அவமானம் சிலைகளுக்கு அல்ல!

இந்த 21ஆம் நூற்றாண்டிலும் தலைவர்கள் மற்றும் கடவுளின் உருவ சிலை உடைப்பு, அவமானம், சேதம் ஆகியவை நடைபெறுவது மிகுந்த வருத்தத்திற்கும் அவமானத்துக்கும் உரியது. உலக அளவில் தகுதி வாய்ந்த பெரியோருக்கு சிலை வைப்பது நம் மக்களுடைய மரியாதையை, மதிப்பை வெளிப்படுத்தும் மரபாகவே இருந்து வருகிறது. அதிலும் தமிழகத்தில் ஊருக்கு உழைத்த வீரர் போன்றவர்களுக்கு நடுகல் என்னும் வீரக்கல் வைத்து வழிபடுவது தொடங்கி தற்போது சிலை வைத்து பெருமைப்படுவது வரை ஒரு நீண்ட நெடிய பாரம்பரியம் உள்ளது.

ஆனால் சில காலமாக பொது இடங்களில் உள்ள சிலைகளை சமூக விரோதிகள் சேதப்படுத்துவதும், அவமானப் படுத்துவதும் நடந்து வருகிறது. இதனால் அந்தந்த பகுதிகளில் சமூக அமைதியும் சீர்குலைகிறது. பொதுவாக இது மிகப் பெரும்பான்மையான பொதுமக்களுக்கும், மற்றவர்களுக்கும் தொடர்பில்லாத சிலரால் செய்யப்படுகிறது. கிட்டத்தட்ட மனநோயால் பாதிக்கப்பட்டவர்கள் போல இந்த சமூக விரோத சக்திகள் செயல்படுவது மொத்த சமூகத்தையும் தலைகுனிய வைக்கிறது.

ஒரு தலைவர் அல்லது கடவுளின் மேல் பற்றுக் கொண்டவர்கள் இந்த சமூகத்துக்கு அவர்களால் விளைந்த பயனை எண்ணி நன்றியும் மரியாதையும் செலுத்தும் விதமாக சிலையை நிறுவுவதும், பெருமைப்படுத்துவதும் பொதுவெளியில் அனுமதிக்கப்பட்ட ஒன்று. சொல்லப்போனால் அது நம் சமூகத்தின் பெருமைக்குரிய ஒரு அடையாளமும் கூட. இதற்கு திருவள்ளுவர் சிலையும், பட்டேல் சிலையும், பெரியார் சிலையும், நாடெங்கும் உள்ள மகாத்மா காந்தி சிலைகளும் நல்ல எடுத்துக்காட்டு என்று கூறலாம். இவ்வாறு சிலையை நிறுவி பெருமைப்படுத்துவது நமது சமூகத்தின் உயரிய விழுமியங்களில் ஒன்று என்றும் கூறலாம்.

ஒரு குறிப்பிட்ட தலைவரை பிடிக்காதவர்கள் இருக்கலாம், அவரின் கொள்கைகளை ஏற்காதவர்கள் இருக்கலாம். அது அவர்களுடைய தனி உரிமை. அவரவர்களுக்குரிய, பிடித்த கொள்கைகளையும் தலைவர்களையும் பின்பற்ற எந்தத் தடையும் இல்லை. இந்திய ஜனநாயகத்தில் இவ்வாறு பல இயக்கங்கள் இயங்கி வருகின்றன. ஆனால் விஷக்கிருமிகள் போல சிலர் மட்டும் இது போன்ற தகாத செயல்களில் ஈடுபடுகின்றனர். சிலைகளை எதிர்மறையாக எண்ணி சேதப்படுத்துவது, அவமானப்படுத்துவது என்று கீழ்த்தரமாக நடந்து கொள்கின்றனர். இது பொதுமையான நாகரீக சமூகத்தில் கண்டிக்கத்தக்க ஒன்று. தற்போது உலகம் போகின்ற வேகத்தில் நம்நாடு சாதிக்க வேண்டியது ஏராளமாக இருக்கிறது. 130 கோடி பேர் கொண்ட நாட்டில் நமக்கு பல தேவைகள் இருக்கின்றன. அவற்றை நிறைவேற்ற நல்ல முறையில் இயங்காமல், வீணாக தங்களுடைய வாழ்க்கையையும் கெடுத்துக்கொண்டு, தங்கள் குடும்பத்துக்கும், சமூகத்துக்கும் எந்த பயனும் இன்றி திரிவது அறிவற்ற செயலாகும்.

மக்கள் சமூகத்திற்காக செயல்படும் அனைத்து தலைவர்கள், அவர்களின் கருத்துகள், அவர்களுக்கு வைக்கப்படும் சிலைகள் என்று அனைத்துமே இந்த சமூகத்தின் சொத்து ஆகும். ஒரு தலைவர் குறித்து அல்லது ஒரு கருத்து குறித்து மாற்றுக் கருத்துக் கொண்டவர்கள், அதனை கருத்தால் எதிர்கொள்ள வேண்டும். அதை விட்டுவிட்டு, இவர்களைப் போல திருட்டுத்தனமாக இதுபோல சிலைகளை சேதப்படுத்துவது, அவமானப்படுத்துவது போன்றவற்றில் ஈடுபடுதல் தவறு. இதுபோல அர்த்தமில்லாத, வறட்டு செய்கைகளால் சமூகத்துக்கும் அரசுத் துறைகளுக்கும் தனிநபர்களுக்கும் சிரமம்தான் ஏற்படும். எனவே இது போன்ற செயலில் ஈடுபடுவோர் யாராக இருப்பினும் அவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்கள் சார்ந்த இயக்கங்களுக்கும் இவர்களால் களங்கம் ஏற்படுவதால் அந்தந்த இயக்கங்களும் இவர்களை கண்டறிந்து ஒதுக்கவேண்டும். ஊக்குவிக்கக் கூடாது.

பொதுவெளியில் இதற்காக ஒரு விவாதம் நடத்தப்பட்டு இதுபோன்று செய்பவர்கள் தனிமைப் படுத்தப்பட வேண்டும். அவர்களுக்கு சமூக அங்கீகாரம் கிடைக்கக் கூடாது. இது உண்மையிலேயே மக்கள் சமூகத்தின் முன் வெட்கித் தலைகுனியும் செயல் என்பது அவர்களால் உணரப்பட வேண்டும்.