கோனியம்மன் திருவிழா: ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர்

கோவையில் புகழ்பெற்ற கோனியம்மன் தேர்த்திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒன்றிணைந்து வடம் பிடித்து தேரை இழுத்தனர்.

கோவையின் காவல் தெய்வம் என்று அழைக்கப்படும், கோனியம்மன் கோவில் திருத்தேர் திருவிழாவில் ஆண்டு தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, வடம் பிடித்து இழுத்து வழிபடுவது வழக்கமான ஒன்று.

இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான தேர்த்திருவிழா இன்று, மதியம் 2.05 மணிக்கு திருக்கோவில், சார்பாக, சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

 

திருக்கோவில் செயல் அலுவலர் செல்வம் பெரியசாமி, முன்னாள் திருக்கோவில் தக்கார் விஜயலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டு தேரின் வடம் பிடித்து இழுத்து துவங்கி வைத்தனர்.

பின்னர், ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒன்றிணைந்து வடம் பிடித்து இழுத்தனர். ராஜவீதி தேர்நிலை திடலில் இருந்து வடம்பிடித்து இழுத்து வரபட்ட தேரானது பெரிய கடை வீதி, ஒப்பணக்கார வீதி, பிரகாசம் சாலை வழியாக, பழமார்க்கெட் அடைந்து மீண்டும் ராஜவீதி தேர்நிலை திடலிலுக்கு வந்தடைந்தது.

தேர் திருவிழாவின் ஒரு பகுதியாக கேரள செண்டை மேளங்கள் முழங்கவும், ஜமாப் இசை முழங்கவும் தேர் இழுத்து வரபட்டது, மேலும் அனைத்து பக்தர்களுக்கும் வழி முழுவதும் மதிய உணவுகள் வழங்கபட்டது.

தொடர்ந்து பல்வேறு பொதுமக்கள் டவுன்ஹாலில் உள்ள திருக்கோவிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்தனர். அவ்வாறு முககவசங்கள் அணிந்து வருகின்ற பக்தர்கள் மட்டுமே சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர், பக்தர்கள், முறையாக கைகளை கழுவி, கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்திய பின்னரே திருக்கோவில் வளாகத்திற்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.