பட்ஜெட் கூட்டத் தொடர் இந்தியாவின் வளர்ச்சிக்கானதாக இருக்கும் – பிரதமர் மோடி

பட்ஜெட் கூட்டத்தொடரில் ஆக்கப்பூர்வமான விவாதங்களை எம்.பி.க்கள் முன்னெடுக்க வேண்டும் என்றும், இந்தக் கூட்டத் தொடர் இந்தியாவின் வளர்ச்சிக்கானதாக இருக்கும் எனவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

2022-23ம் நிதியாண்டுக்கான 17வது நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்கியுள்ளது. தொடக்க நாளான இன்று, இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் உரையாற்றினார்.

நாளை பிப்.1ம் தேதி காலை 11 மணிக்கு 2022-23ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை (காகிதம் இல்லாத வகையில் டிஜிட்டல் முறையில்) நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார்.

பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்னதாக நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது: இந்த பட்ஜெட் கூட்டத் தொடர் இந்தியாவின் வளர்ச்சிக்கானதாக இருக்கும். உறுப்பினர்களின் விவாதமும் இந்தியாவின் வளர்ச்சிக்கானதாக இருக்கும் என்று நம்புகிறேன் எனத் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் அனைத்து விவகாரங்களையும் விவாதிக்க மத்திய அரசு திறந்த மனதுடன் உள்ளது என்றும், ஆக்கப்பூர்வமான விவாதங்களை எம்.பி.க்கள் முன்னெடுக்க வேண்டும் எனவும் கூறினார். பட்ஜெட்டில் பல முக்கியமான விஷயங்கள் விவாதிக்கப்படுகின்றன. நாட்டின் பொருளாதார முன்னேற்றம், தடுப்பூசி திட்டம் உள்ளிட்டவை உலக நாடுகளுக்கு நம்பிக்கை அளிக்கிறது. மத்திய நிதிநிலை அறிக்கை உலகளாவிய அளவில் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும் என்றார்.

தேர்தல் நடைபெறுவது பட்ஜெட் கூட்டத்தையும், விவாதங்களையும் பாதிக்கும் என்பது உண்மைதான். ஆனால், பட்ஜெட் கூட்டத்தை எவ்வளவு பயனுள்ளதாக ஆக்குகிறோமோ, அந்த அளவுக்கு ஆண்டின் பிற்பகுதியில் நாட்டை பொருளாதார உயரத்துக்கு கொண்டு செல்ல சிறந்த வாய்ப்பாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.