ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை கல்லூரியில் மாணவர் திருவிழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியின், பி.காம். சி.ஏ. துறை சார்பில், மாநில அளவில் கல்லூரிகளுக்கு இடையிலான மாணவர் திருவிழா (Fiesta’2022) நடைபெற்றது.

இதன் தொடக்க விழாவிற்கு கல்லூரியின் முதல்வர் மற்றும் செயலர் சிவக்குமார் தலைமை வகித்தார்.

பி.காம். சி.ஏ. துறைத் தலைவர் கீதா துறையின் அறிக்கையை வாசித்தார். கோவை மத்திய பாதுகாப்பு காவல் படையின் மத்திய பயிற்சிக் கல்லூரி கமாண்டன்ட் ராஜேஷ்குமார் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, குத்துவிளக்கேற்றி மாணவர் திருவிழாவைத் தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் பேசியதாவது: நம் இந்திய திருநாட்டின் பாரம்பரியம் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. தமிழகத்தில் பல்வேறு மொழிகளைப் பேசுபவர்கள் வசித்து வந்தாலும், நாம் அனைவரையும் ஒருங்கிணைப்பது இந்தியர் என்ற மையப்புள்ளியே.

நம்முடைய நாட்டின் பாரம்பரியத்தை பாதுகாப்பது, இன்றைய இளைய சமுதாயத்தினரின் தலையாயக் கடமை. இதுநம்மை இந்தியர்கள் என்று பெருமிதமடையச் செய்யும்.

இது போன்ற மாணவர் திருவிழாக்களில் நம்முடைய திறமைகளை வெளிப்படுத்தமுடியும். மற்ற மாணவர்களிடம் இருந்து புதிதாக ஏதாவது ஒன்றைக் கற்றுக் கொள்ளலாம். நம்முடைய திறமையால் மற்றவர்களை வெல்லவும் முடியும் எனக் கூறினார்.

தொடர்ந்து பாரதியார் பல்கலைக்கழக அண்ணா ஐ.ஏ.எஸ் அகாடமி இயக்குநர் பத்மநாபன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு உரையாற்றினர்.

பின்னர் பல்வேறு முன்னணி நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்றுள்ள மாணவர்களைப் பாராட்டி கமாண்டன்ட் ராஜேஷ்குமார் நினைவுப் பரிசுகள் வழங்கினார்.

அதனையடுத்து நடைபெற்ற மாணவர் திருவிழாவில் தமிழகத்தில் 50 கல்லூரிகளைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு தங்களது தனித்திறமைகளை வெளிப்படுத்தி பரிசுகளை வென்றனர்.