அன்று கூலி, இன்று ஐ.ஏ.எஸ்

எந்த சூழ்நிலையிலும், எவ்வளவு இடர்கள் வந்த போதும், தளராத மனதோடு உழைப்பவனுக்கு இந்த பிரபஞ்சத்தில் முடியாதது என்று எதுவுமே இருக்க முடியாது.

தவறி விழும் விதைகள் கூட முளைக்கும் போது, தடுமாறும் நம் வாழ்க்கையும் சிறக்கும்

என்ற நம்பிக்கையோடு உழைப்பவர்களுக்கு வெற்றி வந்து சேர்ந்தே தீரும்.

ஆம், எர்ணாகுளம் ரயில் நிலையத்தில் சுமை தூக்கும் கூலி (Porter) வேலை செய்தவர், நம்பிக்கையோடு தொடர்ந்து உழைத்து ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்றிருக்கிறார்.

தேயிலைத் தோட்டமும் அழகிய முகில்களும் சூழ்ந்த சுற்றுலாத் தலமான மூணாரில் ஒரு சாதாரண ஏழைக் குடும்பத்தில் பிறந்தவ‌ர் கே.ஸ்ரீநாத்.

க‌ல்வியை தொட‌ர‌முடியாத‌ வறுமைச் சூழ‌லில் எர்ணாகுளம் ரயில் நிலையத்தில் சுமை தூக்கும் கூலியாக‌ வேலை செய்ய‌த் துவ‌ங்கினார். அப்போது அவ‌ருக்கு கொடுக்க‌ப்ப‌ட்டிருந்த‌ கூலி அடையாள‌ எண்தான் (பேட்ஜ்) 343.

வீட்டில் வயதான பெற்றோர் ம‌ற்றும் மனைவி. குடும்ப‌த்தின் ஒரே ஆதாரம் ஸ்ரீநாத் வருமானம் ம‌ட்டுமே. இந்நிலையில் ஒரு பெண் குழ‌ந்தையும் பிற‌க்க‌, குடும்ப‌ பொருளாதார‌ச் சூழ‌ல் மேலும் கடுமையானது.

எவ்வ‌ள‌வுதான் உழைத்தாலும் க‌ல்வியால் ம‌ட்டுமே த‌ன்னையும் தன் குடும்பத்தையும் மேம்ப‌டுத்த‌ முடியும் என்று உண‌ர்ந்தார் ஸ்ரீநாத்.

ஒவ்வொருவரும் தற்போது இருக்கும் நிலைக்கு கடந்த காலத்தின் சிந்தனைகள் தான் காரணம். எதிர்காலத்தில் என்னவாக இருக்க வேண்டும் என்பதை நமது இன்றைய திட்டமும் செயலும் தீர்மானிக்கும். ப‌க‌லில் சுமை தூக்குவ‌தும், இர‌வில் ப‌டிப்ப‌துமாக‌ இள‌ங்க‌லைப் ப‌ட்ட‌ம் பெற்றார்.

சின்னச் சின்ன வெற்றிகள் தான் பெரிய சாதனைப் பயணத்திற்கு தூண்டுகோலாக இருக்கும். தனது இளங்கலைப் பட்டம் பற்றி “இதுவே என் க‌ன‌வுக‌ளுக்கு அடித்தளமாக அமைந்த‌து” என்றார்  ஸ்ரீநாத்.

இரயில்வே துறை ர‌யில் நிலைய‌ங்க‌ளில் இல‌வ‌ச‌ இணைய‌வ‌ச‌திக‌ள் (Wi-Fi) அளிக்க‌த் துவ‌ங்கிய‌து யாருக்குப்  ப‌ய‌னுள்ள‌தாக‌ இருந்த‌தோ இல்லையோ, ஸ்ரீநாத் அதை ந‌ன்றாக‌ ப‌ய‌ன்ப‌டுத்திக் கொண்டார். வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் என்பார்கள் ஶ்ரீநாத்துக்கு Wi-Fi ஆயுதமாகி இருக்கிறது.

