விழித்துக் கொண்டால் வென்றிடலாம் புற்றுநோயை!

குப்புசாமி நாயுடு மருத்துவமனையின் மருத்துவர்களின் சிறப்பு நேர்காணல்

1900 களில் மரணத்திற்கு முக்கியக் காரணமாக இருந்த புற்றுநோய் 6 வது இடத்தில் இருந்து நகர்ந்து தற்பொழுது 2 வது இடத்திற்கு முன்னேறி உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது பத்து இலட்சம் பேர் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர் என மருத்துவ ஆய்வுகளும் கூறுகின்றன.

தலை முதல் பாதம் வரையிலான எந்த உறுப்புகளிலும் எப்பொழுது வேண்டுமானாலும், ஒருவருக்கு புற்றுநோய் ஏற்படலாம். ஆனால், ஆரம்ப நிலையிலே கண்டறிந்தால் சிகிச்சையில் பலனும், முன்னேற்றமும் கிடைப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 4 ஆம் தேதி உலக புற்றுநோய் தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்த ஆண்டின் விழிப்புணர்வு மையக் கருத்தாக, புற்று நோய்க்கான சிகிச்சையில் மேல்தட்டு மற்றும் கீழ்த்தட்டு மக்களுக்கு இடையே உள்ள இடைவெளியை நீக்கி ஒரே மாதிரியான சிகிச்சையை வழங்க வேண்டும் எனபதை நோக்கமாக கொண்டுள்ளது. இதை வெகுசீக்கிரமாக நடைமுறைப் படுத்த வேண்டுமெனில் நோய் வராமல் இருப்பதற்கான தடுப்பு முறைகளை மக்கள் பின்பற்ற வேண்டும்.

கோ.குப்புசாமி நாயுடு நினைவு மருத்துவமனையில் செயல்படும் வாளவாடி நாராயணசாமி புற்றுநோய் மையத்தைச் சேர்ந்த மருத்துவர்களிடம் புற்றுநோய் தினத்தை முன்னிட்டு, இந்நோய் தொடர்பான சந்தேகங்களையும், சிகிச்சை வழங்கும் முறைகள், முன்னெச் சரிக்கை வழிமுறைகள் பற்றியும் கேட்டறிந்தோம். அந்த தகவல் திரட்டை இத்தொகுப்பில் காணலாம்.

வாளவாடி நாராயணசாமி புற்றுநோய் மையம்

60 ஆண்டுகளுக்கும் மேலான நம்பிக்கை

டாக்டர் ரகுபதி வேலுசுவாமி, சி.இ.

தென்னிந்தியாவில் உள்ள சிறந்த புற்றுநோய் சிகிச்சை மையங்களில் கோ.குப்புசாமி நாயுடு நினைவு மருத்துவமனையில் 1958ம் ஆண்டு நிறுவப்பட்ட க்ஷிழிசிசி எனும் வாளவாடி நாராயணசாமி புற்றுநோய் மையம் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. பலதரப்பட்ட புற்றுநோய்களுக்கான தீர்வினை ஓரே கூரையின் கீழ் கடந்த அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக வழங்கி வருகிறது.

அப்போதிருந்தே குறுகிய கால இடைவெளியில் புற்றுநோய்க்கு அயல்நாடுகளிலும் நம் நாட்டின் முக்கியப் பகுதிகளிலும் உபயோகிக்கப்படும் சிறப்பு மருத்துவ உபகரணங்களை நம் கோவை பகுதிக்கு இம்மையம் அறிமுகம் செய்தது.

குறிப்பாக 2008ல் இந்திய நாட்டின் முன்னாள் ஜனாதிபதியும், மாணவர்களின் வழிகாட்டியுமான ஏ.பி.ஜெ அப்துல் கலாம் அவர்களின் பொற்கரங்களால் பொன்விழா கட்டிடம், ஸ்டெம்செல் & எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சைப் பிரிவு மற்றும் பசுமைப் பூங்கா திறக்கப்பட்டது.

இங்கு ஆரம்ப கட்டத்திலிருந்து இப்போது வரை புற்றுநோய் சிகிச்சையில் பிரசித்தி பெற்ற நிபுணர்கள் மூலமாக, சிகிச்சைகள் வழங்கப்பட்டு வந்துள்ளன. அதன் பின் திறமை மிக்க கதிர்வீச்சு புற்றுநோயியல் நிபுணர்கள், அறுவை சிகிச்சை புற்றுநோயியல் நிபுணர்கள், மருத்துவப் புற்றுநோயியல் நிபுணர்கள், நோயியல் நிபுணர்கள், கதிரியக்க வல்லுநர்கள் மற்றும் ஆறுதல் மருத்துவ & இல்லற மருத்துவ நிபுணர்கள் என ஒருங்கிணைந்த புற்றுநோய் வல்லுநர் குழு கட்டமைக்கப்பட்டது.

2001 முதல் 2017 வரை ஒவ்வொரு ஆண்டும் புற்றுநோய் சிகிச்சைக்கான கதிர்வீச்சு உபகரணம், சி.டி.கருவிகள், லீனியர் ஆக்சிலரேட்டர், சிகிச்சைக்கான தனி வார்டு, குழந்தைகளுக்கான புற்றுநோய் பிரிவு, புற்றுநோய் ஆராய்ச்சியகம் என அனைத்தும் தொடர்ச்சியாக இந்த மையத்திற்குள் வந்து சேர்ந்தன.

கோவை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் புற்றுநோய் பரிசோதனை முகாம்கள் மூலம் புற்றுநோயைத் தடுப்பதற்கும், முன்கூட்டியே கண்டறிவதற்கும் இம்மையம் தொடர்ந்து முக்கியத்துவத்தை அளித்து வருகிறது.

சிகிச்சையோடு கூடிய ஆதரவு!

டாக்டர் ராஜ்குமார், தலைவர், புற்றுநோயியல் துறை

உயிரணுக்களின் கட்டுப்பாடற்ற வளர்ச்சியினாலே புற்றுநோய் உருவாகிறது. இது தலை முதல் கால் வரையிலான எந்த உறுப்பிலும் தொடங்கலாம். 2021 ஆம் ஆண்டின் ஐசிஎம்ஆர் கணக்கெடுப்பின் படி இந்தியாவில் புதிதாக 13லட்சம் பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கடந்த ஆண்டு இந்தியாவில் 8லட்சம் பேர் இந்நோயினால் உயிரிழந்துள்ளனர். உலகளவிலும் 7 சதவீத உயிரிழப்பு புற்றுநோயினால் ஏற்படுகிறது.

குப்புசாமி நாயுடு மருத்துவமனையில் 1958ல் புற்றுநோய் துறை உருவாக்கப்பட்டது. அந்த காலகட்டத்தில் தமிழ்நாட்டில் சென்னை மற்றும் குப்புசாமி நாயுடு மருத்துவமனையில் மட்டுமே புற்றுநோய்க்கான மையம் இருந்தது. ஆரம்பத்தில் டீப் – எக்ஸ் ரே என்று சொல்லக்கூடிய கதிர்வீச்சு இயந்திரத்தோடு தொடங்கப்பட்டு இன்று பல மடங்கு பெரிதாகி தொழில்நுட்பம், திறமை வாய்ந்த மருத்துவர்கள், தரமான சிகிச்சை முறைகள் என விரிவடைந்துள்ளது.

