தமிழ்நாடு வேளாண் பல்கலை சார்பில் விதை உற்பத்தி தொழில்நுட்பப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் சார்பில் விவசாயிகளுக்கு பயறு வகைப் பயிர்களில் தரமான விதை உற்பத்திக்கான தொழில்நுட்பப் பயிற்சி நடைபெற்றது.

பயிர் இனப் பெருக்கம் மற்றும் மரபியல் பயறுவகை துறையில் செயல்பட்டு வரும் தேசிய வேளாண்மை அபிவிருத்தி திட்டத்தின் மூலம், பயறு வகைப் பயிர்களில் தரமான விதை உற்பத்தி செய்வதற்கான தொழில்நுட்பப் பயிற்சி திருப்பூர் மாவட்டம், வேளாண்மை அறிவியல் நிலையத்தில் நடைபெற்றது.

பயறு வகைத் துறையின் பேராசிரியர் மற்றும் தலைவர் ஞானமலர், தரமான விதை உற்பத்தி மற்றும் பயறு வகை விதை உற்பத்தி பெருக்கம் குறித்து விளக்கமளித்தார். பயிர் இனப் பெருக்கம் மற்றும் மரபியல் பேராசிரியர் ஜெயமணி, பயறு வகை விதை உற்பத்தியில் இனத் தூய்மைப் பராமரிப்பின் முக்கியத்துவம் மற்றும் பராமரிப்பு வழிமுறைகளைப் பற்றி விளக்கமளித்தார்.

பயறு வகைப் பயிர்களில் மேற்கொள்ள வேண்டிய உழவியல் தொழில்நுட்பங்கள் பற்றி உழவியல், உதவிப் பேராசிரியர் அனிதா ஃபானிஷ், மற்றும் பூச்சி மற்றும் நோய் மேலாண்மை பற்றி பயிர் நோயியல் உதவிப் பேராசிரியர் கார்திபா விளக்கமளித்தனர்.

விதை அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் உதவிப் பேராசிரியர் கதிரவன், தரமான விதை உற்பத்தியின் முக்கியத்துவம் மற்றும் பயறு வகை விதை உற்பத்தி தொழில் நுட்பம் பற்றி விளக்கமளித்தார்.

 

Source: Press Release