கொங்குச்சீமை செங்காற்று – 2

மண் மணம் வீசும் கிராமியத் தொடர்கதை

– சூர்யகாந்தன்

 

மலைகளின் தெற்கே சற்றுத் தொலைவில் ரயில் பாதை மலைப்பாம்பைப் போல் நீண்டு கிடப்பதும் அவ்வப்போது கேரளத்தை நோக்கிச் செல்லும் மலபார் ரயில்களும், அவை விட்டுச் செல்லும் புகையும், பாறையின் மீது உட்கார்ந்த படி பார்த்துக¢கொண்டிருக்கும் சுப்பையனை புளகாங்கிதப்பட வைக்கும்.

“…ஒரு நாளைக்குனாலும் அந்த ரயில்லெ ஏறி உக்காந்துட்டுப் போயி ஆசைதீர அது போகுற எடங்களையெல்லாம் பாத்துட்டு வரோணும்….” என வாய்விட்டுச் சொல்லிக் கொள்வான்.

சற்றுத்தொலைவில் கண்ணுக்கு எட்டும்படியாக கந்தேகவுண்டன் சாவடி, நவக்கரை, வாளையார், குமிட்டிபதி, பாலத்துறை, வேலந்தாவளம் என்றிருந்த ஊர்களில் எல்லாம் இந்த ஊரார் சொந்த பந்தங்களைக் கொண்டிருப்பதையும் அவ்வப்போது கேள்விப்படவும் முடிந்தது.

பொழுது இறங்கும் தருவாயில் பறவைக் கூட்டங்களைப் போல் மேகங்கள் வானத்திலிருந்து இந்த மலைகள் மீது கவிழ்வதை இவனுடைய அம்மா இவனுக்குப் புதுத்துணிகள் அணிவிக்கிற போது ஏற¢படும் உள்ளப்பூரிப்போடு அனுபவித்துப் பார்ப்பான்.

அந்த நினைவுகளில் இருந்து மீண்டு, போட்டிருந்த சட்டைத் துணியைக் கழட்டிப் பிழிந்து உதறித் தோளில் போட்டுக்கொண்டு வடக்கு நோக்கி நடந்தான்.

வானம் வெளி வாங்கியிருந்தது. மழை பெய்து ஒய்ந்து விட்ட நிசப்தம்! இட்டேரியில் ஆங்காங்கே தண்ணீர் “தளக் தளக்”கென்று ஓடியபடியிருந்தது. ஆடுகள் எட்டிக் குதித்து அவற்றைத் தாண்டியபடி நடந்தன.

ஆடு மேய்க்கும் இந்தத் தொழிலுக்கு வந்து பத்து வருடங்களுக்கு மேலேயே நகர்ந்து விட்டிருந்தன! நாள் தவறாமல் இதுகளை ஒட்டிக்கொண்டு தெற்குக்காடுகளை நோக்கி நடப்பதென்பது ஒரு முக்கியமான வேலையாகி விட்டது. இதற்கு விடுப்பு எப்போதாவதுதான் வரும்.

தீபாவளி போன்ற நோம்பி நொடிகள் வந்து ஊர்களைக் குதூகலப்படுத்தும் நாட்களாய் அவை இருக்க வேண்டும் அல்லது காய்ச்சல் குளிரென்று உடம்புக்கு முடியாமல் படுத்துவிட்ட தருணங்களாய் அமைய வேண்டும்! அப்போதுங்கூட ஆடுகளைப் பட்டினி போடுவது நல்லதில்லை என மாசய்யனே கூட இதுகளை ஓட்டிக்கொண்டு கிளம்பி விடுவதுண்டு.

ஊருக்குள் நுழைந்தவுடன் ஆடுகளின் வேகத்தைக் குறைத்து “ஹேய்…ஹேய்..! என்று குரல்  கொடுத்தபடி  ஒட்டிக்கொண்டு  நடந்தான் சுப்பையன். வீட்டின் தெற்குப் புறமாயிருந்த பட்டியில் சென்று அடைபடுவதில் ஆடுகள் ஒன்றுக்கொன்று போட்டி போட்டுக்கொண்டு ஓடின. வாசலில் இவனுடைய அம்மா முருகம்மாள் எதிர்பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள்.

“மத்தியானச் சோத்தெக்கூட கொண்டாற முடியிலைடா…! வானம் வேறெ மூட்டம் போட்டுட்டுக் கெடக்குது. நேரங்காலமே நீ வந்துருவீன்னு இருந்தனே! நல்லா நனஞ்சு போயித்தான் வந்து சேர்ந்திருக்கிறே…”

மகனை விசாரித்தபடி ஆட்டுப் பட்டியின் கல்லுக்காலுக்கு அருகில்  வந்து நின்றான் பச்சாதாபத் தோடு!

