கோவையில் பிடிப்பட்ட சிறுத்தை புலி டாப்ஸ்லிப் வனப்பகுதியில் விடப்பட்டது

கோவை குனியமுத்தூர் பகுதியில் ஐந்து நாட்களாக குடோனில் பதுங்கி இருந்த சிறுத்தை புலி நள்ளிரவில் கூண்டிற்குள் வந்த போது வன ஊழியர்கள் கூண்டை மூடி சிறுத்தை புலியை பிடித்து கோவை டாப்சிலிப் வனப்பகுதியில் விட்டனர்.

மதுக்கரையொட்டிய வனப்பகுதியில் இருந்து கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியேறிய மூன்று வயது மதிக்கதக்க ஆண் சிறுத்தை புலி குனியமுத்தூர் பகுதியில் உள்ள குடோனில் பதுங்கி கொண்டது. கூண்டு வைத்து 5 தினங்களாக வனத்துறையினர் காத்திருந்த போதிலும் கூண்டில் சிக்காமல் சிறுத்தை புலி போக்கு காட்டி வந்தது.

ஆறாவது நாளான நேற்று நள்ளிரவு குடோன் வாயிலில் வைக்கப்பட்டிருந்த கூண்டு பகுதிக்கு சிறுத்தை புலி வந்தது. சிசிடிவி கேமரா மூலம் சிறுத்தை புலியின் நடவடிக்கைகளை கண்காணித்து வந்த வனத்துறையினர் சிறுத்தை புலி முழுமையாக கூண்டிற்குள் வந்தவுடன் கதவை மூட தயாராக இருந்தனர். சிறுத்தை புலி மிகுந்த எச்சரிக்கை உணர்வுடன் கூண்டிற்குள் வந்த நிலையில் வன ஊழியர்கள் சமயோசிதமாக செயல்பட்டு கூண்டின் கதவை அடைத்ததால் சிறுத்தை புலி கூண்டில் சிக்கிக் கொண்டது.

இந்நிலையில், கூண்டில் சிக்கிய சிறுத்தை புலியை மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் கோவை டாப்சிலிப் வனப்பகுதியில் சிறுத்தை புலியை வனத்துறையினர் விட்டனர்.

கூண்டில் இருந்து திறந்துவிடப்பட்ட சிறுத்தை புலி அடந்த காட்டிற்குள் சீறிப்பாய்ந்து ஓடியது. இதை வனத்துறையினர் வீடியோவாக பதிவு செய்தனர். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.