புற்றுநோய்க்கு அளிக்கும் சிகிச்சையில் பல பரிணாமங்கள் உள்ளன. அவற்றில் புற்றுநோயை ஆரம்ப நிலையில் கண்டறிவதில் இருந்து, ஒரு நோயாளிக்கு பல சிறப்பு மருத்துவர்கள் சிகிச்சை வழங்க ஈடுபடும் வரை பல பிரிவுகளை உட்புகுத்தி கட்டமைத்துள்ளோம். தொழில்நுட்பத்தைப் பொறுத்தவரை அந்தந்த காலத்திற்கு ஏற்ப ரேடியோதெரபி இயந்திரங்களை மேம்படுத்திக் கொண்டே வருகிறோம்.

அப்போதெல்லாம், பொது மருத்துவர்களே புற்றுநோய்க்கும் சிகிச்சை அளித்தனர். அறுவை சிகிச்சை, ரேடியேஷன் மற்றும் கீமோ தெரபி என மூன்று வகையான சிகிச்சை முறைகள் உள்ளன. சில நோயாளிகளுக்கு இம்மூன்றுமே தேவைப்படும். ஆரம்பத்தில் ரேடியோ தெரபிக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவரே கீமோ தெரபிக்கும், பொது அறுவை சிகிச்சை பிரிவைச் சேர்ந்த மருத்துவரே புற்றுநோய்க்கும் சிகிச்சை அளித்தார்.

நாளடைவில் இம்முறை மாறி புற்றுநோய் துறையில் ஒவ்வொரு பிரிவிற்கும் தனி மருத்துவர்களும், பல கிளைப் பிரிவுகளும் உருவானது. இதில் பல சிறப்பு மருத்துவர்கள் ஈடுபடுவார்கள். புற்றுநோய்க்கென்று சிகிச்சை அளிப்பதற்காகவே ஒவ்வொரு சிறப்பு பிரிவிலும் 2 முதல் 3 மருத்துவர்கள் உள்ளதோடு புற்றுநோய்க்கு சிகிச்சை வழங்கும் எங்கள் குழுவிலும் 12 சிறப்பு மருத்துவர்கள் உள்ளனர்.

தொழில்நுட்பத்திலும், மருத்துவ நிபுணத்துவத்திலும் கடந்த 65 வருடங்களாக குப்புசாமி நாயுடு மருத்துவமனை படிப்படியாக வளர்ந்து வந்துள்ளது. இதனால் பல நோயாளிகள் பயனடைந்துள்ளனர். அறுவை சிகிச்சை, ரேடியோ மற்றும் கீமோ தெரபியில் பல நவீன தொழில்நுட்பங்களும், சிகிச்சை முறைகளும் இங்குள்ளன.

புற்றுநோய்க்கு சிகிச்சை வழங்குவதோடு நோயாளிக்கு மனதளவிலும் ஆதரவு தரவேண்டும். இவர்களுக்கென கவுன்சிலிங் வழங்கும் தனிக்குழுவும் இங்குள்ளது.

சிகிச்சையின் போது பொருளாதார நெருக்கடியை குடும்பத்தினர் எதிர்கொள்ள வேண்டி வரும். இதற்கு உதவும் வகையில் அவர்களுக்கு பொருளாதார உதவி கிடைப்பதற்கான வழிகாட்டுதல்களையும் வழங்குகிறோம்.

புற்றுநோய் சிகிச்சையின் முன்னோடி!

டாக்டர் நாகராஜன், இயக்குனர், ஆராய்ச்சி துறை, VNCC

ப்புசாமி நாயுடு மருத்துவமனையில் 1958 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட வாளவாடி நாராயணசாமி புற்றுநோய் மையம் (VNCC) புற்றுநோய்க்கு சிகிச்சை வழங்குவதில் முன்னோடியாக செயல்பட்டு வருகிறது. மேலும் இம்மையத்தில் 2008 முதல் புற்றுநோய்க்கான ஆராய்ச்சி மையமும் (Clinical Research) செயல்படுகிறது. கிளினிக்கல் ரிசெர்ச் ட்ரயல் யூனிட் என்பது புற்றுநோய் ஆராய்ச்சியிலும், சிகிச்சையிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.

இங்கு புற்றுநோய்க்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் இருந்து நோய்த் தடுப்பு மற்றும் சிகிச்சை வரை அதற்கான மருத்துவ ஆரய்ச்சிகள் (Clinical Trials) நடைபெறுகிறது. VNCC மையத்தில் கழுத்து மற்றும் தொண்டை, இரைப்பை குடல், மார்பகம், gynae, நுரையீரல், குழந்தை புற்று நோய், இரத்த புற்று நோய் மருத்துவம் ஆகியவற்றிற்கு பல்துறை சிறப்பு மருத்துவ சிகிச்சை முறைகள் வழங்கப்படுகின்றன.

மேலும் புற்றுநோய் மருந்தியல், அறுவை சிகிச்சை, கதிர்வீச்சு புற்றுநோயியல், ஹேமடாலஜி மற்றும் ஸ்டெம் செல் சிகிச்சைப் பிரிவு, போலியேடிவ் கேர் மருத்துவம் ஆகிய அதிநவீன சேவைகளும் இங்குள்ளன.

நாடு முழுவதும் ஒரே மாதிரியான புற்றுநோய் சிகிச்சையை வழங்க வேண்டும் என்ற நோக்கத்தை கொண்டு செயல்படும் அமைப்பான, நேஷனல் கேன்சர் கிரிட் (NCG) என்ற அமைப்பிலும் உறுப்பினராக உள்ளோம்.

தற்பொழுது இந்தியா முழுவதிலிருந்து அனைத்து மாநிலங்களிலும் 264 மையங்கள் இதில் உறுப்பினராக உள்ளன. புற்றுநோய் தொடர்பான வழிகாட்டுதல் களையும், நெறிமுறைகளையும் இவ்வமைப்பு உருவாக்குவதோடு பல புற்றுநோய் மையங்களுடன் இணைந்து ஆராய்ச்சியிலும் ஈடுபட்டு பொதுவான ஆராய்ச்சி தளத்தை உருவாக்குகிறார்கள்.

ஒரு புற்றுநோய் மையத்தில் அனைத்து விதமான வசதிகளும் உள்ளனவா, அங்குள்ள நிறை, குறைகளை நிபுணத்துவம் பெற்ற குழுவை அனுப்பி பார்வையிடுவார்கள். மையத்தை முழுமையாக சோதித்த பின்னர் ஏதேனும் குறைகள் இருந்தால் அதனை நிவர்த்தி செய்வதற்கான ஆலோசனையும் வழங்குகிறார்கள். (இவை மையத்தின் சுய விருப்பத்தின் பேரில் நடைபெறும்)

இம்மையத்தால் நடத்தப்படும் ஆலோசனைக் கூட்டங்களில் முன்னெச்சரிக்கையில் இருந்து நோய்த்தடுப்பு மற்றும் சிகிச்சை வரை பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன.

புற்றுநோய் அணுக்களை தகர்க்கும் சிகிச்சை

டாக்டர் சிவநேசன், மருந்தியல் புற்றுநோய் நிபுணர்

கேன்சர் செல்களின் பெருக்கத்தைக் குறைக்கவும் அதன் வளர்ச்சியைத் தடுக்கவும் சக்திவாய்ந்த மருந்துகள் மூலம் அளிக்கப்படும் சிகிச்சையின் பெயர் கீமோதெரபி.

