2022 – 2023 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்: நிதியமைச்சர் பி.டி.ஆர் ஆலோசனை

தமிழக பட்ஜெட் தொடர்பாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று ஆலோசனை நடத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். கடந்த நிதியாண்டின் எஞ்சிய 6 மாதங்களுக்கு மட்டுமே அந்த பட்ஜெட் பொருந்தும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், 2022 – 2023 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் விரைவில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இது குறித்து நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். முன்னதாக பல்வேறு தரப்பினரின் கருத்துக்களை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கேட்டறிய உள்ளார். இதில் ஒரு பகுதியாக தொழிற்சாலை, சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவன பிரதிநிதிகளை நிதியமைச்சர் சந்திப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்ந்து தலைமைச் செயலத்தில் பிற்பகல் 2.30 மணிக்கு வர்த்தக சங்க பிரதிநிதிகளுடனும் நிதியமைச்சர் ஆலோசனை நடத்த உள்ளார். தற்போது 2-வது முறை பட்ஜெட் சமர்ப்பிக்கப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது. எனவே இந்த நிதி ஆண்டிற்கான தமிழக பட்ஜெட் தாக்கல் குறித்து அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.