பணிநீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து தற்காலிக செவிலியர்கள் தர்ணா

கொரோனா காலத்தில் தற்காலிகமாக பணியமர்த்தப்பட்ட செவிலியர்களை தமிழக அரசு பணி நீக்கம் செய்ததை கண்டித்து 80 க்கும் மேற்பட்ட செவிலியர்கள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழகத்தில் கொரோனா சிகிச்சை அளிக்கப்படும் அரசு ஆஸ்பத்திரிகளில் தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் கொரோனா பிரிவுக்கு செவிலியர்கள் பணியமர்த்தப்படனர்.

கோவை மாவட்டத்தில் கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்ட கோவை அரசு ஆஸ்பத்திரி மற்றும் இ.எஸ்.ஐ ஆஸ்பத்திரிகளில் 98 செவிலியர்கள் தற்காலிகமாக பணியமர்த்தப்பட்டனர்.

அவர்களுக்கு மாதம் ஊதியமாக ரூ.14 ஆயிரமும், ஊக்கத்தொகையாக ரூ.20 ஆயிரம் தருவதாக உறுதி அளிக்கப்பட்டது.

ஆனால், அந்தந்த மாதத்தில் ஊதியம் முறையாக வழங்கப்படவில்லை. ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்பட்ட செவிலியர்களின் வேலை காலம் இன்றோடு முடிவடைகிறது.

இந்த நிலையில், ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்பட்ட செவிலியர்கள் 80 க்கும் மேற்பட்டோர் கோவை கலெக்டர் அலுவலகத்தில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து செவிலியர்கள் கூறியதாவது:

கொரோனா காலத்தில் யாருமே பணிக்கு வராத நிலையில் நாங்கள் எங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் பணிக்கு சென்று கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்தோம்.

தற்போது ஒப்பந்த காலம் முடிந்ததால் எங்களை பணியை விட்டு செல்லுமாறு கூறுகின்றனர். கோவை அரசு ஆஸ்பத்திரியில் பணியாற்றிய செவியலியர்களுக்கு 3 மாத ஊதியம் இன்னும் வழங்கப்படவில்லை. எனவே கொரோனா காலத்தில் பணியாற்றிய செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். நிலுவையில் உள்ள ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும் என அவர்கள் கூறினர்.

பின்னர் மாவட்ட ஆட்சியரைசந்தித்து மனு அளித்தனர்.