ரத்த புற்று நோய்க்கு இது தான் முக்கியமான சிகிச்சையாக இருக்கும், பெரும்பாலும் இந்த முறையிலேயே அதை குணப்படுத்த முடியும். ஆனால் உறுப்பு சார்ந்த புற்றுநோய்களுக்கு அறுவை சிகிச்சை, கதிர்வீச்சு சிகிச்சையுடன் கீமோதெரபி வழங்கப்படும்.

நோயாளிகளின் உடல் திறனை பல கோணங்களில் ஆய்வுசெய்த பின்னர் கீமோதெரபி வழங்கப்படும். இந்த முறை சிகிச்சையில், சில பக்கவிளைவுகளும் இருக்கத்தான் செய்கிறது.

இன்று மருத்துவப் புற்றுநோயியல் துறையில் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டு வருகிறது. உடலில் உள்ள புற்றுநோய் அணுக்களை மட்டும் கண்டுபிடித்து அதை அழிக்கக்கூடிய டார்கெட்டட் தெரபி எனும் சிகிச்சை தற்போது உள்ளது.

இத்துடன் இம்யூனோ தெரபி (Immuno therapy) என்ற அதிநவீன சிகிச்சை இன்று நல்ல மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. நோயாளியின் உடலில், எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சிகிச்சை இது. இதன் மூலம் புற்றுநோய் செல்களை கட்டுப்படுத்தலாம்.

இயல்பாக மருந்துகள் மூலம் வழங்கப்படும் கீமோதெரபியை விட இந்த இரண்டு சிகிச்சையிலும் பக்கவிளைவுகள் மிக குறைவு.

தற்போது உள்ள மருத்துவ வளர்ச்சியில், புற்றுநோய்கள் ஏற்படுவதற்கு முன்னதாகவே ஒருவருக்கு அதன் ஆபத்து உள்ளதா என்று கண்டறியக்கூடிய சோதனைகள் இருக்கின்றது. வயதிற்கேற்ப அவற்றை சோதனை செய்து, மருத்துவர்களை அணுகும் பட்சத்தில், ஆபத்தை எளிதில் கண்டுபிடித்து முழுமையாக சரி செய்துவிடலாம்.

தடுப்பூசி எனும் வேலி!

டாக்டர் லதா பாலசுப்ரமணி, மகளிர் புற்றுநோயியல் & அறுவை சிகிச்சை நிபுணர்

பெண்களுக்கு ஏற்படும் புற்றுநோய்களில் பரவலாகக் காணப்படுவது மார்பகப் புற்று நோய் மற்றும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய். இதில் நகர்ப்புறங்களைப் பொறுத்தவரை மார்பகப் புற்றுநோயும், கிராமப் புறங்களில் கர்ப்பப்பை வாய் புற்றுநோயும் பெண்களுக்கு ஏற்படுவதை காண முடிகிறது.

இந்த இரண்டு புற்றுநோய்களில் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் ஏற்படுவதை முன் கூட்டியே தடுத்திட முடியும். ஆனால் இந்தியாவில் ஒவ்வொரு 8 நிமிடத்திற்கும் ஒரு பெண் இந்த நோயால் இறக்கிறார் என்பது தான் கவலைக்குரியதாக உள்ளது. ஹியூமன் பாபில்லோமா என்ற கிருமியினால் இந்த புற்றுநோய் ஏற்படுகிறது. இப்பாதிப்பு ஏற்படாமல் இருக்க இதற்கான தடுப்பூசியும் நம்மிடையே உள்ளது. இதற்காக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில், இத்தடுப்பூசியை செலுத்திக் கொண்டால் கர்ப்பப்பை வாய் புற்றுநோயை தடுக்க முடியும் என்பதற்கான ஆதார பூர்வமான சான்றுகள் இருக்கின்றன. ஆனால் தடுப்பூசி இருப்பது குறித்த தகவல்கள் நம் மக்களுக்கு இன்னும் முழுமையாக சென்று சேரவில்லை. அதற்கான விழிப்புணர்வு உருவாக வேண்டும்.

இந்த தடுப்பூசியை பெண்களின் 9 வயதில் இருந்து 14 வயது வரைக்கும் இரு தவணைகளாகவும், அடுத்தபடியாக 15 வயதிலிருந்து 26 வயதிலான பெண்களுக்கு மூன்று தவணைகளாகவும் இந்த தடுப்பூசியை போடலாம். இதன் மூலம் 98% வரை இப்புற்றுநோயை கட்டுப்படுத்த முடியும்.

இந்நோய் இருப்பதை முன்னரே கண்டறிய, பாப் ஸ்மியர் என்ற பரிசோதனையின் மூலம் கர்ப்பப்பை வாயில் இருந்து எடுக்கக் கூடிய நீரில் உள்ள செல்களில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டுள்ளதா என சோதனை செய்யப்படுகிறது. மேலும் ஹெச்.பி.வி கிருமியினால் இந்நோய் ஏற்படுவதால் அதனைக் கண்டறியும் வகையில் ஹெச்.பி.வி என்னும் பரிசோதனை மூலமாகவும் இதனைக் கண்டறியலாம்.

பெண்கள் தங்கள் 35 வயது மற்றும் 45 வயதில் இந்த ஹெச்.பி.வி பரிசோதனையை மேற்கொள்ள வேண்டுமென உலக சுகாதார அமைப்பு வலியுறுத்துகிறது. இதனால் இந்நோயை ஒழிக்கக் கூடிய வாய்ப்பு உள்ளது.

பெண்கள் தங்களின் மாதவிடாய் காலத்தின் இறுதி நாட்களில் மார்பகங்களை சுய பரிசோதனை செய்ய வேண்டும். கட்டி இருந்தாலும் அதனால் தொந்தரவு ஏற்படவில்லை என சாதாரணமாக விட்டு விடாமல் மருத்துவரிடம் ஒரு முறை பரிசோதிப்பது அவசியம். மேலும் கட்டி இருந்தால் அதற்காக அச்சம் கொள்ள வேண்டியதில்லை.

குறிப்பிட்ட வயதிற்கு மேல் மாதவிடாய் நின்ற மகளிரும் மார்பக சுய பரிசோதனை செய்வது முக்கியம். மேலும் 40 வயதிற்கு மேற்பட்டவர்கள் மார்பக புற்றுநோய் இருப்பதை கண்டறியும் மேமொகிராம் என்ற எக்ஸ் ரே பரிசோதனையை ஒன்றரை வருடம் அல்லது இரண்டு வருடத்திற்கு ஒரு முறை எடுக்க வேண்டும்.

பெண்களுக்கு பொதுவாக ஏற்படும் இந்த இரண்டு புற்று நோய்களையும் ஆரம்ப நிலையிலே கண்டறிந்தால் எளிதாக குணப்படுத்தலாம்.

வாழ்க்கை முறை மாற்றமும் காரணம்!

டாக்டர் அருள்ராஜ், புற்றுநோய் அறுவை சிகிச்சை துறை

மாபகப் புற்றுநோயில் நான்கு நிலைகள் உள்ளன. கடந்த 10 வருடங்களுக்கு முன்பு வரை புற்றுநோயின் மூன்றாம் மற்றும் நான்காவது நிலையிலே தான் 60 முதல் 70 % வரையிலான நோயாளிகள் சிகிச்சைக்கு வந்தனர். தற்போது நிலை ஒன்று மற்றும் இரண்டிலே நோயாளிகள் அதிகம் வருகின்றனர். நிலை 1 மற்றும் 2, நிலை 3 மற்றும் 4 இல் வரக்கூடிய நோயாளிகளின் விகிதமும் சமமாக உள்ளது.

