அதிகாரத்தை அதிகரிக்க சைலன்ட் மிரட்டலா?

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக 70 சதவீத வெற்றிகளையும், அதிமுக 15 சதவீத வெற்றிகளையும், சுயேச்சைகள் 15 சதவீத வெற்றிகளையும் பெற்றுள்ளனர். மேலும், திமுக 43 சதவீத வாக்குகளையும், அதிமுக 25 சதவீத வாக்குகளையும் பெற்றுள்ளது. திமுக மற்றும் அதிமுக இடையே கிட்டதட்ட 18 சதவீதமும், திமுக மற்றும் அதிமுக அணிகளுக்கு இடையே 25 சதவீதமும் வாக்கு வித்தியாசம் உருவானது மாநிலம் முழுவதும் அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் இடையே அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.

ஜெயலலிதா மறைவுக்குப்பின் 2019 மக்களவைத் தேர்தல், 2019 ஊரக உள்ளாட்சித் தேர்தல், 2021 சட்டப்பேரவைத் தேர்தல், விடுபட்ட 9 மாவட்டங்களில் நடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலோடு, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலையும் சேர்த்தால் தொடர்ந்து 5 வது தோல்வியை அதிமுக சந்தித்திருப்பது அக்கட்சி தொண்டர்களிடையே மனவருத்தத்தை உருவாக்கியுள்ளது.

இதன் விளைவு அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா, டி.டி.வி.தினகரன் உள்ளிட்ட நிர்வாகிகளை மீண்டும் இணைத்துக்கொண்டு கட்சியை வலுப்படுத்த வேண்டும் என தேனி மாவட்டத்தில் இருந்தே அதுவும், அதிமுக தலைமை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் பண்ணைத் தோட்டத்தில் நடந்த கூட்டத்தில், பன்னீர்செல்வத்தின் மனசாட்சியான சையதுகான் தலைமையில் தீர்மானம் நிறைவேற்றி இருப்பது மாநிலம் முழுவதும் திடீர் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதைத்தொடர்ந்து சசிகலாவை மீண்டும் அதிமுகவில் இணைக்க பன்னீர்செல்வம் முயற்சி எடுக்கிறாரோ என்ற தோற்றம் அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் இடையே எழுந்தது. அதிமுகவில் அனைத்து தரப்பினரும் முடிவு செய்த பிறகு, அமமுக தொண்டர்களின் முடிவுக்கு கட்டுப்படுவேன் என்று டிடிவி.தினகரனும் கருத்து தெரிவித்தார். ஆனால், எவ்வித கருத்தும் தெரிவிக்காத சசிகலா, தென்மாவட்டங்களில் திடீர் சுற்றுப்பயணம் செய்யத் திட்டமிட்டுள்ளார்.

சசிகலாவை கட்சியில் சேர்க்க பன்னீர்செல்வம் மனதார முயற்சி செய்கிறாரா என்பதை கடந்த கால அவரது செயல்பாடுகளில் இருந்து ஆய்வு செய்தால், 2021 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னர், சசிகலாவை அதிமுகவில் இணைக்க வேண்டும் என்ற தோற்றத்தை காட்டினார். அதற்கு ஆதரவாக சில குரல்களும் வந்தன. ஆனால், மோடியும், எடப்பாடி பழனிசாமியும் சசிகலாவை அதிமுகவில் இணைக்கக்கூடாது என உறுதியாக இருந்ததால் அது நடக்கவில்லை.

அதேவேளை அதிமுகவுக்கும், சசிகலாவுக்கும் தொடர்பு இல்லை என்பதை காட்டுவதற்காகவே சசிகலா தனது காரில் அதிமுக கொடியை பயன்படுத்தக்கூடாது என்றும், ஜெயலலிதா நினைவு இல்லத்துக்கு செல்லக்கூடாது என்பதற்காக அதை பூட்டியும் வைத்தார். தேர்தல் முடிந்த பிறகு, சசிகலாவை கடும் வார்த்தைகளால் விமர்சனம் செய்தார்.

இவ்வாறாக இருக்க ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு வளையம் இல்லை. காரணம், எதிர்கட்சித் தலைவர் தேர்தலின்போது, கட்சியில் இருக்கும் 66 எம்.எல்.எ.க்களில் 60 பேர் எடப்பாடி பக்கம் தான் நின்றனர். அதேபோல, சசிகலாவுக்கு எதிராக தீர்மானம் போடச் சொன்னபோது மூன்று மாவட்டங்கள் தவிர அனைத்து மாவட்டங்களிலும் எதிராகவே தீர்மானம் போட்டனர்.

