தீ விபத்து: இனியும் அலட்சியம் வேண்டாம்!

தஞ்சை மாவட்டத்தில் மனதை பதைபதைக்க வைக்கும் ஒரு தீ விபத்து நடந்து 11 உயிர்கள் பலியாகி இருக்கின்றன. அதுவும் ஒரு கோவில் திருவிழாவில் நடந்த விபத்தில் சிறுவர்கள் உட்பட பலர் மரணத்தைத் தழுவி இருக்கிறார்கள். எல்லையில் நடக்கும் ஒரு தாக்குதலில் ஒரு உயிர் போனாலும் பதறுகின்ற நாம் உள்ளூரில் இது போல நடக்கும் போது, நமது அலட்சியத்தால் பெரிதாக அலட்டிக்கொள்வதில்லை போல தோன்றுகிறது.

சில ஆண்டுகளுக்கு முன்பு கும்பகோணத்தில் ஒரு பள்ளியில் தீ விபத்து நடந்து பல குழந்தைகள் இறந்தனர். ஒவ்வொரு ஆண்டும் தவறாமல் பட்டாசு தொழிற்சாலை விபத்துகள் ஏற்பட்ட வண்ணமிருக்கின்றன. உயிர்கள் பலியாகி கொண்டுதான் இருக்கின்றன. மனித உயிர்கள் என்ன அவ்வளவு மலிவானதா?

இது போன்ற மிகப் பெரும்பாலான விபத்துகளுக்கு காரணம் நமது கவனக்குறைவும், அலட்சியம் தான் என்று தலைகுனிந்து ஒப்புக்கொள்ள வேண்டும். கடந்த வாரத்தில் மட்டும் இது போன்ற மூன்று சம்பவங்கள் நடந்திருக்கின்றன.

முதலாவது கோவை வடவள்ளியில் ஒரு சிறுவன் மின்சார ஒயர் பட்டு மின்சாரத்தால் தாக்குண்டு இறந்து போனது, இரண்டாவது தஞ்சை மாவட்டத்தில் ஒரு கோவில் திருவிழாவில் சப்பரத் தேரை இழுத்து வரும் பொழுது மின்சார ஒயர் உரசி தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது. மூன்றாவதாக சென்னை அரசு தலைமை மருத்துவமனையில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் உள்ள பகுதியில் நடந்த தீ விபத்து. இந்த 3 விபத்துக்களுமே  கிட்டத்தட்ட “தவிர்த்திருக்கலாம்” வகையை சேர்ந்தது என்று சொல்லலாம்.

கோவை வடவள்ளியில் ஒரு பெரிய அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் அமைந்துள்ள பூங்காவில் நடந்த விபத்து அது. அந்த பூங்காவில் விளையாடச் சென்ற ஒரு சிறுவன் அறியாமல் கீழே அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த போது மின்சாரம் தாக்கி இறந்திருக்கிறான். அது ஏதோ அரசு பூங்காவோ,  கேட்பாரற்று கிடக்கும் சாலையோர பகுதியோ அல்ல. கோடிக்கணக்கான பணத்தை கொட்டி வாங்கிய அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் அமைந்துள்ள பூங்கா. அதற்கு என்று தனி பராமரிப்பாளர் இருக்க வேண்டும், அப்படி இல்லை என்றால் அதற்கு அந்த குடியிருப்பை சார்ந்தவர்களை பொறுப்பாக்க வேண்டும். அப்படி ஒரு பராமரிப்பாளர் இருந்து முறையாக பராமரித்து வந்தால் கீழே கிடந்த மின்கம்பியை பார்த்திருப்பார் அது சரி செய்யப்பட்டு இருக்கும். அதில் நடந்த ஏதோ ஒரு குழப்பம் அல்லது குளறுபடி இன்று ஒரு அப்பாவி சிறுவனை பலி வாங்கி அந்த குடும்பத்தை மீளாத்துயரில் தள்ளியிருக்கிறது.

