தொழில்நுட்ப புரட்சி செய்ய காத்திருக்கும் லண்டனின் ஒன்றுமில்லாத நிறுவனம்!

‘அதிகமாக ஏதும் வேண்டாம், நான் செலுத்தும் காசிற்கு இணையான தரமான பொருளோ சேவையோ கிடைத்தாலே போதும்’ என்பது தான் இன்று எல்லா வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

எலக்ட்ரானிக் சாதனங்கள் இன்று பல மடங்கு ‘ஸ்மார்ட்’ ஆகிவிட்டது. அதிலும் ஸ்மார்ட் போன்களை பற்றி சொல்லவா வேண்டும். ஆனால் இந்த துறையில் குறைந்த காசிற்கு அதிகமான அம்சங்கள் கிடைத்தால், ஒன்று, நமக்கு தெரியாமல் நம்மிடம் தகவலை சுருட்டும் மென்பொருள்கள் இருக்கும், அல்லது ஒட்டுமொத்த தரத்தில் ஏதாவது குறை இருக்கும்.

இது இரண்டுமே இடையூறாக இருக்காமல், ஒரு வாடிக்கையாளர் தான் வாங்கும் ஸ்மார்ட் போனின் விலை குறைவாகவும், தரத்திலும், அம்சங்களிலும் அசத்தலாக இருக்கவேண்டும் என்று துவங்கப்பட்ட நிறுவனம் தான் ஒன் பிளஸ் (OnePlus).

இதை பீட் லவ் மற்றும் கார்ல் பே என்ற இரு இளம் ஆசிய தொழில்முனைவோர் 2013 ஆம் ஆண்டின் இறுதியில் துவங்கினர். துவக்கத்திலிருந்தே கொள்கையில் பிடித்தமாக இருந்த ஒன் பிளஸ், பிற பெரும் ஸ்மார்ட் போன் உற்பத்தியாளர்களை விட சிறப்பான ஸ்மார்ட் போன்களை உருவாக்கி, வாடிக்கையார்களின் நம்பிக்கையை பெற்றனர்.

 

பிற்காலத்தில் புது புது தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்ய, இந்த ஒன் பிளஸ் நிறுவனத்தின் தயாரிப்புகளின் விற்பனை விலை ராக்கெட் வேகத்தில் ஏறியது.

அத்துடன் ஒப்போ (Oppo), ரியல் மீ (Real Me), விவோ (Vivo) ஆகிய ஸ்மார்ட் போன் நிறுவனங்களை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் BBK எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் ஒன் பிளஸை விலைக்கு வாங்கிய பின் ஒன் பிளஸின் தனித்தன்மை குறைந்து வருவதாக அதன் நெடுங்கால வாடிக்கையாளர்கள் தெரிவிக்கத் துவங்கினர்.

 

இதற்கு இடையே சில காரணங்களால் ஒன் பிளஸிலிருந்து கார்ல் பே நன்றிகளை தெரிவித்தவாறு 2020 இல் வெளியேறினார். ஒன் பிளஸின் ஸ்மார்ட் போன்களை வடிவமைப்பது, நிறுவனத்தை சந்தையில் தெம்பாக நிற்கவைப்பது எல்லாம் கார்ல் பேவிற்கு கைவந்த கலை.

இவர் தற்போது நத்திங் (Nothing) என்ற லண்டனை மையமாக கொண்ட எலக்ட்ரானிக் & தொழில்நுட்ப நிறுவனத்தை உருவாக்கியுள்ளார். துவக்கத்திலிருந்தே உயரிய இலக்கு ஒன்றை கார்ல் வைத்துளார் – தன்னுடைய நிறுவனம் ஆப்பிள் நிறுவனத்தின் பொருட்களுக்கு மாற்றாக இருக்கவேண்டும் என்பதே அது.

கார்ல் பே தன்னுடைய நிறுவனத்தை துவங்கியது முதலே அதில் முதலீடு செய்ய பெரும் புள்ளிகள் பலரும் விருப்பம் தெரிவித்து, முதலீடும் செய்து வருகின்றனர்.

சிறந்த தொழில்நுட்பம் என்பது அழகானது, அதன் அனுபவம் இயற்கையானதாக இருப்பதை போன்ற உணர்வளிக்கும்.

இங்கு போதுமான அளவு தொழில்நுட்பம் முன்னேறும்போது, ​​​​அதனால் விளைந்த பொருட்களை மக்கள் உபயோகிக்கும் போது அது நல்ல அனுபவத்தை வாடிக்கையாளர் முன் கொண்டு சேர்க்கவேண்டும். அந்த சாதனமோ பின்னணியில், எதுவும் இல்லை என்ற உணர்வை ஏற்படுத்த வேண்டும், அதுதான் நத்திங், என்று கார்ல் துவக்கத்தில் கூறினார்.

இந்த நிறுவனத்தின் முதல் படைப்பு நத்திங் இயர் 1 (Nothing ear 1). இது ஒரு ப்ளூடூத் சாதனம். இதற்கு முன் இல்லாத அளவு வடிவமைப்பில் வித்தியாசம் காட்டிய இந்த பொருள், விலை சற்று தூக்கலாக இருந்தாலும் பெரும் வரவேற்பை உலகத்தில் பல நாடுகளில் பெற்றுள்ளது.

இதன் வெற்றிக்கு பிறகு, நத்திங் நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட் போன் இன்னும் சில வாரங்களில் சந்தைக்கு வரவிருக்கிறது. விலை எப்படி இருந்தாலும், தரம், திறன், அம்சம், தனித்துவம் ஆகியவையில் சக்கை போடு போடும் என்று மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் காத்திருக்கிறார்கள் வாடிக்கையாளர்கள்.

இந்நிறுவனத்தின் பெயர் முதல் அதன் முதல் படைப்பு வரை எல்லாமே புதிதாக இருக்கிறது. பார்ப்போம் இந்த ஒன்றுமில்லாத நிறுவனம் நம்பர் 1 ஆக தலைதூக்குமா என்று!

Article by David Karunakaran.S