இந்த சரிவிகிதத்திற்கு பொது மக்களிடையே ஏற்பட்ட விழிப்புணர்வு தான் காரணம். மார்பகப் புற்றுநோயை முன்கூட்டியே கண்டறியும் மேமொகிராம் பரிசோதனை குறித்த விழிப்புணர்வினால் புற்றுநோயின் ஆரம்ப நிலையில் வரும் நோயாளிகள் அதிகரித்துள்ளனர்.

கடந்த 5 வருடங்களுக்கு முன்பு வரையிலும் விணீstமீநீtஷீனீஹ் என்ற அறுவை சிகிச்சையின் மூலம் மார்பகம் அகற்றப்பட்டது. தற்பொழுது மார்பகத்தை அகற்றுவது முற்றிலும் குறைக்கப்பட்டு, நிலை 1 மற்றும் 2 இல் வருபவர்களுக்கு கட்டி மட்டும் நீக்கப்படுகிறது. நிலை மூன்றில் வருபவர்களுக்கும் கட்டி மட்டுமே நீக்கப்படுகிறது. முழு மார்பகத்தையும் எடுப்பதற்கான தேவை குறைந்து வருவதோடு, கட்டியை அகற்றும் முறையே அதிகரித்து வருகிறது.

மேலும் பரம்பரை காரணிகளால் மார்பகப் புற்றுநோய் ஏற்படுவது குறைவுதான். வாழ்க்கை முறை மாற்றங்களின் காரணமாகவே இந்தப் புற்றுநோய் அதிகளவில் வருகிறது. ஈஸ்ட்ரோஜென் ஹார்மோனின் தாக்கம் அதிகமிருப்பதால் மார்பகப் புற்றுநோய் வருகிறது. விரைவில் பூப்படைதல், 30 வயதிற்கு மேல் குழந்தை பெற்றுக் கொள்ளுதல் ஆகிய காரணங்களினால் ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் அதிகளவில் சுரந்து, மார்பகப் புற்றுநோயை ஏற்படுத்துகிறது.

எனவே, 40 வயதிற்கு மேற்பட்டவர்கள் வருடத்திற்கு ஒருமுறை மேமோகிராம் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். இதன் மூலம் ஆரம்ப நிலையிலே நோயைக் கண்டறிந்து குணப்படுத்த முடியும்.

புகையிலை பழக்கத்தை கைவிடுவீர்!

டாக்டர் மோகன் ராஜ், புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர்

தலையில் இருந்து கழுத்து பகுதி வரையிலும் புற்றுநோய் ஏற்படும். அவற்றில் பரவலாகக் காணப்படுவது வாயில் ஏற்படும் புற்றுநோய் தான். வாய் என்று குறிப்பிடும் பொழுது அதில், நாக்கு, கன்னம், தாடை போன்ற பகுதிகளிலும் புற்றுநோய் வரலாம். பீடி, சிகரெட், குட்கா, ஆல்கஹால் போன்ற பழக்க வழக்கங்கள் இருப்பதே இப்பகுதிகளில் இந்நோய் ஏற்படுவதற்கு முக்கிய காரணமாக இருக்கின்றன.

கிராமப்புறங்களில் சில பெண்களுக்கு புகையிலை போடும் பழக்கம் இருப்பதை காணமுடிகிறது. இதுவும் வாய் புற்றுநோய் ஏற்பட ஒரு முக்கிய காரணமாக உள்ளது. இது போன்ற நோய் ஏற்படாமல் தடுக்க வேண்டுமென்றால், புகையிலை பழக்கம் உள்ளவர்கள் தங்கள் உடல்நலம் கருதி அதனைக் கைவிட்டால் சிறந்தது.

ஆரம்ப நிலையிலே இந்நோயை கண்டறிவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளன. நாக்கு மற்றும் கன்னம் ஆகிய பகுதிகளில் ஏதேனும் புண் ஏற்பட்டு அவை குணமாகாமல் இருந்தாலோ அல்லது கீழ் தாடை மற்றும் கழுத்து பகுதிகளில் எதேனும் கட்டி போன்று தென்பட்டாலோ உடனே மருத்துவரை அணுக வேண்டும்.

புற்றுநோய் பாதிக்கப்பட்டவர்கள் நோயின் மூன்றாவது நிலையிலே மருத்துவமனைக்கு வருகின்றனர். ஆரம்ப நிலையிலே மருத்துவமனைக்கு வரும்பொழுது சிகிச்சை அளித்து குணப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. மூன்றாவது நிலையில் வரும்பொழுது அவர்களுக்கு அறுவை சிகிச்சை, கதிர்வீச்சு, கீமோ தெரபி சிகிச்சைகள் வழங்கப்படும். இது போன்ற சிகிச்சைகள் மேற்கொள்ளும் போது அதற்கான கால அவகாசமும் அதிகரிக்கும்.

அறுவை சிகிச்சை பயம் வேண்டாம்!

டாக்டர் வெங்கடேசன், புற்றுநோயியல் அறுவை சிகிச்சை நிபுணர்

புற்றுநோய் அறுவை சிகிச்சை குறித்து பொது மக்களிடையே சில தேவையற்ற பயம் நிலவுவதைக் காண முடிகிறது. இந்த பயம் அவசியமற்றது பல திட்டமிடுதலுக்கு பின்னரே அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.

புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டு, அதன் நிலையை உறுதி செய்த பின்னர் சிகிச்சை அளிப்பதற்கான ஒரு திட்டம் உருவாக்கப்படுகிறது. அதில் கீமோதெரபி, அறுவை சிகிச்சை, கதிர்வீச்சு சிகிச்சைகளோடு சில சிறப்பு சிகிச்சைகளும் வழங்கப்படுகின்றன. இதில் அறுவை சிகிச்சை முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த சிகிச்சைக்கு பயந்து சிலர் காலம் தாழ்த்தி நோயின் இறுதி நிலையில் அல்லது சிகிக்சை அளிக்க முடியாத நிலையில் மருத்துவமனைக்கு வருகின்றனர். இவற்றைத் தவிர்க்க இதுகுறித்த விழிப்புணர்வை வழங்க வேண்டும்.

புற்று நோய்க்கு அறுவை சிகிச்சை என முடிவான பின்னர், நோயாளியின் உடல் மற்றும் ஊட்டச்சத்து நிலை, நுரையீரலின் இயங்கு திறன் போன்றவை பரிசோதிக்கப்படுகிறது. மேலும் சிகிச்சைக்கு பின் அதிலிருந்து மீண்டு வரக்கூடிய நிலையும் முதலிலே திட்டமிடப்படும்.

அதில் ஊட்டச்சத்து நிலையை சரிசெய்வது, நுரையீரலுக்கான பயிற்சிகள் வழங்கப்படும். வேறு ஏதேனும் உடல் உபாதைகள் இருந்தால் துறை சார்ந்த சிறப்பு மருத்துவர்களின் பரிந்துரைகள் பின்பற்றப்படும். மயக்க மருந்து நிபுணர்களும் முன்னேர கலந்தாலோசித்து என்ன மாதிரியான அனஸ்தீசியா வழங்க வேண்டும் என்பது குறித்தும், வலியைக் குறைக்க என்ன சிகிச்சைகள் வழங்கப்பட வேண்டும் என்பது பற்றியும் திட்டமிடுவார்கள்.

அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் முன்னர் சில விசயங்கள் கடைபிடிக்கப்படுகின்றன. அதில் காலில் ரத்த உறைவு ஏற்படுவதைத் தவிர்க்க, அதை குறைப்பதற்கு உண்டான வழிமுறைகளும், சிகிச்சைகளும் வழங்கப்படுகின்றன.

இது போன்ற சில நடைமுறைகளின் மூலமாக அறுவை சிகிச்சைக்கான நேரம் மற்றும் ரத்தக் கசிவின் அளவு போன்றவற்றை குறைக்க முடியும். இதனால் நோயாளி சிகிச்சை முடிந்து மீண்டு வருவதற்கான நேரமும் குறைகிறது. பின்னர் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கும்பொழுது இயல்பு நிலைக்கு திரும்புவதற்கான நடைப் பயிற்சி, உணவு உண்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

இதுபோன்ற பல நடவடிக்கைகளினால் மீண்டு வருவதற்கான காலம் குறைவதோடு மருத்துவமனையில் தங்கி இருக்கும் நாட்கள் மற்றும் மருந்தின் அளவும் குறைக்கப்படுகிறது. எனவே, புற்றுநோய் அறுவை சிகிச்சை மீதுள்ள தேவையற்ற பயத்தை மக்கள் தவிர்க்க வேண்டும்.

புற்றுநோய்க்கு உண்டான சிகிச்சையை சரியான நேரத்தில் எடுத்துக் கொண்டால் அதன் பலன் முழுமையாக கிடைக்கும். அதோடு சிகிச்சையினால் ஏற்படும் அபாயங்களையும் குறைக்கலாம்.

உடற்பருமனால் புற்றுநோயா?

டாக்டர் ஆனந்த் நாராயன், தலைவர், கதிர்வீச்சு புற்றுநோயியல்

பல காரணங்களால் ஒருவருக்கு புற்றுநோய் ஏற்படலாம். அதில் பரம்பரையாக ஏற்படுதல், சுற்றுச் சூழல் மாசுக்கள் என சில வகை காரணிகளால் உண்டாகும் புற்றுநோயைத் தடுக்க முடியாது. ஆனால் தனிமனித நபரால் சில குறிப்பிட்ட புற்றுநோயை கட்டுப்படுத்துவதற்கான வாய்ப்பு உள்ளன.

இன்றளவும் இந்தியாவில் தோராயமாக 30% புற்றுநோய்கள் புகையிலை பயன்பாட்டினால் வருகின்றன. தற்பொழுது இதுகுறித்த விழிப்புணர்வினாலும், பிரச்சாரத்தினாலும் புகையிலையை உபயோகப்படுத்துவது குறைந்துள்ளது.

மதுப்பழக்கத்தினால் கிட்டத்தட்ட ஆறு வகையான புற்றுநோய் ஒருவருக்கு ஏற்படலாம். உட்கொள்ளும் மதுவின் அளவைப் பொறுத்து அதனால் ஏற்படும் ஆபத்துகளும் அதிகரிக்கின்றன. இப்பழக்கத்தை கட்டுக்குள் வைப்பதன் மூலம் புற்றுநோய் வருவதை தடுக்க முடியும்.

வாழ்க்கை முறை மாற்றம், ஒரே இடத்தில் அமர்ந்து இருப்பது, உணவு பழக்க மாற்றம் ஆகியவற்றினால் உடலில் கொழுப்பு அதிகரித்து உடற்பருமன் உண்டாகிறது. மேலும், 12 வகையான புற்றுநோய்கள் உடற்பருமனுடன் தொடர்புடையது. தற்பொழுது, புற்றுநோய்க்கான முக்கிய காரணியாகவும் இந்த உடற்பருமன் உருவெடுத்துள்ளது. எனவே உடற்பருமன் அதிகரிக்காமல் கட்டுக்குள் வைத்திருப்பது அவசியம்.

சிலவகை வைரஸ்களினாலும் புற்றுநோய் ஏற்படுகிறது. கருப்பப்பை வாய், வாய் பகுதியில் ஏற்படும் புற்றுநோய், மூக்கு மற்றும் கல்லீரல் பகுதியில் வைரசினால் புற்றுநோய் வரலாம். இப்புற்றுநோய்கள் உருவாவதையும் தடுக்க முடியும்.

நம் உணவு பழக்கத்தில் முழு தானியங்கள், பலவகையான காய்கறி மற்றும் பழங்களை சேர்த்துக் கொள்ள வேண்டும். குளிர்பானங்கள், பதப்படுத்தப்பட்ட உணவுகளையும் தவிர்க்க வேண்டும். மட்டன், மாட்டிறைச்சி, பன்றி இறைச்சியை உட்கொள்ளும் போது குடல் தொடர்பான சில புற்றுநோய்கள் வருவதற்கான வாய்ப்பு உள்ளன. எனவே, இதிலும் கட்டுப்பாட்டை பின்பற்ற வேண்டும்.

வேலை நேரத்தின் போது ஒரே இடத்தில் அமர்ந்து கொண்டே இருக்காமல் சிறிது நடத்தல், லிப்ட் உபயோகத்திற்கு பதிலாக மாடிபடி பயன்படுத்துவது என நம் தினசரி வாழ்க்கையில் இதுபோன்ற வழக்கங்களை நடைமுறைப்படுத்தலாம்.

வாரத்திற்கு ஒன்றரை அல்லது இரண்டு மணி நேரம் மிதமான உடற்பயிற்சி செய்வது, பிடித்தமான விளையாட்டில் ஈடுபடுவதன் மூலமும் உடற்பருமனை கட்டுக்குள் வைக்க முடியும். உடற்பருமன் குறையும்பொழுது அதனால் புற்றுநோய் உண்டாவதற்கான ஆபத்து காரணிகளும் குறைகின்றன.

கதிர்வீச்சு சிகிச்சைக்கு தயங்காதீர்!

டாக்டர் கார்த்திகா சிவப்பிரகாசம், கதிர்வீச்சு புற்றுநோயியல் நிபுணர்

பெரும்பாலான புற்றுநோய் கட்டிகளுக்கு கதிர்வீச்சு சிகிச்சை முறையை பயன்படுத்தலாம். இந்த சிகிச்சையின் போது சில கட்டிகள் விரைவிலே கரைந்து விடும். மேலும் சில கட்டிகளை மீண்டும் வளர முடியாதவாறு கட்டுப்படுத்த முடியும். கதிர்வீச்சு அளிக்கும் போது கூடுதலாக அறுவை சிகிச்சையோ அல்லது கீமோ தெரபியோ தேவைப்பட்டாலும் வழங்கப்படுகிறது.

மேலும் இந்த சிகிச்சையின் மூலமாக ஒரே நாளிலேயே கட்டியை கரைத்து விட முடியாது. அதனால் அவர்கள் மருத்துவமனைக்கு சில நாட்கள் வருவதற்கான சூழலும் ஏற்படும். தொடர்ந்து 5 வாரங்களுக்கு கதிர்வீச்சு அளிக்கும்போது கதிர்வீச்சு அளிக்கும் இடத்தைப் பொறுத்து சிகிச்சை அளிக்கும் 100 பேரில் 5 அல்லது 10 நபர்களுக்கு பக்கவிளைவுகள் ஏற்படலாம். இதனை மருந்துகளின் மூலம் கட்டுப்படுத்தி விடலாம். இந்த பக்க விளைவுகளினால் உண்டாகும் வலியை வேண்டுமானால் ஒருவர் உணரலாம்.

