ஏழ்மையை போக்கும் வளர்ச்சிக்கான பட்ஜெட்

இந்திய தொழில் வர்த்தக சபை

தமிழக அரசின் 2022 – 23 க்கான பட்ஜெட், முதலீடுகளை ஈர்க்கும் வகையிலும், ஏழ்மையை போக்கும்   வகையிலும், வேலைவாய்ப்பை அளிக்கின்ற வகையிலும் இருப்பதாக இந்திய தொழில் வர்த்தக சபை கோவை  தலைவர் பாலசுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த பத்திரிகை செய்தியில் அவர் கூறியிருப்பது: கோவை உள்ளிட்ட பிற பகுதிகளில் அறிவிக்கப்பட்டுள்ள 50 ஆயிரம் கோடி அளவிலான தொழிற்பேட்டை,100 கோடி அளவில் ஏற்றுமதிக்கான கட்டமைப்பு, கட்டடம் மற்றும் மற்ற கட்டமைப்புக்கான ஒற்றைச்சாளர முறை, மாநிலம் முழுவதும் சுமார் 7300 கோடி அளவில் நீர் வளர்ச்சிக்கான திட்டங்கள், குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்கான 6 கூட்டு குடிநீர் திட்டங்கள் ஆகியவை வரவேற்கத்தக்கது.

இல்லம் தேடி கல்வி திட்டத்துக்கு மேலும் நிதி ஒதுக்கீடு, அரசு தனியார் நிறுவனங்களுடன் இணைந்து திறன் மேம்படுத்துவதற்கான திட்டங்கள், தேங்காய் நார் தொழில் அபிவிருத்திக்காக தனியாக 50 கோடி ரூபாய் செலவில் ஒரு கழகம், இ டெண்டர் முறையில் அரசாங்கத்துக்கான கொள்முதல்களை ஆரம்பிப்பது ஆகிய அனைத்து முயற்சிகளையும் இந்திய தொழில் வர்த்தக சபை கோவை வரவேற்கிறது

அதேநேரத்தில் சிறுகுறு தொழில் சம்பந்தமான சுந்தர தேவன் அவர்கள் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழுவிடம் பல்வேறு தொழில் அமைப்புகள் அளித்த ஆலோசனைகள் இந்த பட்ஜெட்டில் இடம் பெறாதது ஏமாற்றம் அளிக்கிறது. மேலும் இது வளர்ச்சிக்கான பட்ஜெட் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.