டாக்டர்.என்.ஜி.பி. கல்லூரியில் பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் மாணவர்படை துவக்கவிழா

இளைஞர்களின் சேவை மனப்பான்மையை நல்வழிப்படுத்தும் விதமாக இன்று(18.07.2018) டாக்டர்.என்.ஜி.பி. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்  ஃப்ரெண்ட்ஸ் ஆப் போலீசில் மாணவர்கள் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இளைய தலைமுறையினர் தான் வாழும் சமுதாயத்தில் அவர்களின் நல்ல பங்களிப்பை அளிக்கும் விதமாக இந்த ஃப்ரெண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த அமைப்பில் இணைந்து மாணவர்கள் வாரத்தில் இரண்டு முறையாவது சமுதாய பணியாற்ற வேண்டும் என இந்த நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளனர். மேலும்  மாணவர்கள் காவல் துறையுடன் இணைந்து செயல்படும்போது சமுதாயத்தில் நடைபெறும் நவீன குற்றங்களை தெரிந்து கொள்ளலாம். இதன் மூலம் அவர்கள் மட்டும் விழிப்புணர்வு அடைவது மட்டுமல்லாமல் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தலாம்.

தற்போதைய காலகட்டத்தில் சைபர் கிரைம் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. இதனால் விழிப்புணர்வு இல்லாத பாமர மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த பாதிப்புகளிடமிருந்து பொது மக்களை மீட்க மாணவர் சமுதாயம்  காவல்துறையுடன் ஒன்றிணைய வேண்டும் எனவும் இந்த கூட்டத்தில் தெரிவித்தனர். அதேபோல டாக்டர்.என்.ஜி.பி.கலை  அறிவியல் கல்லூரியின் மாணவ மாணவியர்கள் பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸின் சமுதாய பணிகளுக்காக சரவணம்பட்டி காவல் சரகத்திற்குட்பட்ட பகுதிகளிலும் பீளமேடு காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியிலேயேயும் தொடர்ந்து சேவையாற்றி வருவதாக கல்லூரி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

இந்நிகழ்ச்சியை துவங்கி வைத்து மாணவர்களிடம் பேசிய கோவை மாநகர துணை ஆணையாளர், தர்மராஜன் ஐ.பி.எஸ். கூறுகையில் கல்வியில் சமுதாய பாடங்கள் குறைந்து வருகிறது. இதனால் மாணவர்களிடம் சமுதாய சிந்தனையும் குறைந்து வருகிறது. இந்த நிலை மாறவேண்டும். மாணவர்கள் அர்த்தமான வாழ்க்கை வாழ வேண்டும்.வெறும் பணம் ஒன்றே குறிக்கோள் என்று வாழ்ந்தால் அது அர்த்தமான வாழ்க்கையாக இருக்காது.மாணவர்கள் சமுதாய சிந்தனையோடு பொது மக்களுக்கு உதவும் நோக்கத்தில் செயல்பட வேண்டும்.

மேலும் நிகழ்ச்சியில் டாக்டர்.என்.ஜி.பி.கலை  அறிவியல் கல்லூரியின் செயலாளர் டாக்டர். தவமணி பழனிசாமி, நாட்டு நலப்பணித் திட்டம் ஒருங்கிணைப்பாளர்  டாக்டர். எஸ். நமசிவாயம், பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் கோவை ஒருங்கிணைப்பாளர் செந்தில் குமார் மற்றும் காவல் துறையினர்  பலர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் ஃப்ரெண்ட்ஸ் ஆஃப் போலிஸ் அமைப்பில் சிறப்பாக பணியாற்றிய மாணவர்களுக்கும், ஏ டி எம் இயந்திரங்களில் ஸ்கிம்மர் கருவிகளை கொண்டு கொள்ளையடித்தவர்களை கண்டுபிடிக்க முக்கிய பங்கு ஆற்றிய சைபர் கிரைம் போலிசாருக்கும் விருதுகள் வழங்கி பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டது.