ஆனால் ரேடியேசன் தெரபி கொடுக்கும் போது வலி இருக்காது. அதேபோல நோயாளிகளால் கதிர்வீச்சை பார்க்கவோ, உணரவோ முடியாது.

இந்த சிகிச்சை முறையில் முடி உதிர்வு ஏற்படும் என்ற ஒரு தவறான கருத்து நிலவுவதால் சிகிச்சை எடுத்துக் கொள்வதில் தயக்கம் ஏற்படலாம். கதிர்வீச்சை குறிப்பிட்ட ஒரு பகுதியில் மட்டுமே செலுத்துகிறோம். உதாரணமாக அடிவயிற்றிலோ, காலிலோ செலுத்தினால் முடி கொட்டுவதற்கான வாய்ப்பு இல்லை. மூளையில் ஏற்பட்டுள்ள புற்றுநோய் கட்டிக்கு சிகிச்சை அளிக்கும்போது முடி உதிர்வு ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது.

கதிர்வீச்சு சிகிச்சையின் போது கட்டி உள்ள இடத்தைத் தாண்டி, அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் கதிர்வீச்சின் தாக்கம் ஏற்படுமா என்ற சந்தேகம் பலருக்கும் எழுகிறது. ஐ.எம்.ஆர்.டி, ஐ.ஜி.ஆர்.டி மற்றும் ராபிட் ஆர்க் போன்ற நவீன உத்திகளை பயன்படுத்தி பாதிக்கப்பட்ட இடத்தில் மட்டும் துல்லியமாக கதிர்வீச்சு அளிக்கப்படுகிறது.

அதுமட்டுமில்லாமல் கதிர்வீச்சை அளிக்கும் லீனியர் ஆக்சிலரேட்டர் இயந்திரம், கட்டி உள்ள பகுதியில் தான் கதிர்வீச்சு செல்கிறதா என்பதை ஸ்கேன் செய்து உறுதிப்படுத்திய பின்னரே பாதிக்கப்பட்ட பகுதியில் துல்லியமாக கதிர்வீச்சை செலுத்துவோம்.

புற்றுநோய்க்கு சிகிச்சை அளிக்கும் வகையில் உலகில் உள்ள நவீன தொழில்நுட்பங்கள் அடங்கிய அனைத்து நவீன கதிர்வீச்சு சிகிச்சை முறைகளும் நம் நாட்டிலேயே உள்ளது. அதனால் நோயாளிகள் கதிர்வீச்சினை பயமின்றி எடுத்து பயனடையலாம்.

குழந்தைகளுக்கு வரும் புற்றுநோய்க்கு வீரியம் அதிகம்!

– டாக்டர் அஜிதா, குழந்தைகள் இரத்தவியல் புற்றுநோய் & ஸ்டெம்செல் மாற்று அறுவை சிகிச்சை நிபுணர்கு

ழந்தைகளுக்கு நேரும் புற்று நோய்களில் 40 முதல் 50% வரையிலான புற்றுநோய்கள் ரத்தம் தொடர்பானவை தான். இதை தவிர பெரியவர்களுக்கு வருவது போல் இவர்களுக்கும் கட்டி தொடர்பான புற்று நோய்கள் மூளையில், வயிற்று பகுதியில், எலும்புகளில் வரலாம்.

குழந்தைகளுக்கு வரக்கூடிய புற்று நோய்களுக்கு பெரும்பாலாக காரணங்கள் கிடையாது. உயிரணுக்கள் கட்டுப்பாடின்றி வளர்வது நம் உடலுக்கே தெரியாமல் போகும் போது, நாளடைவில் அது புற்றுநோயாக மாறுகின்றது. அவர்களுக்கு பிறவியிலிருந்தே புற்றுநோய் இருக்காது, திடீரென தான் வெளிப்படும்.

எந்த பகுதியில் அல்லது உறுப்பில் பாதிப்பு இருக்கிறதோ அதற்கேற்ப அறிகுறிகள் இருக்கும். உதாரணத்திற்கு மூளையில் இருக்கும் பட்சத்தில் தலைவலி, வாந்தி, கை கால் செயல்பாட்டில் தளர்வு, சிலநேரத்தில் பக்கவாதம் இப்படி வெளிப்படலாம்.

சில புற்றுநோய்களுக்கு உடல் வலி, சில நாட்களாக தொடர்ந்து காய்ச்சல் இருக்கும் போது, மருத்துவர்கள் புற்றுநோயாக இருக்கலாம் என்று சந்தேகித்து பரிசோதனைகள் செய்யும் போது புற்றுநோய் என தெரியவரும்.

பெரியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு வரும் புற்றுநோய்களுக்கு நிறைய வேறுபாடு உண்டு, இவர்களுக்கு நேரும் புற்றுநோய்கள் வீரியம் அதிகம் கொண்டவை, அதே சமயத்தில், அவை சிகிச்சைக்கு நன்கு பிடிகொடுக்கும். ஆரம்பநிலையில் புற்றுநோயாக இருக்கலாம் என்று சந்தேகிக்கும் போதே சிகிச்சை பெறத் தொடங்கினால் நல்ல பலன் இருக்கும்.

குழந்தைகளின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு விளைவுகள் வெகுநாட்கள் இல்லாதவாறு அவர்களுக்கு சிகிச்சை முறையை திட்டமிட்டு வழங்கவேண்டும். சிகிச்சைகளால் வரக்கூடிய பின்விளைவுகள் இவர்களுக்கு பெருமளவில் தற்காலிகமான ஒன்று தான்.

அதிக பலன் தரும் நுண்துளை சிகிச்சை

டாக்டர் கமலேஷ், இரைப்பை, குடல், கல்லீரல், கணைய & எடைக்குறைப்பு முதுநிலை அறுவை சிகிச்சை நிபுணர்

முன்பெல்லாம் வயிற்றுப் பகுதிக்குள் ஏற்படும் (இரைப்பை, கணையம்,கருப்பை, குடல்) புற்றுநோய்களுக்கு திறந்த அறுவை சிகிச்சையே செய்யப்படும். ஆனால் கடந்த 10 முதல் 15 வருடங்களாக நுண்துளை புற்றுநோய் அறுவை சிகிச்சை அதிகளவில் செய்யப்படுகிறது.

வயிற்றுப் பகுதிகளில் (Abdominal cavity) சிறிய நுண்துளைகளை ஏற்படுத்தி, ஒவ்வொரு துளையிலும் சிறிய கேமிராவை செலுத்தி, மீதமுள்ள துளை வழியாக லேப்ராஸ்கோபி கருவியின் உதவியோடு, அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. இதற்குப் பின்னர், புற்றுநோய் கட்டியை வெளியே எடுப்பதற்காக தொப்புள் கொடிக்கு கீழ் 3 முதல் 4 செ.மீ அளவிலான வெட்டு ஏற்படுத்தி கட்டி எடுக்கப்படுகிறது.

அதேபோல, உணவுக் குழாயில் ஏற்படும் புற்றுநோயை தோராகோஸ்கோபி (Thoracoscopy) அறுவை சிகிச்சையின் மூலம், விலா எலும்பில் 10 முதல் 15 செ.மீ நீளத்தில் திறப்பு ஏற்படுத்தி உணவுக் குழாயில் உள்ள புற்றுநோய் கட்டி அகற்றப்படுகிறது.

