மண் வளமாக இருந்தால்தான் விவசாயம் செய்ய முடியும்! – பிக் பாஸ் புகழ் பாலாஜி முருகதாஸ்

உலக பூமி தினத்தை முன்னிட்டு மண் காப்போம் இயக்கம் சார்பில் மண் வளப் பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி சென்னையில் வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்றது.

சென்னையில் விமான நிலைய வளாகத்தில் நடந்த இந்நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான தன்னார்வலர்கள் Savesoil டி-சர்ட்களை அணிந்து விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி நின்றனர். மேலும், அங்கு வந்த பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை விநியோகித்து மண் அழிவு குறித்தும், அதனால் ஏற்பட போகும் பேராபத்துக்கள் குறித்தும் எடுத்துரைத்தனர்.

உலக பூமி தின சிறப்பு நிகழ்ச்சியில் பேசிய பிக் பாஸ் புகழ் பாலாஜி முருகதாஸ், “பிக் பாஸ் முடிந்து வெளியே வந்தபிறகு மண் காப்போம் திட்டம் பற்றி கேள்விப்பட்டேன். மண் காப்பது என்பது இதுவரை பேசப்படாத ஒரு விஷயம். மேல் மண் எனப்படும் 12 முதல் 15 அங்குலம் வரையிலான மண் வளமாக இருந்தால்தான் விவசாயம் செய்ய முடியும். இத்தகைய நல்ல காரியங்களுக்கு நான் எப்போது அழைத்தாலும் வந்து ஆதரவளிக்கத் தயாராக இருக்கிறேன்.” என்றார்.

தொடர்ந்து சென்னை விமானநிலைய இயக்குனர் ராஜு பேசுகையில்: “இந்நிகழ்வை நடத்திட சென்னை விமான நிலையத்தை தேர்ந்தெடுத்த ஈஷா பவுண்டேஷனிற்கு நன்றி. சதகுரு அவர்கள் பல திட்டங்களை திட்டமிடுவது மட்டுமில்லாமல், அதனை முன்னின்று நடத்துகிறார். நதிகளை மீட்போம், காவேரி கூக்குரல் போன்ற திட்டங்களை வெற்றிகரமாக நிகழ்த்திய சத்குரு, இதனை எடுத்திருப்பது நமது இப்போதைய முக்கியமான தேவை. இது ஒரு மிகக்கவனமாக திட்டமிடப்பட்ட இயக்கம். இதில் உலக மக்கள் அனைவரின் ஆதரவையும் கோருவதற்கு சத்குரு எடுக்கும் முயற்சிகள் அபாரமானது.

சுற்றுச்சூழல் காக்கும் முயற்சியில் ஈஷாவின் இத்தகைய செயல்பாடுகள் பெரும்பான்மையான மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதாக இருக்கிறது. விமான நிலைய இயக்குனரகம் எப்போதுமே இத்தகைய இயக்கங்களுடன் இணைந்து சமூக பணிகளை செய்து வருகிறது. இத்திட்டம் வெற்றி பெற இந்திய விமான இயக்குனரகம் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களையும் ஆதரவையும் தெரிவிக்கிறோம்.” எனப் பேசினார்.

பிரபல நடன இயக்குனர் கலா மாஸ்டர் பேசுகையில்: “மண் காப்பது குறித்து பேசுவதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. சுற்றுச்சூழல் குறித்து பேசும் நம்மில் பலர் மண் பற்றி பேசுவதில்லை. சத்குரு இதைத்துவங்கியது மிக அவசியமான தேவை. நமது குழந்தைகளுக்காக, அவர்களின் எதிர்கால நல்வாழ்விற்காக என்னுடைய முழு ஆதரவையும் இவ்வியக்கத்திற்கு தருவதில் எனக்கு பெரும் மகிழ்ச்சி” என்றார்.

சென்னை மட்டுமின்றி தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.