தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி: கோவையில் 10 ஆயிரம் பேர் பங்கேற்பு

கோவையில் 19 இடங்களில் தேர்தல் நடத்தும் அலுவலர்க்கான பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது. மொத்தம் 10 ஆயிரத்து 172 பேர் பங்கேற்றுள்ளனர்.

தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் உள்ள 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு பிப்.,19ல் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட கடந்த 26ம் தேதி முதல் தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன.

இதனிடையே தேர்தல் பணியில் ஈடுபடும் அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு கோவையில் இன்று பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது.

இதற்காக மாநகர பகுதிகளில் உள்ள 5 மண்டலங்களுக்கும் தனித்தனியாக முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அதன்படி, வடக்கு மண்டலத்திற்கு பி.எஸ்.ஜி தொழில் நுட்ப கல்லூரி, மத்திய மண்டலத்திற்கு நிர்மலா மகளிர் கல்லூரியிலும், கிழக்கு மண்டலத்திற்கு ராமநாதபுரம் மகளிர் பள்ளியிலும், மேற்கு மண்டலத்திற்கு அம்மணியம்மாள் பள்ளியிலும், தெற்கு மண்டலத்திற்கு ஆர்.கே.வி பள்ளியிலும் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இது தவிர புறநகர பகுதிகளில் 14 இடங்களில் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாநகர பகுதியில் மட்டும் 6 ஆயிரம் பேருக்கும், புற நகர பகுதியில் 4 ஆயிரத்து 172 பேருக்கும் என மொத்தமாக 10 ஆயிரத்து 172 அதிகாரிகளுக்கு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.

இவர்களுக்கு பேலட் இயந்திரங்கள் மற்றும் கண்ட்ரோல் இயந்திரங்களை எப்படி கையாள்வது, இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டால் எப்படி சரி செய்வது, வாக்கு எண்ணும் மையங்கள் மற்றும் தேர்தல் நடைபெறும் இடங்களில் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் என்ன என்பது குறித்த பயிற்சிகள் வழங்கப்பட்டது.

தேர்தல் நடைபெறும் முன்பும் இதே போல் பயிற்சி வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.