இரண்டாவதாக தஞ்சை மாவட்டத்தில் நடந்த தேர் தீப்பிடித்த சம்பவம். அது ஒரு மிகப் பெரிய பெரும் கூட்டம் கூடுகின்ற தேர்த்திருவிழா அல்ல. உள்ளூர் மக்கள் சாலையில் நடத்துகின்ற ஒரு நிகழ்வு தான். அந்தத் தேரை அலங்கரிக்க உயரத்தில் அமைக்கப்பட்ட ஒரு அலங்கார விளக்கு, உயர் மின் அழுத்த கம்பியில் பட்டு உரசியது பொழுதில் தீவிபத்து ஏற்பட்டு 11 பேர் பலியாகியிருக்கிறார்கள். இன்னும் பல பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தேர் சாலையின் ஒரு திருப்பத்தில் திரும்பும் போது இந்த விபத்து நடந்திருக்கிறது. தாழ்வழுத்த மின் கம்பியில் வரும் மின்சாரம் தடை செய்யப்பட்ட நிலையில், உயர் அழுத்த மின்சார கம்பியில் மின்சாரம் வந்து, அது தேரில் பட்டு விபத்து ஏற்பட்டு இருக்கிறது.

தேரின் உச்சியில் இருந்த அந்த விளக்கை மடக்கி விட்டு இருந்தால் இது நடந்திருக்காது என்று கூறுகிறார்கள். தாழ்வழுத்த மின்சார கம்பியில் வருவது போலவே, உயர் அழுத்த மின்சார கம்பிகளில் மின்சாரம் வருவது ஆப் செய்யப்பட்டு இருந்தால் இந்த விபத்து நடந்து இருக்காது என்கிறார்கள். எவ்வாறு நடந்தது என்பது  விசாரணையில் தெரிந்து விடும். ஆனால் இனிமேல் இவ்வாறு நிகழாதவாறு பார்த்துக்கொள்வதே விவேகம்.

மூன்றாவதாக சென்னை அரசு மருத்துவமனை ஆக்சிஜன் சிலிண்டர்களை வைக்கும் பகுதியில் ஏற்பட்டுள்ள தீ விபத்து. ஏற்கனவே பல விதமான நோய்களால் பாதிக்கப்பட்டவர்களும், விபத்தால் பாதிக்கப்பட்டடு முழுமையாக நடமாட இயலாத நோயாளிகளும் சிகிச்சை பெறும் இடம் தான் மருத்துவமனை.

அங்கு இது போன்ற விபத்து நடைபெறாமல் பாதுகாப்பை உறுதி செய்வது மிகவும் அவசியம். இங்கு உயிரிழப்பு இல்லை என்றாலும் எவ்வாறு தீ விபத்து நடைபெற்றது என்பதை ஆய்வு செய்வது முக்கியம்.  மருத்துவமனையில் பாதுகாப்பை உறுதி செய்ய அதற்கான திட்டமிடுதலும், செயலாக்கமும் உடனே தேவை. நாட்டின் பிற மாநிலங்களில் சென்ற ஆண்டுகளில் மருத்துவமனையில் நடைபெற்ற தீ விபத்துகள் நெஞ்சை பதற வைத்திருக்கின்றன.

குதிரை ஓடியபின் லாயத்தை பூட்டி எவ்வித பயனும் இல்லை. எனவே அந்த வகையில் இது போன்ற தீ விபத்துகள் நடைபெறாத வண்ணம் புதிய காலத்துக்கேற்ற புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்த வேண்டியது அவசியம். அதனை அனைவரும் பின்பற்றும் வகையிலும் கண்காணிப்பு செய்யவும் வழிவகை ஏற்படுத்தப்பட வேண்டும்.

சுனாமி, எரிமலை, புயல், வெள்ளம் போன்ற பேரிடர்களை முன்கூட்டி அறிந்து அதற்கேற்ப செயல்படும் நவீன தொழில்நுட்பங்கள் வந்து விட்ட காலத்தில் இது போன்ற தீ விபத்துகளில் மனித உயிர்கள் பலியாவது இனியும் தொடர அனுமதிக்கக்கூடாது