குறிப்பிட்ட அளவு பருத்தியை வரியில்லாமல் இறக்குமதி செய்ய சைமா கோரிக்கை 

நடப்பு பருத்தி சீசனில் 50 லட்சம் பருத்தி பேல்கள் ஏற்றுமதி செய்யப்பட இருப்பதால் பருத்தியின் தேவை கணிசமாக அதிகரிதுள்ளதாகவும், பருத்தி பற்றாக்குறையை சந்திக்கும் சூழல் உருவாகியுள்ளதாகவும் சைமா (தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கம்) தெரிவித்துள்ளது.

சைமா அலுவலகத்தில் இது குறித்த பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது தலைவர் ரவிசாம் கூறியதாவது,

தற்போது பருத்தி கட்டுபடி ஆகாத விலையில் உள்ளதாக தெரிவித்த அவர் பருத்தியின் தரம் மற்றும் அளவு குறைந்துள்ளதாகவும் விலை அதிகமாக உள்ளதாகவும் தெரிவித்தார்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த மில்களில் தற்போது பருத்தி இருப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதையும் குறிப்பிட்டு பேசினார். மேலும் பருத்திக்கான இறக்குமதியில் 11 சதவீத இறக்குமதி வரியை நீக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

பருத்தி பருவ காலம் அல்லாத காலத்தில் ஒட்டு மொத்த ஜவுளி தொழிலும் நெருக்கடியை சந்திக்க கூடிய நிலையை நோக்கி இந்திய ஜவுளித்துறை சென்று கொண்டிருக்கிறது.

பருத்தி சீசன் அல்லாத காலத்தில் நாட்டில் ஜவுளி உற்பத்தி நிற்பதை தடுத்து அதன் மூலம் தொழிலாளர்களின் வேலை இழப்பை தடுக்க பருத்தி கொள்கையில் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்குமாறு பிரதமரிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

பருத்தி வளரும் மாநிலங்களில் அதிக மழை காரணமாக ஏற்பட்ட பயிர் சேதம் மற்றும் பருத்தி பயிரிடப்படும் நிலப்பரப்பு 7.2 சதவீதம் குறைந்தது போன்ற காரணிகளால் 2021 – 22 கான பருத்தி சீசனில் பருத்தி உற்பத்தி 350 லட்சம் பேல்களுக்கு குறைவாகவே இருக்கும் என்றும் அதே நேரத்தில் ஜவுளித் துறையின் தேவை 360 லட்சமாக உயரும் என்றும் அவர் கூறினார்.

நடப்பு பருவத்தில் பருத்தி நுகர்வு 10 முதல் 15 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாகவும், அதனால் ஜவுளித் துறையின் தேவை 360 லட்சம் பேல்களை எட்ட வாய்ப்பு உள்ளதாகவும் கூறினார்.

வரலாற்றில், நாட்டின் பருத்தி நுகர்வு அதன் மொத்த உற்பத்தியைக் காட்டிலும், முதன்முறையாக பருத்தி பற்றாக்குறையை நோக்கி நாடு நகர்கிறது என்றும் தெரிவித்தார்.

இறுதி கையிருப்பு 25 லட்சம் பேல்கள் ஆக இருப்பதால் 40 லட்சம் பேல்கள் அளவிற்கு தரமான பருத்தி கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்படும் என்றும் தொழில் துறையின் வளர்ச்சியை தக்க வைக்க தரமான பருத்தி கிடைக்கப்பெற வேண்டும் என்றும் குறிப்பிட்டு பேசினார்.

நீண்ட இலை பருத்திக்கு இறக்குமதி வரியில் இருந்து விலக்கு அளிக்க அரசு தீவிரமாக பரிசீலித்து வருவதாகவும், இதனால் பருத்தி விவசாயிகளுக்கு எந்த விதத்திலும் பாதிப்பு ஏற்படாது என்றும் தெரிவித்தார்.

பருத்தி பருவத்தின் முடிவில் பருத்தி தட்டுப்பாடு காரணமாக உற்பத்தி நிறுத்தம் மற்றும் வேலை இழப்பை தவிர்க்க 40 லட்சம் பேல்கள் பருத்தியை வரியில்லாமல் இறக்குமதி செய்ய அனுமதிக்குமாறு அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தேவையின் அடிப்படையில் குறிப்பிட்ட அளவு பருத்தியை வரியில்லாமல் இறக்குமதி செய்ய அனுமதிப்பது அவசியம் என்று தெரிவித்தார்.

பருத்தி பற்றாக்குறை எதிரொலியாக ஜவுளித்துறைக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும், பஞ்சு விலை உயர்வால் தொழிற்ச்சாலைகள் நெருக்கடியில் உள்ளது என்றும்,

பஞ்சு நல்ல விளைச்சல் இருந்தும் பற்றாக்குறை இருப்பதாகவும் கூறினார்.

பஞ்சு விலை இரு மடங்காக உயர்ந்ததினால் ஆர்டர்களை முன்னதாக தந்த விலை பட்டியலின் அடிப்படையில் முடிக்க முடியவில்லை எனவும் தெரிவித்தார்.