உயர் நீதிமன்ற தீர்ப்பைப் பின்பற்றி ஹோட்டல்கள் திறக்கும் நேரத்தை நீட்டிக்க வேண்டும்

– உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை

ஹோட்டல்கள் திறக்கும் நேரத்தை உயர் நீதிமன்றத் தீர்ப்பைப் பின்பற்றி நீட்டிக்க வேண்டும் என ஹோட்டல்கள் உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

கோவை ரயில் நிலைய ரோட்டில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் ஹோட்டல்கள் உரிமையாளர் சங்கம் சார்பில் செய்தியாளர் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது.

இதில், கோவை மாவட்ட ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கச் செயலர் சிவக்குமார், துணை தலைவர் பாலசந்தர் மற்றும் பொருளாளர் கோவிந்த் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அப்போது அவர்கள் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஓட்டல்கள் திறக்கும் நேரத்தை உரிமையாளர்கள் அவரவர்கள் வசதிக்கேற்ப நிர்ணயம் செய்து கொள்ளலாம் என கடந்த பிப்ரவரி 5ம் தேதி உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சட்டம் – ஒழுங்கு பிரச்சனை என்ற போர்வையில் உணவகங்கள் மற்றும் உணவகங்களின் வேலை நேரத்தை காவல்துறை தீர்மானிக்க முடியாது என உயர்நீதிமன்ற தீர்ப்பில் கூறியுள்ளது. அதற்கு காவல்துறை ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

எங்கள் சங்கத்தில் சுமார் 250 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். சமீபத்திய தீர்ப்பை அமல்படுத்தினால் கோவை மாவட்டத்தில் உள்ள லட்சக்கணக்கான ஊழியர்களைக் கொண்ட ஓட்டல் உரிமையாளர்கள் பயனடைவார்கள்.

எனவே ஹோட்டல்கள், உணவகங்கள் 24 மணி நேரமும் செயல்பட காவல்துறையினர் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இதன் மூலம் கோவையில் வணிகம் மற்றும் இரவு நேரங்களில் வாடிக்கையாளர்களுக்கு அதிக வாய்ப்புகள் இருப்பதால், உணவுத் துறையும், சுற்றுலாவும் வளர்ச்சி அடையும்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக ஓட்டல் தொழில் சற்று நலிவடைந்தது. தற்போது மீண்டும் பழைய நிலைக்கு திரும்பியுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. காவல்துறை மற்றும் மாநில அரசாங்கத்தின் ஆதரவுடன் ஹோட்டல் நேரத்தை நீட்டிப்பதன் மூலம் வணிகத்தை மேம்படுத்த இது தக்க நேரம் எனத் தெரிவித்தனர்.