சட்டமும், நடைமுறையும் மக்களுக்காகவே!

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மத்திய அரசு நியமித்து, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசை கண்ணில் விரலை விட்டு ஆட்ட ஒரு பதவி இருக்கும் என்றால் அது ஆளுநர் பதவி ஆகத்தான் இருக்க முடியும். மத்திய அரசை குடியரசுத் தலைவர் கலைக்க முடியும். மாநில அரசை மத்திய அரசு நினைத்தால் கலைக்க முடியும். ஆனால் ஆளுநர் பொறுப்பு அப்படி அல்ல, அவரை நியமித்து மத்திய அரசு மனது வைத்தால் மட்டுமே ஏதாவது செய்ய முடியும்.

1960 களிலேயே இந்த ஆளுநர் பதவி குறித்து கேள்விகள் எழத் தொடங்கி விட்டன. குறிப்பாக திமுக, ஆட்டுக்கு தாடி எதற்கு, நாட்டு கவர்னர் எதற்கு என்று கேள்வி கேட்டது. 50 ஆண்டுகளுக்குப் பிறகும் அந்த கேள்வி அவ்வப்போது பொதுவெளியில் எழுந்து கொண்டுதான் இருக்கிறது. தற்போதும் அது எதிரொலிக்க தொடங்கி இருக்கிறது. எப்போதெல்லாம் மத்திய மாநில அரசுகளில் எதிர்க் கருத்துக்கள் கொண்ட இரு கட்சிகள் ஆட்சியில் அமர்கிறதோ, அப்பொழுதெல்லாம் இது தொடர்கிறது.

சமீபத்தில் தமிழகத்தில் ஆட்சிக்கு வந்த திமுக அரசு, பாரதிய ஜனதா கட்சிக்கு எதிரான கொள்கை கொண்டது. இதற்கு முந்தைய ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இருந்தபொழுது இருந்த அதிமுக, பாஜகவின் தோழமைக் கட்சி. அதனால் பெரிய அளவில் சிக்கல் எழவில்லை. ஆனால் தற்போது வந்துள்ள ஆளுநர் ரவி வந்த பிறகு இந்த மோதல் பொதுவெளியில் நடக்கத் தொடங்கியுள்ளது.

முதலில் நீட் தேர்வு குறித்த சிக்கல். இதில் மத்திய அரசும், மாநில அரசும் இருவேறு கொள்கைகள் கொண்டுள்ளனர். நீட் தேர்வை ரத்து செய்வதை வாக்குறுதி கொடுத்து தான் திமுக ஆட்சிக்கு வந்தது. அந்த வகையில் நீட் தேர்வை நீக்க வேண்டி கேட்கிறது. இதன் சாதக பாதகங்கள் வேறு விஷயம். நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி ஒரு மசோதா தமிழக அரசால் ஆளுநருக்கு அனுப்பப்படுகிறது. அதனை குடியரசுத் தலைவருக்கு அனுப்ப வேண்டிய ஆளுநர் தனது அதிகாரத்தை பயன்படுத்தி 142 நாட்கள் அனுப்பாமல் வைத்திருக்கிறார். பிறகு மசோதாவை தமிழக அரசுக்கு திருப்பி அனுப்புகிறார்.

தமிழக அரசு சட்டசபையில் மீண்டும் தீர்மானம் நிறைவேற்றி, மீண்டும் அதை ஆளுநருக்கு அனுப்புகிறது. இந்த முறை ஒரு மாதத்துக்கும் மேல் ஆகிறது. ஒருபுறம் தமிழக முதல்வர் ஆளுநரை சந்தித்து மசோதாவை அனுப்புமாறு வேண்டுகோள் வைக்கிறார். இன்னொருபுறம் திமுகவின் பாராளுமன்ற உறுப்பினர் டி.ஆர். பாலு ஆளுநரை மாற்றுங்கள் என்று மத்திய அரசுக்கு காரசாரமாகப் பேசி கோரிக்கை வைக்கிறார்.

விடுதலை பெற்ற இந்தியா போன்ற ஜனநாயக நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளுக்கு ஒரு பொறுப்பும் கடமையும் உள்ளது. அடிப்படையில் கூட்டாட்சி தத்துவத்தில் இயங்க வேண்டிய மத்திய அரசு, ஆளுநர் பதவி மூலம் மாநில அரசுகளுக்கு செக் வைத்து சிக்கலை உண்டாக்குவது தொடர்ந்து வருகிறது.

