிப்படியாக நிறைவேற்றி வருகிறார். சொல்லாத பல திட்டங்களை கூட செயல்படுத்துகிறார்.

திராவிட மாடல் என்ற பெயரில் 100 ஆண்டுகால திராவிட இயக்கம் வகுத்த கொள்கைகளை படிப்படியாக செயல்படுத்தி வருகிறார். வேற்றுமை இல்லாமல் அவரின் அனைத்து திட்டங்களும் திமுகவிற்கு வாக்களித்தோர், அளிக்காதவர் என தமிழ்நாட்டில் உள்ள சகல மக்களிடமும் திட்டம் போய் சேர்கிறது.

சொல்லாத பல திட்டங்களையும் நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணம் அவரிடம் உள்ளது. ஆனால் மத்திய அரசின் நெருக்கடி, மாநில உரிமை சார்ந்த சில பிரச்சினைகள் மற்றும் பொருளாதார பிரச்சினைகளினால் இன்னும் சில செயல்பாடுகளை முழுமையாக செயல்படுத்த முடியாமல் உள்ளது.

மத்திய அரசிடம் இருந்து வர வேண்டிய நிதி முறையாக வந்து சேர்வது மற்றும் தமிழ்நாட்டு மக்களுக்காக இயற்றிய மசோதாக்களை உடனுக்குடன் மத்திய அரசு நிறைவேற்றிக் கொடுத்தால் இன்னும் முதல்வர் ஸ்டாலின் சிறப்பாக ஆட்சி நடத்துவார். திராவிட இயக்கத்தின் நோக்கமே மாநில சுயாட்சி தான்.

பெண்களுக்கான உரிமையில் பெரியார் கண்ட கனவினை வழங்குவதில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக உள்ளது. தாழ்த்தப்பட்டவர்கள், பிற்படுத்தப்பட்டவர்களுக்கான சமூக நிதியை காத்து வரும் அவர், தீண்டாமையை ஒழிக்கும் பொருட்டு அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் பெரியாரின் எண்ணத்தை திட்டமாக செயல்படுத்தி உள்ளார்.

உரிமை சார்ந்த தடைகள் பல உள்ளன. அவற்றை எல்லாம் வென்று தமிழகத்தை இந்தியாவின் முதன்மை மாநிலமாக மாற்றுவதோடு அல்லாமல், உலக நாடுகளிலேயே தமிழகம் சிறப்பான மாநிலமாக திகழ வேண்டும்.

 

பிரச்சனைகளை தீர்க்கக்கூடிய மிக சிறந்த முதல்வர்

– நா.கார்த்திக், கோவை மாநகர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர், திமுக

தமிழக முதல்வர் ஸ்டாலின் தமிழ்நாட்டில் வாழ்ந்த சரித்திர புகழ் பெற்ற தலைவர்கள் பலரோடு சிறப்பாக பழகியிருக்கிறார். தனது தந்தை முத்தமிழறிஞர் ‘கலைஞர்’ முதலமைச்சராக இருந்தபொழுது உள்ளாட்சித்துறை அமைச்சராகவும், துணை முதலமைச்சராகவும் இருந்து பணியாற்றி இருக்கிறார்.

இன்றைக்கு அனைத்து தரப்பு மக்களும் பாராட்டக்கூடிய ஆட்சியை மிகச் சிறப்பாக வழங்கி கொண்டிருக்கிறார்.

கடந்த ஆட்சியில் கொரோனாவை கட்டுப்படுத்துவதில் சரியான நடவடிக்கை இல்லாமல் இருந்தது. மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற உடன் ஒரு மாத காலத்தில் அதிரடியாக பல்வேறு முயற்சிகளை எடுத்து சிறப்பாக நடவடிக்கை எடுத்தார். அதன் விளைவாக ஒரு மாத காலத்தில் அந்த நோயை தமிழகத்தில் பெரிதளவில் கட்டுப்படுத்த முடிந்தது.

பிற மாநில முதல்வர்களுக்கெல்லாம் எடுத்துக்காட்டாகவும், முன்னோடி தலைவராகவும் கோவைக்கு வருகைத் தந்து கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் தங்கியிருக்கக் கூடிய இ.எஸ்.ஐ மருத்துவமனை அறைக்கே நேரடியாக சென்று, அந்த நோயாளிகளுக்கு ஆறுதல் சொல்லி நம்பிக்கையை ஏற்படுத்தினார். படிப்படியாக நடவடிக்கைகள் எடுத்ததன் விளைவாக இந்த நோய் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

அனைத்து துறைகளிலும் எந்த ஒரு பிரச்சனையாக இருந்தாலும் அந்தப் பிரச்சனையின் தன்மையை உணர்ந்து, புரிந்து நேரடியாக ஆய்வு செய்து தீர்த்து வைக்கக்கூடிய  மிகச்சிறந்த முதலமைச்சராக இன்றைக்கு அவர் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.

