100 வகையான இட்லி தயாரித்து ராமகிருஷ்ணா கல்லூரி மாணவர்கள் அசத்தல்

ஶ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் உணவு மற்றும் விடுதி மேலாண்மைத் துறை சார்பில் இட்லி திருவிழா நடைபெற்றது.

உலக இட்லி தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி ஶ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் பாரம்பரிய இட்லி திருவிழா நடைபெற்றது. இதில் கல்லூரியின் உணவு மற்றும் விடுதி மேலாண்மைத்துறை மாணவ மாணவிகள் 100 விதமான இட்லிகளையும், அதற்கேற்ப சுவையான 20 விதமான சட்னி, சாம்பாரையும் தயாரித்து அசத்தினர்.

இத்திருவிழாவிற்கு கல்லூரியின் முதல்வர் மற்றும் செயலர் சிவக்குமார் தலைமை வகித்தார். ஐக்கிய நாட்டில் உள்ள லீமிங்டன் ஸ்பா நட்சத்திர விடுதியின் சமையல் கலை நிபுணர் உமா சங்கர் பாலகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, இட்லி திருவிழாவைத் தொடங்கி வைத்தார்.

இதில் பாரம்பரிய இட்லி வகைகளான கம்பு இட்லி, தயிர் இட்லி, ரொட்டி இட்லி, ஆப்பிள் இட்லி, மல்லி இட்லி, பள்ளிபாளையம் இட்லி, பருப்பு இட்லி, சிக்கன் இட்லி, முட்டை இட்லி, காளான் இட்லி, கேரட் இட்லி, தேங்காய் இட்லி, அடை இட்லி, வாழை இட்லி, கொத்து இட்லி, கொள்ளு இட்லி, தம்ளர் இட்லி, இட்லி பஜ்ஜி, குல்ஃபி இட்லி, கருப்பட்டி இட்லி, ரவை இட்லி, காய்கறி இட்லி என விதவிதமான இட்லிகள் இடம் பெற்றிருந்தன.

இதேபோல் தேங்காய் சட்னி, வேர்க்கடலை சட்னி, கேரட் சட்னி, வெங்காய சட்னி, பூண்டு சட்னி, பிரண்டை சட்னி, பீட்ரூட் சட்னி, மிளகாய் சட்னி, பேரீட்சை சட்னி, தயிர் சட்னி, மாங்காய் சட்னி, தக்காளி சட்னி, சாம்பார் உள்ளிட்ட சட்னி, சாம்பார் வகைகளைத் தயாரித்தனர்.

சிறப்பு விருந்தினர் பேசுகையில், மாணவர்கள் ஒரு மிகப்பெரிய காரியத்தை செய்துள்ளனர். அவர்களின் ஸ்டாலை நான் பார்வையிட்டேன். இட்லிகளை பிரமாதமாக சமைத்துள்ளனர். நிச்சயமாக இங்கிருந்து பல இளம் சமையல் நிபுணர்கள் உருவாகுவார்கள், சாதிப்பார்கள் என்று நான் நம்புகிறேன். ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தை மீண்டும் அதிகப்படியான மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கு இது ஒரு முயற்சியாக இருக்கும் என தெரிவித்தார்.

கல்லூரி முதல்வர் கூறுகையில், உலக இட்லி தினமான இன்று எங்கள் மாணவர்கள் 100 விதமான இட்லிகளை தயாரித்துள்ளனர். கடந்த மூன்று தினங்களாகவே இதற்கான முயற்சிகளை மாணவர்கள் எடுத்து வந்தனர். அவர்களின் முயற்சிக்கு என் பாராட்டுகள் எனக் கூறினார்.

இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உணவு மற்றும் விடுதி மேலாண்மைத் துறைத்தலைவர் தீனா மற்றும் துறைப் பேராசிரியர்கள் செய்திருந்தனர்.