இவ்வாறாக பன்னீர் செல்வத்தின் பலம் குறைவாக இருந்தாலும், கட்சியில் செங்கோட்டையன் போன்ற தலைவர்கள் அதிகாரம் செலுத்தக்கூடாது என்பதற்காக தொண்டர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருங்கிணைப்பாளர்கள் என்ற வியூகத்தை வகுத்தார் எடப்பாடி பழனிசாமி. இதன் விளைவு, 10 சதவீத நிர்வாகிகள் பலம் கொண்ட ஓ.பன்னீர்செல்வம், கட்சியில் 50 சதவீதம் அதிகாரம் கொண்ட பங்குதாரராக மாறினார். தற்போது, ஓ.பன்னீர்செல்வம், மீண்டும் சசிகலாவை பயன்படுத்தி அதிகார அரசியலை உயர்த்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அதிமுக பலவீனப்பட்டதா என ஆய்வு செய்வது அவசியம். 1996, 2006 உள்ளாட்சித் தேர்தல்களில் அதிமுக எந்த அளவு வெற்றியை கொடுத்ததோ அதே அளவு வெற்றியை தான் கொடுத்துள்ளது. அதிகார பலம், பெரிய அளவு பணம் செலவு செய்யாமல் 25 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது. ஒட்டுமொத்தமாக 33 சதவீதம் வாக்குகளை அதிமுக பேரவையில் பெற்றிருந்தாலும், நகர்பகுதிகளில் நிச்சயம் 30 சதவீதத்துக்கும் கீழ் தான் இருக்கும். இந்நிலையில், அதிமுக வாக்கு வங்கியில் பெரிய அளவில் சேதாரம் ஆகவில்லை. இதற்குமே கடந்த முறை அதிமுக கூட்டணியில் இருந்த பாஜக தனித்து நின்றதால்தான் அதிமுகவுக்கு சேதாரம் ஏற்பட்டுள்ளது.

அதேபோல, தொடர் தோல்விகள் எனும் கணக்கை எடுத்துப் பார்த்தால் 2004 மக்களவைத் தேர்தல், 2006 சட்டப்பேரவைத் தேர்தல், 2006 உள்ளாட்சித் தேர்தல், 2009 மக்களவைத் தேர்தல் என தொடர்ந்து 4 தோல்விகளை சந்தித்த அதிமுக, பென்னாகரம் இடைத்தேர்தலில் மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டு வைப்புத் தொகையை கூட இழந்தது. அப்படி இருந்த அதிமுக, 2011 இல் தேமுதிக கூட்டணியோடு மிகப்பெரிய வெற்றியை பெற்று ஆட்சிக்கு வந்தது.

அதேபோல, 2011 சட்டப்பேரவைத் தேர்தல், 2011 உள்ளாட்சித் தேர்தல், 2014 மக்களவைத் தேர்தல், 2016 சட்டப்பேரவைத் தேர்தல் என தொடர்ந்து 4 தோல்விகளை சந்தித்து ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டு வைப்புத்தொகையை இழந்தது. ஆனால், 2021 பேரவைத் தேர்தலில் மீண்டும் ஆட்சிக்கு வந்தது திமுக.

தமிழக அரசியலில் இந்த அளவுகோல்களை வைத்துப் பார்க்கும்போது, தொடர் தோல்வியில் இருக்கும் அதிமுக, திமுகவுக்கு போட்டி சக்தியாக 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக வலுவான கூட்டணி அமைத்து ஏன் வெற்றி பெற முடியாது என்ற கேள்வி எழுகிறது. அதிமுகவின் கட்டமைப்பை பொறுத்தவரை ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் சேர்ந்து இருந்தால் மட்டுமே இரட்டை இலை தொடர்ந்து இருக்கும். இதில் ஒருவரை தவிர்த்துவிட்டு, மற்றொருவரால் முக்கிய முடிவை எடுக்க முடியாது.

சசிகலாவை கட்சிக்குள் சேர்க்கக்கூடாது என எடப்பாடி உறுதியாக இருக்கிறார். அப்படி இருக்கும்போது ஓ.பன்னீர்செல்வம், அதிமுகவுக்குள் சசிகலாவை கொண்டுவருவது இயலாத காரியம். அதற்கான முயற்சி செய்தால் இரட்டை இலைக்கு வேட்டு வைப்பது போன்ற சூழல் உருவாகும். அந்த சூழல் ஏற்பட்டால் அது எடப்பாடி பழனிசாமிக்கு குறைந்த நஷ்டம் தான். ஆனால், ஓ.பன்னீர்செல்வத்துக்கு மிகப்பெரிய நஷ்டம் ஏற்படக்கூடும்.

