ஆன்லைன் வகுப்பு ஓர் அலசல்!

கோவிட் 19 பெரும் தொற்று வந்த பிறகு கல்வி கற்பிப்பதில் ஒரு பெரும் மாற்றமும் சிறிது பின்னடைவும் ஏற்பட்டிருப்பதாக கல்வியலாளர்கள் கருதுகிறார்கள். அதில் ஒரு நியாயமும் இருப்பதாகவே படுகிறது. மொத்தமாக பொது முடக்கம் அறிவித்த பிறகு கல்வி நிலையங்களும் அதற்கு விதிவிலக்கல்ல. ஆனால் அதுவே சில மாதங்கள் நீடித்ததும், இரண்டு அலைகளாக மாறியதும் மாணவர்களின் கல்வியில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தி விட்டன.

குறிப்பாக ஆன்லைன் கல்வியும் கொரோனா பேட்ச் மாணவர்களும் உருவாகி விட்டார்கள். கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் கல்வி நிலையங்கள் மூடப்பட்டு விட்டதால் மாணவர்களின் கல்வி தடைபடக் கூடாது என்று ஆன்லைன் கல்வி முறை அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் அதன் விளைவுகள் எதிர்பார்த்த நன்மைகளை தரவில்லை என்றே பலரும் கருதுகிறார்கள்.

இந்த ஆன்லைன் வகுப்புகள் தொடங்கிய பிறகு ஏற்பட்ட முதல் விளைவு மாணவர்கள் மீது ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு இருந்த கண்காணிப்பு முழுமையாக இல்லாமல் போனது. பள்ளி என்பது கல்வி கற்பிப்பதோடு ஒழுக்கம் கட்டுப்பாடு மிகுந்தவர்களை உருவாக்கும் ஒரு இடமாகவும் இருந்து வந்தது.

கல்விமுறை, பாடத்திட்டம், கற்பிக்கும் முறை என்று பல வேறுபாடுகள் இருந்தாலும் தொடர்ந்து மாணவர்களை முறைப்படுத்தும் பணி பள்ளிகளில் நடந்து வந்தது. நேர மேலாண்மை, உணவு நேரம், வீட்டுப்பாடம், தேர்வு என்று மாணவர்கள் பிசியாக தொடர்ந்து இயங்கி வந்தனர். இவையெல்லாம் நேரடி வகுப்பின் பயன்களாகும்.

ஆனால் பெருந்தொற்று காலத்தில் மாற்று திட்டமாக அறிமுகமான ஆன்லைன் கல்வி இதற்கு நேர்மாறாக பல எதிர்மறை விளைவுகளை கல்வி முறையில் ஏற்படுத்தியுள்ளது. முதலில் ஆசிரியர்கள் மாணவர்களை நேரில் சந்தித்து கற்பிக்க முடியாததால் அடிப்படையாக இருவரிடையே இருந்த வந்த பிணைப்பும் நேசமும் நேரடி தொடர்பும் இல்லாமல் போனது.

தனிப்பட்ட முறையில் மாணவர்கள் பள்ளிகளை மூடுவது போல தங்களுக்குள்ளேயே இணைந்து இயங்க முடியாமல் செயலற்றுப் போயினர். வகுப்புக்கு வருகைப்பதிவு குறைந்துபோனது. கண்ணால் நேருக்கு நேர் பார்த்துப் பாடம் நடத்தும் முறை இல்லாத காரணத்தால் ஆசிரியர்கள் மாணவர்கள் உறவு பொருளற்றுப் போனது. பெரும்பாலான இடங்களில் தொலைக்காட்சி செய்தி வாசிப்பவர் போல ஆசிரியர் பாடம் நடத்துவது திரையில் மட்டும் நடைபெற்றது.

அதேபோல ஆன்லைன் தேர்வுகள் வழக்கமான தேர்வு முறையின் நோக்கத்தை மாற்றி விட்டன. ஒருபுறம் மேல் வகுப்புக்கு தூக்கி விட்டு விடுவார்கள் என்ற அலட்சியம், அசட்டு துணிச்சல், இன்னொருபுறம் புத்தகத்தை பார்த்து கூட தேர்வை சரியாக எழுதாத அவலநிலை ஏற்பட்டது. அதைவிடக் கொடுமை பல மாணவர்களின் கண்களில் ஏற்படும் குறைபாடுகள், திடீரென்று பல மணி நேரம் ஒரு சிறிய திரையில் கவனிக்கத் தொடங்கியதும், அதுவும் பள்ளிப் பாடங்களை கவனித்து உள்வாங்குவது என்பதும் இயலாமல் போனது. கண்கள் சோர்வடைய தொடங்கியதால் கற்றல் குறைபாடுகளோடு, கண் குறைபாடும் சேர்ந்துகொண்டது.

இன்று ஆண்ட்ராய்டு போன் சாதாரணமாக அனைவரிடமும் இருந்தாலும் ஆன்லைன் கல்வி தொடங்கிய பிறகு மொபைல் சந்தை இன்னும் விரிவடைந்தது. இதன் நேரடி பயனாக ஆன்லைன் கல்வியின் பொருளாதார சுமை பெற்றோர்கள் மீது விழுந்தது. பணி வாய்ப்பு குறைந்து பொது மக்கள் பாதிக்கப்பட்டு இருந்த போது சாதாரண நிலையில் இருந்த பெற்றோருக்கு ஆன்லைன் கல்வி மறைமுகமாக சுமையாகிப் போனது.

எனவே அந்த வகையில் இந்த நிலையை படிப்படியாக மாற்றிட விரைவிலேயே இயல்பான நிலை திரும்ப நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இதில் அரசு மட்டும் முடிவெடுத்து செயல்படுத்தி வெற்றி கண்டுவிட முடியாது. கல்வியாளர்கள், மருத்துவ வல்லுநர்கள், குறிப்பாக உளவியல் நிபுணர்கள், பள்ளி கல்லூரி நிர்வாகங்கள், தொழில்துறையினர் என பல பிரிவினரின் ஆலோசனைகள் பெறப்பட்டு செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட வேண்டும்.

அதற்கும் மேலாக இந்த கோவிட்-19 பெருந்தொற்று பல துறைகளுக்கும் பல எச்சரிக்கைகளை அளித்திருக்கிறது. அந்த வகையில் இனி எதிர்காலத்தில் இது போன்ற நோய் தாக்குதல்கள் ஏற்படும் பொழுது அதிலிருந்து மீள்வதற்கும், கல்வி சார்ந்த செயல்பாடுகள் பாதிக்கப்படாமல் தொடர்ந்து இயங்கவும் வழிவகைகள் செய்யப்பட வேண்டும். ஆன்லைன் கல்விமுறைகளில் உள்ள குறைபாடுகள் கண்டறிந்து களையப்பட வேண்டும். இல்லை என்றால் எதிர்கால சமூகம் பல பாதிப்புகளை சந்திக்க நேரிடும். இன்றைய மாணவர்கள் தான் நாளைய இந்தியாவை கட்டமைக்கும் சிற்பிகள் என்பதை நாம் எப்பொழுதும் நினைவில் கொள்ள வேண்டும்.