பஞ்சு விலை உயர்வால் ஆலைகளை மூடும் அபாயம் – சிஸ்பா

வரலாறு காணாத பஞ்சு விலை உயர்வின் காரணமாக ஆலைகள் மூடும் அபாயம் உள்ளது என சிஸ்பா (தென்னிந்திய நூற்பாலைகள் சங்கம்) தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சிஸ்பா தலைவர் செல்வன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

வரலாறு காணாத பஞ்சு விலை உயர்வால், நாட்டின் பஞ்சு நூற்பாலைகள் குறிப்பாக தமிழ்நாட்டின் நூற்பாலைகள் பெரும் பொருளாதார இழப்பை சந்தித்து வருகின்றன. நூற்பாலைகள் அன்றாட தேவைக்கு கூட பஞ்சு வாங்க முடியாத சூழலில் உள்ளது. இதனால் ஆலைகளில், உற்பத்தியை குறைக்கும் நிலை உருவாகி வருகிறது. அதுமட்டுமல்லாமல் சிறு மற்றும் நடுத்தர நூற்பாலைகள் மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டு வருகிறது என சிஸ்பா தெரிவித்துள்ளது.

பஞ்சு நுகர்வு குறைவதோடு, பருத்தி விவசாயிகளையும் பாதிக்கச் செய்யும் அபாய நிலை உருவாகும். இது விவசாயத்திற்கு அடுத்தபடியாக உள்ள மிகப்பெரிய வேலை வாய்ப்பை வழங்கும் ஜவுளித் தொழிலில், வேலையின்மைக்கு வழிவகுக்கும் என அச்சம் நிலவுகிறது.

தற்போது இந்திய பருத்தி விளைச்சல் மிகக் குறைந்து காணப்படுகிறது என்பதை சுட்டிக் காட்ட விரும்புகிறோம். ஜின்னிங்க்கு வரும் அனைத்து ரகமான பருத்தியை, பல்வேறு பருத்தியுடன் கலக்கப்படுவதால், நூற்பாலைகளுக்கு தரமான பஞ்சு கிடைப்பதில்லை. பஞ்சு கொள்முதல் செய்ய, ஜின்னர்களை தொடர்பு கொண்டால், அவர்கள் எங்களிடம் பருத்தி கையிருப்பு இல்லை என தெரிவிக்கின்றனர்.

தற்போதுள்ள பஞ்சு விலை கண்டிக்கு (355 கிலோ) ரூ. 97,000/- இருந்து ரூ. 50,000/- ஆக உடனடியாக சரிந்தால், விவசாயி, ஜின்னர்கள், நூற்பாலைகள், துணி மற்றும் ஆடை உற்பத்தியாளர்கள் என ஒட்டு மொத்த ஜவுளி சங்கிலியும் பெரும் சிக்கலில் தவிக்கும் அபாயம் ஏற்படும்.

இதுபோன்று பஞ்சின் விலை அபரிமிதமாக உயர்ந்து கொண்டே போவதால், நூல் விலையும் உயர்ந்து சமூகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை உருவாக்கும் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிஸ்பாவின் வேண்டுகோள்: மத்திய அரசு போர்கால அடிப்படையில் தாமதமின்றி உடனடியாக பஞ்சின் மீது விதிக்கப்பட்டுள்ள 11% இறக்குமதி வரியை ரத்து செய்ய வேண்டும்.

இந்தியப் பருத்திக் கழகம் இறக்குமதி வரியின்றி பஞ்சை இறக்குமதி செய்து நமது நாட்டின் நூற்பாலைகளுக்கு நல்ல தரம் வாய்ந்த பஞ்சை நியாமான விலைக்கு விநியோகம் செய்ய வேண்டும். MCX மற்றும் NCDEX கீழ் பஞ்சு வர்த்தகத்தை முற்றிலும் தடை செய்ய வேண்டும்.

விவசாயிகள், ஜின்னிங், பஞ்சு வியாபாரிகள் போன்ற அனைவரும் புள்ளி விவரங்களை கட்டாயம் வெளியிட வேண்டும் அதற்கான வழிமுறைகளை கண்டறிந்து மத்திய அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும்.

இன்றைய கால சூழ்நிலையில் தரமான BT பருத்தியில், புதிதாக வந்துள்ள பருத்தி விதைகளை விவசாயிகளுக்கு அறிமுகம் செய்து, தரமான பருத்தி உற்பத்தியை அதிகரிக்க, விவசாயிகளுக்கு மானியம் வழங்கி, அவர்களை ஊக்குவிக்க செய்ய வேண்டும்.

உள்ளிட்ட கோரிக்கைகளை தென்னிந்திய நூற்பாலைகள் சங்கம் முன் வைத்துள்ளது.