சசிகலா விவகாரத்தை பொறுத்தவரை சசிகலாவை கட்சிக்குள் சேர்க்கக்கூடாது என எடப்பாடி உறுதியாக இருக்கிறார். அப்படி இருக்கும்போது ஓ.பன்னீர்செல்வம், அதிமுகவுக்குள் சசிகலாவை கொண்டுவருவது இயலாத காரியம். அதற்கான முயற்சி செய்தால் இரட்டை இலைக்கு வேட்டு வைப்பது போன்ற சூழல் உருவாகும். அந்த சூழல் ஏற்பட்டால் அது எடப்பாடி பழனிசாமிக்கு குறைந்த நஷ்டம் தான். ஆனால், ஓ.பன்னீர்செல்வத்துக்கு மிகப்பெரிய நஷ்டம் ஏற்படக்கூடும்.

இதற்கு காரணம், கொங்கு மண்டலம், வடதமிழகத்தில் இருக்கும் ஒட்டுமொத்த நிர்வாகிகள், தொண்டர்கள் எடப்பாடி பழனிசாமியின் தீவிர ஆதரவாளர்களாக இருக்கின்றனர். கொங்கு மண்டலத்தில் 30 சதவீதம் உள்ள கொங்கு வேளாளர் கவுண்டர்களின் முழுஆதரவும், 10.5 சதவீதம் கொடுத்ததால் வடதமிழகம் மற்றும் கொங்கு மண்டலத்தில் உள்ள வன்னியர்களின் பெரும்பான்மை ஆதரவையும் எடப்பாடி பழனிசாமி பெறக்கூடும். ஆனால், தென்மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் பன்னீர்செல்வம் குறிவைக்கும் முக்குலத்தோர் வாக்கு வங்கி என்பது அமமுக, திமுக என பிரிந்து போகவே வாய்ப்பு அதிகம்.

ஒருவேளை இரட்டை இலையில் கையெழுத்து போடும் அதிகாரத்தை பயன்படுத்தி சசிகலா விஷயத்தில் இரட்டை இலையை முடக்க ஓ.பன்னீர்செல்வம் முயற்சி செய்தால், எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிக எம்.எல்.ஏ.க்கள், மாவட்டச் செயலர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் இருப்பதை கணக்கு காட்டி இரட்டை இலையை எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைத்துவிட்டால் அதுவும் பன்னீர்செல்வத்துக்கு இழப்பு தான்.

எனவே, தங்களுக்கு இழப்பு ஏற்படும் விஷயத்தை பன்னீர்செல்வமோ அல்லது எடப்பாடி பழனிசாமியோ எடுக்கப்போவதில்லை. தொடர்ந்து சசிகலாவை ஆயுதமாக பயன்படுத்தி அதிமுகவில் தனது 50 சதவீத அதிகாரத்தை தக்க வைத்துக்கொள்ளும் உத்தியையே ஓ. பன்னீர்செல்வம் செய்து வருகிறார் என்பது தான் அரசியல் விமர்சகர்களின் கருத்து.

இருவருக்குமே நஷ்டம்

இது குறித்து அரசியல் விமர்சகர் ரிஷி கூறும்போது, அதிமுகவைப் பொறுத்தவரை யாரை நீக்க வேண்டுமானாலும் சேர்க்க வேண்டுமானாலும் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆகிய இருவரும் சேர்ந்தே ஒரு முடிவெடுக்க முடியும்.

ஈருடல் ஓருயிராக செயல்பட்டால் மட்டுமே அதிமுக ஒன்றுபட்டு இருக்கும். எடப்பாடி பழனிசாமி சசிகலாவை சேர்க்கவே கூடாது என்பதில் மிகவும் உறுதியாக இருக்கிறார். பன்னீர்செல்வமோ சசிகலாவை பயன்படுத்தி தனது முக்கியத்துவத்தை அதிகப்படுத்திக் கொள்கிறார்.

இதைவிட சசிகலாவை அதிமுகவில் சேர்க்க வேண்டும் எனும் எண்ணம் பன்னீர்செல்வத்திற்கு பெரிய அளவில் இருப்பதாக தெரியவில்லை. இப்படிப்பட்ட சூழலில் இந்த விஷயத்தில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆகியோருக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டால் அது இருவருக்குமே நஷ்டமாக முடியும். இது ஓபிஎஸ், இபிஎஸ் இருவருக்கும் நன்றாகவே தெரியும், ஆகையால் சசிகலா விஷயத்தில் இதற்கு மேல் பெரிய அளவு பிரச்சனையை ஓபிஎஸ் கிளப்ப மாட்டார். மத்திய பாஜகவும் சசிகலாவுக்கு ஆதரவாக எந்த நகர்வையும் செய்யவில்லை. ஆகையால் இந்த விஷயம் இதோடு நிறைவடைந்து விடும்.