நுண்துளை கேமரா உறுப்புகளை பெரிதாக்கியும், தெளிவாகவும் காண்பிப்பதால், புற்றுநோய் அறுவை சிகிச்சை சுலபமாகவும், அதிக இரத்த சேதமின்றியும் நடைபெறுகிறது. அறுவை சிகிச்சை நேரமும் குறைய வாய்ப்புள்ளது.

இச்சிகிச்சையில் புற்றுநோய் கட்டி முழுமையாக அகற்றப்படுமா என்ற ஐயம் பல நோயாளிகளுக்கு எழுகிறது. ஆனால் சந்தேகத்திற்கு இடமின்றி முழுவதுமாக நீக்கப்படுகிறது. இம்முறை அறுவை சிகிச்சை அதிக செலவுள்ளதாக இருப்பினும், அறுவை சிகிச்சை கொண்டுள்ள வேதனை, குணமாகும் காலம், மருத்துவமனையில் தங்கும் காலம் ஆகியவை குறைவாக இருப்பதனால் இந்த சிகிச்சையினால் அதிக பலன் கிடைக்கிறது. புற்றுநோய் அனைத்து வயதினரையும் பாதிப்பதால் நுண்துளை அறுவை சிகிச்சை முறை ஒப்பனை தோற்றத்தையும் நிலை நிறுத்துகிறது.

தொழில்நுட்பம் வேகமாக முன்னேறி வருகிறது, ரோபோடிக்ஸ் சிகிச்சை முறை, நுண்துளைகளுடன் சில கடினமான அறுவை சிகிச்சையையும் எளிதாக்குகிறது. நிரிழிவி மருத்துவமனையில் ஆயிரக்கணக்கான நோயாளிகள், நுண்துளை அறுவை சிகிச்சை முறை கொண்டு பயனடைந்து வருகின்றனர். எல்லா வித நோயாளிகளும் இவ்வித தொழில்நுட்ப முன்னேற்றம் கொண்டு பயனடைய வேண்டும் என்பது இவ்வருட மைய கருத்தாகவும் உள்ளது.

நம்பிக்கையூட்டும் ஆதரவியல் மருத்துவம்!

டாக்டர் ரஜித் ராமசந்திரன், ஆதரவியல் & இல்ல மருத்துவ சேவை நிபுணர்

ஒரு நபருக்கு புற்றுநோய் ஊர்ஜிதம் ஆகும் பட்சத்தில், அவருக்கு நோய்க்கான சிகிச்சைகளை மருத்துவர்கள் வழங்கிவரும் நேரங்களில் பல விதத்தில் நோயாளிகளுக்கு சிரமங்கள் நேரலாம். உதாரணத்திற்கு வலி, மனவருத்தம் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். இந்த நேரத்தில் எங்களுடைய ஆதரவியல் மருத்துவ சிகிச்சையை (றிணீறீறீவீணீtவீஸ்மீ சிணீக்ஷீமீ) சிபாரிசு செய்வார்கள்.

பொதுவாகவே ஆதரவியல் மருத்துவம் என்றால் நோயின் இறுதி நிலையில் வழங்கப்படும் சிகிச்சையாக இருக்கும் என்று பலரும் நினைப்பது உண்டு. ஆனால் இந்த மருத்துவம் என்பது நோயைக் கண்டறியும் ஆரம்ப நிலையிலிருந்து கூட ஒருவருக்கு தேவைப்படலாம்.

புற்றுநோயினை எந்த நிலையில் கண்டுபிடிக்கின்றார்களோ அந்த நிலைக்கு ஏற்ப எங்களின் பல்துறை நிபுணர்கள் அடங்கிய குழுவில் உள்ள செவிலியர்கள், மன நல ஆலோசகர்கள், பிஸியோதெரபிஸ்ட், உணவியல் நிபுணர் என பலரும் இணைந்து இந்த ஒருங்கிணைந்த ஆதரவியல் மருத்துவ சிகிச்சையை வழங்குவர்.

நோயிலிருந்து மீண்டு வருவதில் மருத்துவம் 75% என்றால், மன வலிமை மீதி எனலாம். எனவே எங்கள் பணி என்பது, நோயாளிகள் பெரும் சிகிச்சையின் ஒவ்வொரு கட்டத்திலும் அவர்களின் உடல், மன சிரமங்களுக்கு தீர்வு தந்து, நம்பிக்கை ஊட்டுவதே.

தேவைகளை புரிந்து உதவும் இல்ல மருத்துவ சேவை

டாக்டர் நிர்மலா, இல்ல மருத்துவ சேவை நிபுணர்

நீண்ட நாட்களாக படுக்கையில் உள்ள புற்றுநோயாளிகள் மற்றும் நாள்பட்ட வியாதி உடைய நோயாளிகளால் சில நேரத்தை தவிர மருத்துவமனைகளுக்கு அடிக்கடி வர முடியாமல் போகும் தருணத்தில் வீட்டிலேயே அவர்களுக்கு சில மருத்துவ உதவிகள் வழங்க முடியும்.

இதை எங்கள் இல்ல மருத்துவ சேவை துறையினர் (Home Health Services), குறிப்பிட்ட நோயாளிகளுக்கு மருத்துவ சிகிச்சைகள் வழங்கும் முதன்மை மருத்துவரிடம் ஆலோசனை பெற்று எங்களால் வழங்க முடியும்.

படுத்தபடுக்கையில் இருக்கக்கூடிய நோயாளிகளுக்கு வெகு நாட்களாக படுத்திருப்பதினால் அழுத்தம் காரணமாக சருமத்தில் சிறு புண்கள் வரலாம், அது நேராமல் பார்த்துக்கொள்வது எப்படி என எங்கள் குழுவினர் நோயாளிகளின் குடும்பத்தினருக்கோ, அல்லது அவர்களால் நியமனம் செய்யப்பட்டுள்ள பராமரிப்பாளருக்கோ நாங்கள் கற்றுக்கொடுப்போம். அத்துடன் படுக்கைகளில் உள்ள நோயாளிகளுக்கு டியூப் வழியாக உணவு எப்படி தரவேண்டும், எவ்வளவு தரவேண்டும் என்று பயிற்சி அளிப்போம்.

வெறும் மருந்து தொடர்பான சேவை என்று இந்த இல்ல மருத்துவ சேவைத் துறையை குறிப்பிட முடியாது. பல கோணங்களில் நோயாளிகளுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் உதவிகள் தேவைப்படும். அவை உடல், மனம், சமூகம் சார்ந்தவையாக இருக்கும். இவை அனைத்தையும் நாங்கள் பகிர்வதோடு, 24 மணி நேரமும் எங்களுடைய சிறப்பு நிபுணரின் ஆலோசனைகளை தொலைபேசி வழியாக குடும்பத்தினர் பெற்றுக்கொள்ளுமாறு வழிசெய்துள்ளோம்.

படுத்த படுக்கையாக இருக்கக்கூடிய நோயாளிகள் எந்த வயதினராக இருந்தாலும் எங்கள் சேவைகள் அவர்களுக்கு கிடைப்பதற்கு ஏதுவாக எங்கள் குழுவினர் தயாராக இருப்பர்.

மரபணு பரிசோதனையும், முன்னெச்சரிக்கையும்!

