பஞ்சாப் சம்பவம்; மோடிக்கு சாதகமா? பாதகமா?

பஞ்சாப் மாநிலத்தில் பிரதமர் மோடி சாலையின் நடுவே 15 நிமிடங்கள் நிறுத்தப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.  இதுபோன்ற சம்பவங்களை வைத்துப் பார்க்கும்போது பிரதமர் மோடியின் மோகம் சரிகிறதா? என்ற விவாதம் எழத் தொடங்கியுள்ளது.

உத்தரப்பிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், கோவா,  மணிப்பூர் என 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அரசியல் தட்பவெப்பநிலை முற்றிலும் மாறுபட்டு நிற்கிறது. 2024 மக்களவைத் தேர்தலுக்கான முன்னோட்டமாக இந்த தேர்தல்கள் இருக்கக்கூடும் என்றும் குறிப்பாக உத்தரப்பிரதேசத் தேர்தல் முடிவு அடுத்த மக்களவைத் தேர்தலுக்கான உறைகல்லாக இருக்கும் என்றும் அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

இரு தரப்பின் குற்றசாட்டு:

பஞ்சாப் மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு சில நாள்களுக்கு முன்பு அதாவது  ஜன.5 ஆம் தேதி அங்கு சென்றிருந்த பிரதமர் நரேந்திர மோடியை தொடர்ந்து பயணம் செய்ய முடியாத அளவுக்கு சாலையின் நடுவே 15 நிமிடங்களுக்கு மேல் அவர் நிற்க வைக்கப்பட்ட மிகப்பெரிய சம்பவம் நடந்தது. தொடர்ந்து பயணிக்க முடியாததால் ரூ.45,000 கோடி அளவிலான வளர்ச்சித் திட்டப்பணிகளை தொடங்கி வைக்க முடியாமல் நிகழ்ச்சி நிரல்களை ரத்து செய்துவிட்டு பிரதமர் மோடியும் தில்லிக்கு திரும்ப வேண்டிய சூழல் உருவானது.

பஞ்சாப்பில் இருந்து நான் உயிரோடு திரும்பியதற்கு உங்கள் முதல்வரிடம் நன்றி சொல்லுங்கள் என பிரதமர் மோடியும், பஞ்சாப் மாநில காங்கிரஸ் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி மீது நேரடியாக குற்றஞ்சாட்டியது தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரதமருக்கு பதிலடி தரும் வகையில் சரண்ஜித் சிங் சன்னி கூறும்போது,  பிரதமர் பங்கேற்கும் நிகழ்ச்சியில் 50,000 பேர் அமரும் வகையில் இருக்கைகள் போடப்பட்டிருந்தன. ஆனால், சில நூறுபேர்கள் மட்டுமே வந்ததால்தான் இந்நிகழ்ச்சியை பிரதமர் ரத்து செய்துவிட்டார் என குற்றஞ்சாட்டினார்.

நாட்டின் உயரிய பதவியில் இருக்கும் பிரதமர் சாலையின் நடுவே 15 நிமிடங்கள் நிற்க வைக்கப்பட்டதற்கு யார் காரணம் என தொடர்ந்து விவாதங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. பிரதமரின் பயண நிகழ்ச்சி வான்வெளியில் செல்ல திட்டமிடப்பட்டிருந்தாலும்,  சாலை மார்க்கமாகவும் செல்வதற்கு மாற்றுவழி குறித்து முன்பே திட்டமிடப்பட்டிருக்கும்.  அவ்வாறு மாற்று வழியில் செல்லும்போது அந்த வழியிலும் உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டிருக்கும்.  இந்நிலையில், அந்த சாலையில் விவசாயிகள் எப்படி போராட்டம் நடத்த அனுமதிக்கப்பட்டார்கள் என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது.  மத்திய அரசின் உளவுப்பிரிவு அதிகாரிகள் நாடு முழுவதும் ஒவ்வொரு தொகுதிகளிலும் பணியாற்றி வரும் நிலையில்,  பஞ்சாப் போன்ற மாநிலங்களுக்கு பிரதமர் செல்லும்போது மத்திய உளவுத்துறையின் கண்களும், காதுகளும் முன் எப்போதும் செயல்படுவதை விட கூர்மையாக செயல்படும். அப்படி இருக்கும்போது இச்சம்பவம் எப்படி நிகழ்ந்தது என்பதில் பல கேள்விகள் எழுகின்றன.

