இளைஞர்களை முதல்வனாக மாற்றுவதே நோக்கம்

– ‘நான் முதல்வன்’ திட்ட தொடக்க விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ‘நான் முதல்வன்’ என்கிற பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள், இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டு திட்டத்தை இன்று சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தொடங்கி வைத்தார்.

தனது 69 வது பிறந்தநாளை கொண்டாடிவரும் நிலையில், தனது கனவு திட்டமான ‘நான் முதல்வன்’ திட்டத்தை தெடங்கி வைத்து முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: “நான் முதல்வன் – உலகை வெல்லும் இளைய தமிழகம்” என்ற திறன் மேம்பாட்டுத் திட்டத்தை எனது பிறந்த நாளில் தொடங்கி வைப்பது என் வாழ்நாள் பெருமையாக கருதுகிறேன். இது என் கனவு திட்டம் என்றும், மாணவர்கள், இளைஞர்களை முதல்வனாக மாற்றுவதே இத்திட்டத்தின் நோக்கம் என்றும் தெரிவித்தார்.

பெற்றோர்கள் சொன்னார்கள் என்பதற்காக பொறியியல், மருத்துவம் பயில வேண்டாம். எதில் ஆர்வம் உள்ளது என்பதைத் தேர்வு செய்து அதில் சேர வேண்டும் என்று மாணவர்களுக்கு அறிவுரை கூறினார். படித்தால் மட்டும் போதாது. படிக்கின்ற படிப்பில் முழு தெளிவு கொண்டிருக்க வேண்டும்.மாணவர்கள் படித்திருக்கிறார்கள். ஆனால் போதிய திறமை இல்லை. அவர்களின் திறமை குறைவு பற்றி கவலைப்பட வேண்டிய சூழலில் நாம் தத்தளித்துக் கொண்டுள்ளோம் என்று குறிப்பிட்டு பேசினார்.

படித்த அனைவருக்கும் வேலை உள்ளது. ஆனால் தகுதியான வேலை இல்லை என்பதே கவலைக்குரியதாக உள்ளது. இளைய சக்தி முழுமையான திறமை உடையதாக இருக்கிறதா? என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டும். தமிழ்நாட்டு மாணவர்கள், இளைஞர்கள் அனைவரும் அனைத்திலும் முதல்வனாக வர வேண்டும் என்பதே ‘நான் முதல்வன்’ திட்டத்தின் நோக்கம் என தெரிவித்தார்.