டாக்டர் பானு, ரேடியேஷன் ஆன்காலஜிஸ்ட்

பெற்றோர் அல்லது முன்னோர்களுக்கு புற்றுநோய் இருந்தால், அடுத்த தலைமுறையினருக்கும் புற்றுநோய் ஏற்படுமா என்ற சந்தேகம் இருக்கலாம். ஆனால் அனைத்து புற்றுநோய்களும் பரம்பரை காரணிகளால் ஏற்படுகிறது என்று கூறிவிட முடியாது. 5 முதல் 10 % வரை மட்டுமே பரம்பரை காரணிகளால் வருகின்றன. அதில் மார்பகம், பெருங்குடல் மற்றும் கருப்பை புற்றுநோய் போன்ற சிலவகை குறிப்பிட்ட புற்றுநோய்கள் மட்டுமே பரம்பரையாக அடுத்த சந்ததியினருக்கு வரக்கூடிய வாய்ப்பு உள்ளது.

நாற்பது வயதிற்குள்ளாக ஒருவருக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டாலோ, மேலும், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பலருக்கும் இந்நோய் ஏற்பட்டு இருந்தாலோ அல்லது ஒரு நபருக்கே உடலின் பல உறுப்புகளில் புற்றுநோய் ஏற்பட்டு இருந்தால் அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு ஜெனிடிக் கவுன்சிலிங்கை எங்கள் மருத்துவமனையில் வழங்குகிறோம்.

இதில் புற்றுநோய் ஏற்படுவதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம் இருப்பவர்கள் அடையாளம் காணப்படுகிறார்கள். பின்னர் அவர்களுக்கு மரபணு பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. பரிசோதனையில் மரபணுவில் உள்ள குறைபாடுகள் கண்டறியப்படுகிறது. இதன் மூலம் முன்னோர்களிடம் இருந்து அடுத்த சந்ததியினருக்கு மீண்டும் புற்றுநோய் ஏற்படாமல் இருப்பதற்கான சிகிச்சைகள் வழங்கப்படுகிறது. இவர்களைத் தொடர்ந்து, இந்த குடும்ப பின்னணியைக் கொண்ட அடுத்த தலைமுறையினருக்கும் எதிர்காலத்தில் இந்நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளன.

இதனால் அவர்களுக்கும் மரபணு பரிசோதனை செய்யப்பட்டு, மரபணுவில் ஏதேனும் மாற்றங்கள் கண்டறியப்பட்டால், எதிர்காலத்தில் புற்றுநோய் வராமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

இங்கு வரக்கூடிய நோயாளிகளில் 250 க்கும் மேற்பட்டவர்களுக்கு நாங்கள் இதுவரை அளித்த ஜெனிடிக் கவுன்சிலிங் மூலமாக சுமார் 80 முதல் 100 பேர் வரை அந்தப் பரிசோதனையை மேற்கொண்டுள்ளனர்.

ஊக்கமளித்து நலம்பெற உதவும் ஆலோசனை!

“தனக்கு புற்றுநோய் உள்ளதா என கண்டறிய வரும் எந்த நபரும் எதிர்பார்த்திராத ஒன்று ‘புற்றுநோய் உள்ளது’ என்ற ஊர்ஜிதமான பதிலை அறியும் போதுதான். அது அவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும். அந்த அதிர்ச்சியில் ஒவ்வொரு நோயாளியும் ஒவ்வொரு மாதிரியாக தங்கள் மனதை வெளிப்படுத்துவார்கள். அவர்களின் நிலை அறிந்து அவர்களுக்கு உகந்த ஆலோசனை வழங்க முயல்வோம். சிகிச்சை முதல் உடல் நலம் திரும்பும் வரை அவர்களின் மனதில் எழும் குழப்பங்களுக்கு தீர்வு தந்து கவனித்துக் கொள்ளவேண்டும் என்ற ஒரு இலக்கை நாங்கள் நிர்ணயம் செய்து கொள்வோம்” என்கிறார் மன நல ஆலோசகர் சாரதா.

“புற்றுநோயை கண்டுபிடிக்கும் நிலையிலிருந்தே அந்த நபருக்கும் அவரின் குடும்பத்தினருக்கு தேவையான மன நல ஆலோசனையை நாங்கள் வழங்குவோம். நோயாளிகளுக்கு சிகிச்சை, பக்க விளைவு ஆகியவை பற்றி மனதளவில் அச்சமும், சந்தேகமும் இருக்கும். அதைப் பற்றிய பதில்களை நாங்கள் அவர்களுக்கு வழங்கி தெளிவுபடுத்துவோம்.

இவர்களுக்கு முன்பு சிகிச்சை பெற்று மீண்டவர்களை அவர்களிடம் பேச வைப்போம். உதாரணத்திற்கு கீமோதெரபி மீது அச்சம் இருந்தால் அந்த சிகிச்சை எடுத்து மீண்டவர்களுடன் பேச வைத்து, அவர்களிடம் சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொள்ள வைப்போம். தனக்கும் முன் ஒருவர் இதே போல் இருந்து, பின் சிகிச்சை மூலம் மீண்டுள்ளார் என்று அறியும்போது நோயாளிகளிடையே புது நம்பிக்கை பிறக்கும்”, என தெரிவித்தார் மன நல ஆலோசகர் ஜோதிமணி.

மன நல ஆலோசகர் நித்யா கூறுகையில் “ரத்தம் தொடர்பான புற்றுநோய்களை குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் எதிர்கொள்ளும் போது அவர்களுக்கு அன்பும் ஆறுதலும் கொடுக்கிறோம். அதில் 8 வயது வரை இருக்கக்கூடிய குழந்தைகள் சிகிச்சை எடுத்துக் கொள்ளும் தருணங்களில் சோர்வடையும் போது ஊக்கமளித்து, முடிந்தவரை அவர்கள் மனம் மகிழ்வான நிலையில் இருக்க வரைதல், புத்தகம், கதை புத்தகம் ஆகியவை கொண்டு அவர்களுடன் ஈடுபடுகிறோம். அவர்களின் பிறந்தநாளை மருத்துவமனையில் கொண்டாடுகிறோம். 9 முதல் 17 வயது வரை இருக்கும் சிறுவர்கள் தங்கள் நண்பர்களுடன் பேசவேண்டும், வெளியே செல்லவேண்டும் என்ற சிந்தனையுடன் இருப்பார்கள். சிலர் சிகிச்சைக்கு செவி சாய்க்க மாட்டார்கள். அவர்களை புரிந்துகொண்டு, அவர்களுக்கு ஏற்ப பேசி, புரிதலை ஏற்படுத்துவோம்,” என்றார்.

“பெரியவர்கள் சிகிச்சை பெரும் போதும் துவக்கத்தில் மனம் இறுக்கமாக இருந்தாலும், போகப் போக அவர்கள் தங்கள் மனதில் உள்ள வலிகளை இறக்கி வைக்க ஒரு இடம் உள்ளது என்று அறிந்து, மாற்றத்தை வெளிப்படுத்துவார்கள். இது சிகிச்சையில் நல்ல முன்னேற்றமடைய உதவும். சிகிச்சை எடுத்துக் கொண்டு, அதற்கு பிறகு மீண்டும் மருத்துவரிடம் ஆலோசனை பெற வரும்போது ஒரு புதிய நபராக, மகிழ்ச்சியோடு எங்களை சந்தித்து பேசுவார்கள். இதுவே எங்களுக்கு பெரும் உத்வேகத்தை தரும்” என்றார்.