இச்சம்பவம் குறித்து உச்ச நீதிமன்றம் நேரடி விசாரணையைத் தொடங்கியுள்ளது. எனவே, அந்த விசாரணைக்குப் பின்னர் தான் இதற்கான முழுமையான காரணத்தை அறிய முடியும். ஆனால், இச்சம்பவத்துக்கு பின்னால் அரசியல் வியூகம் இருக்கிறது என்பதையே அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

மோடி எதிர்ப்பு மாநிலங்கள்:

இந்திய அரசியலைப் பொறுத்தவரை இப்போது பிரதமர் மோடியை சுற்றி தான் சுழலுகிறது. பாஜக வெற்றி பெற்றாலும், தோல்வி அடைந்தாலும் பிரதமர் மோடி தான் காரணம் என்ற தோற்றம் உருவாகிவிட்டது. நாட்டில் பஞ்சாப், தமிழ்நாடு ஆகிய இரண்டு மாநிலங்களிலும் மோடி எதிர்ப்பு என்பது உச்சகட்ட நிலையில் உள்ளது. தேர்தல் நேரத்தில் இதை வைத்து அரசியல் லாபம் அடையவே அரசியல் கட்சிகள் விரும்பும்.

ஓராண்டுக்கு முன்பு மத்திய அரசு வேளாண் சட்டங்களை கொண்டுவந்த போது பஞ்சாப் மாநிலத்தில் இருந்து தான் முதல்கட்ட எதிர்ப்பு தொடங்கியது. பின்னர் அது ஹரியானா,  உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான் என பரவியது.  இதற்கு முக்கிய காரணம்,  இம்மாநிலங்களில் வாழும் ஜாட் இன மக்கள். இவர்கள் மதத்தால் சீக்கியர்களாகவும்,  இந்துக்களாகவும் இம்மாநிலங்களில் வாழுகின்றனர்.

ஜாட் இன மக்கள், ஆளும் பாஜக மீது இப்போது கடும் அதிருப்தியில் உள்ளனர். இதற்கு காரணம், 2014, 2019 மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடியின் வெற்றிக்குப் பின்னால் ஜாட் மக்களும் இருந்தனர்.  மேற்கு உத்தரப் பிரதேசம், ஹரியானா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் பாஜகவுக்கு அதிக எம்.பி.க்கள் கிடைக்க இவர்கள் உதவினர். இருப்பினும் அவர்களுக்கு பாஜக அரசில் மிகப்பெரிய அளவில் பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லை.

இதனால் அதிருப்தி அடைந்த ஜாட் மக்கள், வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடுமையாக போராடினர். இதையடுத்து இரு மாதங்களுக்கு முன்பு ராஜஸ்தானில் நடந்த இடைத்தேர்தலில் தயிர்வாட், வல்லபநகர் பேரவைத் தொகுதிகளில் பாஜக மிகவும் மோசமாக தோல்வி அடைந்ததை கண்ட மோடி, வேளாண் சட்டத்தை உடனடியாக திரும்பப்பெற்றார். ஆனால், அதன் பிறகும் பஞ்சாப் மாநிலத்தில் பிரதமர் மோடிக்கு எதிரான சம்பவம் நடந்துள்ளது.