அதனுடைய வெளிப்பாடுதான் இன்று தமிழ்நாட்டு மக்கள் அத்தனை பேரும் முதலமைச்சரின் செயல்பாடுகளை மனமார பாராட்டி வரவேற்று கொண்டிருக்கின்றனர்.

திராவிட மாடலால் வீழ்ச்சிதான்!

– அர்ஜுன் சம்பத், தலைவர், இந்து மக்கள் கட்சி

தமிழகத்தில் ஓராண்டு கால ஆட்சியை முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் அரசாங்கம் பூர்த்தி செய்யவிருக்கிறது.

இந்த ஓராண்டில் திராவிட மாடல் என்ற பெயரில் தமிழகத்தை மிகவும் மோசமான நிலையில் சீரழித்து உள்ளனர்.

திராவிட மாடலை கைவிட்டு அண்ணா வழியில், கருணாநிதி அவர்களின் வழியில் ஆட்சி செலுத்த வேண்டும். இந்த ஈ.வெ.ரா. வழி என்கிற திராவிட மாடலில் இருந்து அவர்கள் வெளியே வரவேண்டும்.

பத்தாண்டுகளுக்குப் பிறகு திராவிட முன்னேற்றக் கழக அரசாங்கம் அமைந்திருக்கிறது, மக்கள் வாய்ப்பு தந்திருக்கின்றனர்.இன்னும் நான்கு ஆண்டுகள் பூர்த்தி செய்ய வேண்டியிருக்கிறது. அவர்கள் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். தமிழகத்தின் வளர்ச்சி திட்டங்களுக்கு வித்திட வேண்டும்.

ஈ.வே.ரா கொள்கைகளால் தமிழகம் வீழ்ச்சியை தான் சந்தித்திருக்கிறது. தமிழகம் எழுச்சி அடைய வேண்டுமென்று சொன்னால் திராவிட மாடலை கைவிட்டு வளர்ச்சிப் பாதைக்கு திரும்ப வேண்டும் என்பதே எங்கள் வேண்டுகோள்.

திமுக, தேர்தல் பரப்புரையின் போது கொடுத்த வாக்குறுதிகள் ஒன்று கூட நிறைவேற்றப்படவில்லை. மகளிருக்கான மாதாந்திர உதவித்தொகை வழங்கப்படவில்லை. அதை பற்றி கேட்டால், நிறைவேற்றுவது பற்றி தேதி குறிப்பிட்டா சொன்னோம்? என்று  சொல்கின்றனர்.

‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால் திமுகவிற்கு சொந்தமான மதுக்கடைகளை மூடுவோம்’ என்று கனிமொழி சொன்னது அப்படியே இருக்கிறது. இப்போது அவர் அப்படி சொல்லவில்லை என்கிறார்.

நகை கடன் தள்ளுபடி, கல்விக் கடன் தள்ளுபடி, மகளிருக்கான உரிமை தொகை, டாஸ்மாக்கை மூடுவது, மதுவிலக்கு அமல்படுத்துவது, மின்கட்டணத்தை மாதமொருமுறை கணக்கிடுவது போன்ற பல்வேறு உறுதி மொழிகளை அவர்கள் கொடுத்திருந்தார்கள், அவை எதையும் நடைமுறைப்படுத்தவில்லை.

வரவிருக்கும் 4 ஆண்டுகளில் தாங்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும், பிரிவினைவாதம் வன்முறையாளர்களுக்கு ஆதரவு ஆகியவற்றில் இருந்து விலகி இருக்க வேண்டும், மது விலக்கை கட்டாயம் அமல்படுத்த வேண்டும்.

 

இந்தியாவின் நம்பர் 1 முதல்வர்!

– ஹரிஹரசுதன், செய்தி தொடர்பாளர், தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ்

2021 ஆம் ஆண்டில் முதல்வராக பதவியேற்ற உடனேயே, முதல்வர் ஸ்டாலின் எடுத்த மூன்று முக்கிய முடிவுகளே தமிழகத்தில் அவரது ஆட்சி சிறப்பானதாக இருக்கும் என்பதற்கு உதாரணமாக திகழ்ந்தது.

தமிழ்நாட்டின் தலைமை செயலாளராக இறையன்பு, டி.ஜி.பி யாக சைலேந்திர பாபு, நிதியமைச்சராக பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோரின் நியமனமே முதல்வரின் சிறப்பான ஆட்சிக்கு உதாரணங்கள்.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக அவர் முதல்வர் ஆன போதிலும், அரசாங்கத்தையும், தன் கட்சியையும் தனி தனியாக வழி நடத்தி வருகிறார். எந்த தலையீடும் இல்லாமல் திமுக தனியாக செயல்படும், அரசாங்கம் மக்களுக்காக செயல்படும் என்ற கொள்கைகளை கொண்டுள்ளார். அதனால் தான்  இந்தியாவிலேயே நம்பர் 1 முதல்வராக இருக்கிறார்.

தனது ஓராண்டு கால ஆட்சியை சிறப்பாக நடத்திய முதல்வர் ஸ்டாலினுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.