இதைப் போலவேதான் கல்விக்கொள்கையும். நாடு தழுவிய ஒரு கல்விக் கொள்கையை மத்திய அரசு கொண்டுவர திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது. ஒப்பீட்டளவில் கல்வித்துறையில் முன்னேறியதாக கருதப்படும் தமிழக அரசு இதனை பல முனைகளிலும் எதிர்க்கிறது. ஒரே விழாவில் ஆளுநரும், முதல்வரும் இருவேறு கருத்துக்களை தங்கள் தரப்பு வாதங்களை எடுத்து வைக்கிறார்கள். இந்தியா 1947 க்கு பிறகு உருவானது அல்ல என்று ஆளுநரும், பன்மைத்துவம் நமது அடிப்படை, ஒரே நாடு ஒரே கொள்கை என்பது பொருந்தாது என்று தமிழக முதலமைச்சரும் கூறுகிறார்கள்.

விடுதலை பெற்ற இந்தியா போன்ற ஜனநாயக நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளுக்கு ஒரு பொறுப்பும் கடமையும் உள்ளது. அடிப்படையில் கூட்டாட்சி தத்துவத்தில் இயங்க வேண்டிய மத்திய அரசு, ஆளுநர் பதவி மூலம் மாநில அரசுகளுக்கு செக் வைத்து சிக்கலை உண்டாக்குவது தொடர்ந்து வருகிறது. குறிப்பாக வேறு எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநர்கள் மாநில அரசுக்கு எதிராக அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவிப்பதும், கண்ணுக்கு தெரியாத முட்டுக்கட்டை போடுவதும் தொடர்கிறது.

மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி அங்குள்ள ஆளுநரால் பல சிரமங்களை எதிர் கொள்கிறது. கேரளாவில் இடதுசாரி அரசும் கடுமையாக எதிர் கொள்ள வேண்டியிருக்கிறது. தமிழகத்திலும் அவ்வப்போது உரசல் எழுகிறது. இதுவே பாரதிய ஜனதா கட்சி ஆளும் கர்நாடக மாநிலத்தில் இந்த நிலை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

என்னதான் அரசியல் சட்டப்படி ஆளுநர் செயல்பட்டாலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மாநில அரசை கண்காணிக்கும் பணியைத்தான் செய்கிறார். தேவைப்படும் இடங்களில் முட்டுக்கட்டை போடும் பணியையும் செய்து வருகிறார். இது முழுக்க முழுக்க மத்திய அரசின் கைகளில் அதிகாரம் இருக்கிறது என்பதைத்தான் காட்டுகிறது. மாநில அரசுகள் எப்போதும் நியமிக்கப்பட்ட அரசுகள் அல்ல, அவை மத்திய அரசைப் போலவே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவை. இதனை புரிந்து கொண்டு ஆளுநர் செயல்பட வேண்டும்.

சட்டத்தில் இடமுண்டு என்பதற்காக தாமதப்படுத்துவதைத் தவிர ஒரு மசோதாவை ஒரு ஆளுநர் வேறு ஒன்றும் செய்ய முடியாது. குடியரசுத் தலைவருக்குத்தான் மசோதாவை நிராகரிக்க ஒப்புக்கொள்ள, அல்லது விளக்கம் கேட்க, வல்லுநர் குழு அமைக்க அதிகாரம் உண்டு. அது அவரின் அதிகாரம். இடையில் ஆளுநர் ஏன் தாமதம் என்ற பெயரில் மக்களை குழப்பத்தில் ஆழ்த்த வேண்டும்.

நம் நாட்டில் மக்களுக்காகத்தான் சட்டமும் நடைமுறையும் அரசாங்கமும். இதில் மக்கள் பாதிக்கப்படும் போது இது குறித்து சிந்திப்பதும், விவாதிப்பதும் மிகவும் அவசியமானது. மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் மத்திய அரசையும், மாநில அரசையும் அவர்களின் நடைமுறை தவறு என்று கருதினால் தண்டிப்பதற்கு அடுத்த தேர்தல் உண்டு. பதவியில் இருக்கும்போதே டிஸ்மிஸ் செய்வதற்கும் சட்டத்தில் இடமுண்டு. ஆனால் நியமிக்கப்படும் பதவியான ஆளுநரை கேள்வி கேட்க, நியாயம் கேட்க எவ்விதமான தளமும் இல்லை என்பதே நடைமுறை உண்மை.

மத்திய அரசு ,மாநில அரசு ஆளுநர் அனைவருமே ஜனநாயக நாட்டில் மக்கள் பணி செய்ய உருவாக்கப்பட்ட அமைப்பு களாகும். மக்கள் நலனை கருத்தில் கொண்டு செயல்படுவதுதான் நியாயம், வரவேற்கத்தக்கது. ஏனென்றால் ஜனநாயகத்தில் மக்கள்தான் என்றென்றும் எஜமானர்கள்!