இதற்கான காரணத்தை பஞ்சாப் அரசியலில் தேர்தலில் இருந்து ஆய்வு செய்தால் 1984 ஆம் ஆண்டு இந்திரா காந்தி கொல்லப்பட்டதற்கு பிறகு நடந்த சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தில் இந்து, சீக்கியர் பிரச்சினையாக  உருவெடுத்துள்ளது. இதனால் பஞ்சாப் மாநிலத்தைப் பொறுத்தவரை காங்கிரஸ், பாஜக இரண்டுமே ஒன்று தான் என்ற பார்வை அங்குள்ள மக்களுக்கு உள்ளது.

அப்பகுதி மக்களின் ஆதரவை இதுவரை பாஜகவால் பெற முடியாத சூழலே இருந்து வருகிறது. இதனால் தான் தமிழகத்தைப் போல பஞ்சாப்பிலும் பாஜக படுமோசமான வாக்கு வங்கியை வைத்திருக்கிறது. இப்போது பஞ்சாப் தேர்தல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, சிரோன்மணி அகாலிதள், பாஜக என 4 முனையாக பிரிந்த பிறகு, காங்கிரஸ் கட்சி தலித் முதல்வராக சரண்ஜித் சிங் சன்னியை முன்னிறுத்துவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. சன்னியைப் பொறுத்தவரை ஜாட் அல்லாத ஒருவர் ஆதிக்கம் செலுத்துகிறார் என்பதால் அங்கு வாழும் 35 சதவீதம் ஜாட் ஆதரவு பெறுவது குறைவு என்ற தோற்றம் உள்ளது. அதேவேளை அவர் தலித் சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதால் 38 சதவீதம் உள்ள தலித் மக்களின் ஆதரவு கிடைப்பது உறுதி.

யாருக்கு ஆதரவு?

இதற்கிடையே காங்கிரசுக்கு போட்டியாக உருவெடுத்துள்ள ஆம் ஆத்மி கட்சி,  ஜாட் சீக்கியரும், மாநில காங்கிரஸ் தலைவருமான சித்துவுக்கு ஏன் முதல்வர் பதவி தரவில்லை என்பதை மையமாக வைத்தும், அரசுக்கு எதிரான மக்கள் அதிருப்தியை பயன்படுத்தியும் அரசியல் செய்து வருகிறது. கடந்த முறை எதிர்க்கட்சியாக மாறிய ஆம் ஆத்மி, இந்த முறை ஆளும் கட்சியாக மாற துடிக்கிறது.  காங்கிரஸ், தலித் முதல்வரை வேட்பாளராக களம் இறக்கும் நிலையில், ஜாட் மக்களின் ஆதரவுடன் எப்படியாவது ஆட்சியை பிடித்துவிட வேண்டும் என ஆம் ஆத்மியும் மல்லு கட்டி வருகிறது.

இந்நிலையில் தான் பிரதமருக்கு எதிரான போராட்டம் பஞ்சாப்பில் நடந்தது.  பஞ்சாப் மாநிலத்தில் பிரதமர் மோடி எதிர்ப்பு உச்சகட்டத்தில் இருக்கும் நிலையில் அதை யார் அறுவடை செய்வது என்பதில் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி இடையே போட்டி நிலவுகிறது.  இதற்கிடையே பிரதமருக்கு எதிராக கருத்து தெரிவிப்பதன் மூலம்,  தான் மோடிக்கு எதிராக இருப்பதாக காட்ட முதல்வர் சன்னிக்கு உதவுகிறது. ஏற்கெனவே தலித் வாக்குகளை கவர்ந்திருக்கும் சன்னி, மோடி எதிர்ப்பு என்ற வகையில் ஜாட் இனத்தில் ஒரு பகுதி வாக்குகளை பெற்றால் எளிதாக வெற்றிபெறலாம் என கணக்குப் போடுகிறார். இதனால் இந்நிகழ்வு தேர்தலைப்  பொறுத்தவரை சரண்ஜித் சன்னிக்கு பெரும் ஆதரவு கிடைக்க வாய்ப்பு உள்ளது.