“மழை புடுச்சு சட்டடி அடிக்கிது. அப்புறம் நனையாம இருக்க முடியுமா….? நீ எதுக்கெ வராம இருந்தது தேவுலே! எங்கெ சோத்துபோசியெ எடுத்துட்டு வந்து நடுத்தடத்துல சிக்கியிட்டு அவதிப¢படுறயோன்னு நா நெனச்சேன்!வராம இருந்தது எத்தனையோ மேலுது அம்மா…!”

சொல்லிக்கொண்டே பட்டிப் படலைச் சாத்திவிட்டு வந்து, வாசலில் கட்டப்பட்டிருந்த கொடியில் துணிகளை உதறிக் காயப் போட்டான்.

அதற்குள் அடுப்பில் சூடு பண்ணிய சுக்குக் காப்பியை டம்ளரில் கொண்டு வந்து கொடுத்தாள் முருகம்மாள்.

அதை வாங்கிக் குடித்தபடியே…

“…அய்யன் உன்னமு வருலையாட்டந்தெரியுது..”

வீட்டை பார்த்தப்படி கேட்டான் இவன்.

“அதெப்பிடி வருவாங்கொ! இன்னிக்கு ராத்திரித் தங்கல் அங்கெ பாப்பம் பட்டியிலதா! சொந்தத்துக்கு அங்கெ என்ன கொறச்சலா? ஊடு மாத்தி ஊடு கூட்டிட்டுப் போயிடுவாங்களே…” என்றாள் நிதானமாக.

“ச்…செரி… ச்…செரி எப்பவோ வருட்டும்..”

சுப்பையனுக்கு தன்னுடைய அய்யன் காரன் கடந்த ஆறேழு மாசங்களாகப் பெண் பார்க்கும் காரியமாகப் போய் வருவது தானறிந்த ஒன்றாகவே இருந்தது.

அங்கு தோட்டந்துரவு என்று வசதியுள்ள இடங்களாகவே ரெண்டு மூன்று வரன்கள் ஆசைப்பட்டு முன் வந்தன. அதில் எது  பொருத்தமாகப்படுகிறதோ, அதை முடித்து  விடலாம் என்கிற அபிப்ராயத்தில்தான் அங்கு போய் வருவதாக இருந்தார் மாசய்யன்.

“ மாப்பிள்ளை வந்ததும் போயி, மில்லு வேலைலயோ இல்லையோ பண்ணயம் எதுனாலும் பார்க¢கிறாப்லயோ இருந்தாத் தேவுலாமுங்கோ! உன்னமும் ஆடுகளை மேய்ச்சுட்டுத் திரியறதுதாங் கொஞ்சம் சங்கடமாத் தோணுதுங்கோ…” என்றார், பெண் வீட்டுச் சார்பாகப் பங்காளி ஒருத்தர்.

“ஆடு மேய்க்கிறது கவுர்த்திக் கொறச்சல்னா உங்க பொண்ணே எங்களுக்கு வேண்டா முங்கோ!அவிக பாட்டன் பூட்டன் காலத்துல குறியாடுக மேய்க்காம ஆனைக்குட்டி களையா மேயச்சாங்களாமா? இன்னைக்குக்கொஞ்சம் பசுப்பு வந்துடுச்சினா பழையதை மறந்து போட்டுப் பேசுலாமுங்களா? எங்களுக்கு உள்ள தொழிலை நீங்க மேலுதா நெனெச்சு உங்க புள்ளையக் கட்டிக் குடுக்கிறதுன்னாக் குடுங்க! அப்பிடிக் குடுக்க மனசில்லீனாப் போங்க…”

கோபத்தோடு எழுந்து வருபவராக இருந்தார் இவர். “..மாமா நாங்கஅந்த அர்த்தத்துல இதையச் சொல்லுலீங்க. கண்ணாலத்துக்கும் பொறகாச்சு மாப்பிளெ தொழிலெ மாத்தீட்டாங்கன்னா நல்லதுன்னு அவிக ஆசைப்படுறாங்க. இதுல என்னங்க தப்பு…?”

“ச்…செரி  இருக்கட்டும்!அதெயெப்பத்தி பொறகு பாக்குலாம்..”

சற்றுச் சமாதானம் ஆனார்!

ஆனாலும் சுப்பையனின் சுபாவத்துக்கு ஏற்றார் போலவும் இந்தக்குடித்தனத்தின் நிலைமைக்குத் தகுந்தார்ப்போலவும் பெண் அமைய வேண்டுமென்றுஅக்கறையாய் இருந்தார்.!

முருகம்மாளின் அபிப்ராயத்தையும் மனதில் வாங்கிக்கொண்டு “எல்லாம் ஆண்டவன் சித்தம்! அந்த அய்ய மலையான் பேர்ல பாரத்தைப் போட்டுட்டு செய்யிறதைச் செய்யலாம் என இந்தத் தடவை நம்பிக்கையோடுதான் போயுள்ளார் என்பதும் நினைவுக்குள்ளே சுழன்றது.

(தொடரும்)