“இந்த‌ வ‌ச‌தி எர்ணாகுள‌ம் ர‌யில்நிலைய‌த்துக்கு வ‌ந்த‌போது என்னிட‌ம் ந‌வீன‌ கைபேசியோ, ஏன் ஹெட்ஃபோனோ கூட‌ இருக்க‌வில்லை. மிக‌வும் சிர‌ம‌ப்ப‌ட்டு சேமித்து அவ‌ற்றை வாங்கினேன். அத‌ன்பின் ல‌க்கேஜ்க‌ள் தூக்கிச் சும‌க்கும் நேர‌ம் தவிர்த்து ம‌ற்ற‌ எல்லா நேர‌ங்க‌ளிலும் Kerala Public Service Commission (KPSC) தேர்வு ச‌ம்ப‌ந்த‌மான‌ பாட‌ங்க‌ள், தேர்வு ச‌ம்ப‌ந்த‌மான‌ செய்திக‌ள், இல‌வ‌ச‌ ஆன்லைன் வ‌குப்புக‌ள் என்றே இருப்பேன்” என்கிறார் ஸ்ரீநாத்.

KPSC தேர்வின் முத‌ல் ப‌டிநிலையான‌ எழுத்து தேர்வில் வென்ற‌தும் அவரது ந‌ம்பிக்கை  வ‌லுப்பெற்றது.

“ஏன் IAS படிக்கக் கூடாது..?” என்ற த‌ன் எண்ண‌த்தை ந‌ண்ப‌ர்க‌ளுட‌ன் ப‌கிர்ந்திருக்கிறார். பரிகாசம் மட்டுமே பதிலாக கிடைத்திருக்கிறது.

இர‌யில் நிலைய‌ WiFi வசதியை ம‌ட்டுமே ஆதாரமாக வைத்து  UPSC தேர்வுக்கு தயாராகத் தொடங்கினார். தலைச்சுமை இல்லாத நேரங்களில் எல்லாம் நடைமேடை ஓரம் பயிற்சித் தளமானது.

முத‌ல் முய‌ற்சி தோல்வியில் முடிந்த‌து. இர‌ண்டாவ‌தும் மூன்றாவ‌தும் அப்படியே. தொடர்ந்த உழைப்பு நானகாவது முயற்சியில் வெற்றியைத் தந்திருக்கிறது.

இரயில் நிலைய தலைச்சுமை தூக்கும் கூலி எண் 343, IAS அதிகாரியாகிறார். ஆம், எங்கே இருக்கிறோம் என்பது முக்கியம் அல்ல, அர்ப்பணிப்பு உணர்வோடு உழைத்தால் சாதாரண நிலையில் இருந்து சாதனை மனிதராக யாரும் உயரலாம் என்பதற்கு ஶ்ரீநாத் வாழ்க்கையும் ஒரு சான்று.

கடுமையான உழைப்புக்கு மத்தியிலும் தனது வளர்ச்சிக்கு நேரம் ஒதுக்கி படித்ததும், உழைத்ததும் தான், போராட்டமாகவும், வலி நிறைந்தும் இருந்த அவரது வாழ்க்கையை சரித்திரமாக மாற்றி இருக்கிறது.

தோல்வி கண்டு துவளாத எண்ணத்தோடு, விடாமுயற்சியுடன், வாய்ப்புகளுக்கு காத்திருக்காமல் வாய்ப்புகளை உருவாக்கும் தெளிவான சிந்தனையுடன் உழைத்த ஶ்ரீநாத்

“தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன்

மெய்வருத்தக் கூலி தரும்”

என்ற வள்ளுவரின் குறளுக்கு வாழ்கின்ற சாட்சியாக வரலாறு படைத்திருக்கிறார்.

எவர் ஒருவராலும் சாதிக்க முடிகின்ற எதுவும் நம்மாலும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையை நம் வீட்டுக் குழந்தைகளுக்கும் ஊட்டுவோம்.

கட்டுரை: நீதிபதி அ. முகமது ஜியாவுதீன்