அதேவேளையில் பஞ்சாப் முதல்வர் சன்னிக்கு எதிரான பிரதமர் மோடியின் குற்றச்சாட்டிலும் அரசியல் இல்லாமல் இல்லை.  இச்சம்பவத்தில் பஞ்சாப்பில் பாஜகவுக்கு ஆதரவு கிடைக்காது என்றாலும், இந்த சம்பவத்தை நாடு முழுவதும் கொண்டு செல்வதன் மூலம் தனக்கான ஆதரவைப் பெருக்கிக் கொள்ள பிரதமர் மோடி முயற்சிக்கிறார் என்ற பார்வை உள்ளது.

குறிப்பாக உத்தரப் பிரதேசம்,  உத்தரகண்ட் போன்ற மாநிலங்களில் பேரவைத் தேர்தலில் தேசிய எண்ணம் கொண்ட இந்து வாக்கு வங்கிகளை பாஜகவுக்கு ஆதரவாக திருப்புவதற்காகவே பிரதமர் மோடி இவ்வாறு குற்றஞ் சாட்டியுள்ளார் என்ற அரசியல் பார்வையும் எழுந்துள்ளது. பிரதமரின் இம்முயற்சிக்கு இந்த இரு மாநிலங்களிலும் கைமேல் பலன் கிடைக்கக்கூடும்.  உத்தரப் பிரதேசத்தில் பாஜகவுக்கு தொடர்ந்து வாக்களித்து வந்த உயர் ஜாதியினர்,  முதல்வர் யோகி ஆதித்யநாத் செயல்பாடுகளால் பாஜகவுக்கு எதிராக திரும்பக்கூடும் என்ற கருத்து இருந்த நிலையில், இந்த வாக்கு வங்கியை பாஜக தக்கவைக்க பிரதமர் மோடியின் முயற்சி கைகொடுக்கும் என்கின்றனர் அரசியல் திறனாய்வாளர்கள்.

பிரதமர் மோடிக்கு ஏற்பட்ட சம்பவம் குறித்து பாஜக கூட்டணியில் இல்லாத தலைவர்களான  ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்,  முன்னாள் பிரதமர் தேவகவுடா, ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.  இதுவும் பாஜகவுக்கு அரசியல் ரீதியாக கூடுதல் வலுவாகியுள்ளது.

பிரதமர் மோடிக்கு பஞ்சாப்பில் ஏற்பட்ட சம்பவத்துக்கு உண்மையான காரணம் யார் என்பது உச்ச நீதிமன்ற விசாரணைக்குப் பின் தான் தெரியவரும். ஆனால், தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இச்சம்பவத்தை வைத்து பாஜகவும்,  எதிர்க்கட்சிகளும் அரசியல் ரீதியாக அறுவடை செய்ய முயற்சி செய்கின்றன என்பது தான் உண்மை.

 உருவாகிய பிம்பம்:

இது குறித்து அரசியல் விமர்சகர் ரிஷி கூறும்போது, பஞ்சாபில் பிரதமரின் பாதுகாப்பில் நடந்த குளறுபடி என்பது, பிரதமர் மோடிக்கு அகில இந்திய அளவில் சாதகமான ஒரு அம்சமாக மாறி உள்ளது. குறிப்பாக உத்தரப் பிரதேசம் மற்றும் உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களில், மாநில முதல்வர்கள் ராஜ்புட் சமுதாயத்தைச்  சேர்ந்தவர்கள் என்பதால் பிராமண சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு பாஜக மீது அதிருப்தி எழுந்துள்ளது என்பது உண்மை.

ஆனால் தற்பொழுது பிரதமரின் பாதுகாப்பில் ஏற்பட்ட குளறுபடிகளுக்கு காங்கிரஸ் காரணம் என்ற பிம்பம் உத்தரப்பிரதேசம் மற்றும் உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களில் உருவாகியுள்ளது. அதனால் பிராமணர்கள் வாக்குகள்  பாஜகவிற்கு அதிகம் கிடைக்கும் சூழல் உருவாகலாம். இதனால் தான் இந்த விவகாரத்தில் பிரியங்கா காந்தி பிரதமர் மோடிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார்.