எல்சி மருத்துவமனை சார்பில் பி.சி.ஓ.எஸ் கிளினிக் துவக்கம்

கோவை அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி எதிரில் அமைந்துள்ள எல்சி மருத்துவமனையின் மகளிர் நலனில் சிறப்பு பிரிவாக ‘எல்சி பி.சி.ஓ.எஸ்’ என்ற கிளினிக் சனிக்கிழமை துவங்கப்பட்டுள்ளது. எண்டோஸ்கோபி, லேப்ரோஸ் கோப்பியில் பிரசித்தி பெற்ற மருத்துவமனையாக விளங்கும் ‘எல்சி’ தற்போது மகளிருக்கான பிரத்தியேக பி.சி.ஓ.எஸ் கிளினிக்கை ஆரம்பித்துள்ளது.

பூப்படைந்த காலத்துக்கு பிறகு தொடங்கி மெனோபாஸ் காலம் வரை மாதவிடாய் சுழற்சி சீராக இருக்கும். தற்போது இந்த சுழற்சி சீரற்று இருப்பது அதிகரித்து வருகிறது. இளம்பெண்கள் இன்று சந்திக்கும் பிரச்சனைகளில் முக்கியமானது பாலி சிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம். சினைப்பையில் நீர்கட்டிகள் எல்லா வயதிலும் வரும் என்றாலும் இளம்பெண்கள் இந்த பிரச்சனையை சந்தித்தால் உடனடியாக சிகிச்சை எடுத்துகொள்வது நல்லது.

உடல் உழைப்பு இன்மை, கொழுப்பு நிறைந்த மற்றும் துரித உணவு பழக்கம் போன்ற காரணங்களால் பி.சி.ஓ.எஸ் என்ற சினைப்பை நீர்க்கட்டி வியாதி ஏற்படுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

பத்தில் மூன்று பெண்களுக்கு இந்த குறைபாடு உள்ளதாகவும், குழந்தையின்மைக்கான முதற்கரணமாகவும் இந்த பி.சி.ஓ.எஸ் நோய் உள்ளது. மாதவிடாய் கோளாறுகள், முகத்தில் அதிக முடி வளர்ச்சி, உடல் பருமன், தோலில் கருப்பு நிறமிகள் படிவு, குழந்தை பேரின்மை, ஹார்மோன்கள் சமநிலையின்மை ஆகியவை இவற்றின் அறிகுறிகளாக உள்ளன.

இதுகுறித்து மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் மருத்துவர் வித்யா கூறுகையில்,

எங்களது மருத்துவமனையில் மகளிர் நலப்பிரிவில் பி.சி.ஓ.எஸ் கிளினிக் என்ற சிறப்பு துறையை தொடங்கியுள்ளோம். சினைப்பையில் ஏற்படும் நீர்க்கட்டிகளைத் தான் பி.சி.ஓ.எஸ் என்கிறோம். இன்றைய வாழ்க்கை முறையில் பெண்கள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவாலாக இந்த நோய் உருவெடுத்துள்ளது. இந்த நீர்க்கட்டியினால் பெண்களுக்கு பரு, முகத்தில் முடி வளர்தல் என ஆரம்பித்து கருப்பை புற்றுநோய், குழந்தையின்மை உள்ளிட்ட விளைவுகள் ஏற்படுகிறது.

பெண்களின் மலட்டுத்தன்மைக்கு மிகமுக்கிய காரணமாக பி.சி.ஓ.எஸ் உள்ளது. மன அழுத்தம், வாழ்க்கை மற்றும் உணவு முறை மாற்றங்களினால் தற்போது இந்நோய் அதிகமாகியுள்ளது. முறையான விழிப்புணர்வை ஏற்படுத்தினால் இந்நோய் முற்றிலும் தவிர்க்க கூடிய ஒன்று தான். பெண்களின் வாழ்க்கை மற்றும் உணவு பழக்கங்களில் மாற்றத்தை ஏற்படுத்தினாலே இதனை தவிர்க்க இயலும். மேலும் இது பற்றிய விழிப்புணர்வை பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ஏற்படுத்த உள்ளோம் என தெரிவித்தார்.

மகப்பேறு மருத்துவர் ரேவதி பேசுகையில், பி.சி.ஓ.எஸ் நோயின் முதல் அறிகுறியாக சீரற்ற மாதவிடாய் உள்ளது. இரண்டாவதாக குழந்தையின்மை பிரச்சினை உள்ளது. மேலும் பெண்களுக்கு குழந்தையின்மைக்கான காரணமாக 50 முதல் 60 % வரை பி.சி.ஓ.எஸ் நோய் உள்ளது. இவர்களுக்கு கருமுட்டை வளர்வதில் பிரச்சினை ஏற்படுகிறது. மனஅழுத்தமும் இவர்களுக்கு பொதுவாக காணப்படுகிறது.

கொரோனா காலத்திற்க்கு பின்பு இதனால் பாதிக்கப்படும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. துரித உணவு மற்றும் அதிக சர்க்கரை சேர்க்கப்பட்ட பண்டங்களை உண்பதால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கிறது. மேலும் இந்த நோயின் நீண்ட கால விளைவுகளாக சர்க்கரை நோய், ரத்தக் கொதிப்பு, இதய நோய், கருப்பை புற்றுநோய் ஆகியவை வருவதற்கான வாய்ப்பு உள்ளது எனப் பேசினார்.

மகப்பேறு மருத்துவர் சவிதா கூறுகையில், சீரற்ற மாதவிடாயை சரிசெய்வதற்கு சில மாத்திரைகளை பரிந்துரைத்தாலும், அதை குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும்தான் பயன்படுத்த முடியும். அதனால் எங்கள் பி.சி.ஓ.எஸ் கிளினிக்கில் பெண்களுக்கான டயட் மற்றும் வாழ்க்கை முறையில் மாற்றத்தை ஏற்படுத்துவதில் நாங்கள் அதிக கவனம் செலுத்துகிறோம். தேவை உள்ள போது மட்டுமே மருந்து மற்றும் சிகிச்சை முறைகள் அளிக்கப்படுகிறது. ஆனால் அவை நீண்ட நாட்களாக அளிக்கப்படாது எனக் கூறினார்.