ரோட்டரி மிட் டவுன் – கே.எஸ்.டி இணைந்து நடத்தும் ஓவிய கண்காட்சி

ஆசையை நிறைவேற்ற வயது தடையில்லை!

கஸ்தூரி சீனிவாசன் அறக்கட்டளை (கே.எஸ்.டி) மற்றும் ரோட்டரி கிளப் ஃஆப் மிட் டவுன் இணைந்து நடந்தும் ‘அஜந்தா சீரிஸ் – 2022’ (Ajanta Series 2022) என்ற ஓவியக் கண்காட்சி கஸ்தூரி சீனிவாசன் கலை அரங்கத்தில் துவக்கி வைக்கப்பட்டது.

இதில் சிறப்பு விருந்தினராக பாரதிய வித்யா பவன் கோவை மையத்தின் தலைவர் கிருஷ்ணராஜ் வாணவராயர் கலந்து கொண்டு ஓவியக் கண்காட்சியை தொடங்கி வைத்தார்.

இந்த கண்காட்சி பிப்ரவரி 23 ஆம் தேதி தொடங்கி 27 ஆம் தேதி வரை 5 நாட்கள் நடைபெறவுள்ளது. இதில் கோவையைச் சேர்ந்தவரும், தற்போது பெங்களூருவில் வசித்து வரும் ஓவியர் சுந்தர் அவர்களின் ஓவியப் படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இங்கு 50 க்கும் மேற்பட்ட ஓவியங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

காட்சிப்படுத்தப்பட்டு விற்பனையாகும் இவரின் ஓவியங்கள், ‘ரோட்டரி கிளப் ஃஆப் மிட் டவுன்’ மூலம் சமூக சேவை திட்டங்களுக்கு பயன்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஓவியர் சுந்தரின் படைப்புகள்:

தொடர்ந்து ஓவியர் சுந்தர் கூறுகையில், சிறுவயதில் இருந்தே எனக்கு ஓவியத்தில் ஆர்வம் இருந்தது. கடந்த நாற்பது வருடங்களுக்கு பிறகு எனது சிறு வயது ஆசையான ஓவியப் பணியை மேற்கொண்டு வருகிறேன். ஆடிட்டராக பணிபுரிந்து, கடந்த இரண்டு வருடங்களாகவே ஓவியம் வரைந்து வருகிறேன். கொரோனா காலத்தில் தான் ஓவியப் பணியைத் தொடங்கினேன். இப்பொழுது முழு நேர ஓவியனாக செயல்பட்டு வருகிறேன். எனது ஓவியங்கள் அனைத்தும் ஆயில் பேயிண்டிங் மூலம் வரையப்பட்டது. நான் பார்த்து ரசித்த இயற்கை காட்சிகளுடன் சொந்த கற்பனையும் சேர்த்து வரைகிறேன்.

மேலும், கஸ்தூரி சீனிவாசன் அரங்கத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள என் ஓவியம் வாயிலாக வரும் நிதி, ரோட்டரி மூலம் கால்களை இழந்தவர்களுக்கு இலவச செயற்கை கால் வழங்க பயன்படுத்தப்படுகிறது எனக் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் ரோட்டரி மாவட்ட ஆளுநர் ராஜசேகர் மற்றும் ரோட்டரியைச் சேர்ந்த உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.