கொரோனா விதிகளை பின்பற்றி கோவையில் ஜல்லிக்கட்டு நடத்த முடிவு

கோவையில் கொரோனா விதிகளை பின்பற்றி ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த கோவை மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

ஜல்லிக்கட்டு முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் சமீரன் தலைமையில் நடைபெற்றது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாநகர காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம், கால்நடைபராமரிப்பு துறை இணை இயக்குநர் பெருமாள்சாமி, பொள்ளாச்சி சார் ஆட்சியர் தாக்கரேசுபம் ஞானதேவ்ராவ், ஜல்லிக்கட்டு பேரவை உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் கூறியதாவது:

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டினை சில விதிமுறைகளுக்கு உட்பட்டு நடத்துவதற்கு அனுமதி வழங்கியுள்ளார்கள். அதன்படி, கோயம்புத்தூர் மாவட்டத்தில் அரசு வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றி ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளது.

ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் காளைகளின் உரிமையாளர்கள் மற்றும் அவர்களை சார்ந்தவர்களும் பெரும் பங்கு வகிப்பதால், ஒரு காளையுடன் சுமார் 5 முதல் 6 நபர்கள் வருவது வழக்கம், இதனை கட்டுப்படுத்தி ஒரு காளையுடன் ஒரு உரிமையாளர் மற்றும் காளையுடன் நன்கு பழக்கமுள்ள ஒரு உதவியாளர், இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டதற்கான சான்று மற்றும் நிகழ்ச்சி நடைபெறும் தேதியிலிருந்து 2 நாட்களுக்குள் கோவிட் தொற்று இல்லை என்பதற்கான சான்று ஆகியவற்றை வைத்திருந்தால் மட்டுமே அனுமதிக்கபடுவார்கள்.

காளையின் உரிமையாளர் மற்றும் அவரது உதவியாளருக்கு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அடையாள அட்டை வழங்கப்படும். மேலும், அடையாள அட்டை இல்லாத நபர்களுக்கு ஐல்லிக்கட்டு நிகழ்ச்சி நடைபெறும் வளாகத்திற்குள் நுழைய அனுமதி இல்லை.

காளைகளை பதிவு செய்யும் பொழுது அக்காளையின் உரிமையாளர் மற்றும் உடன்வரும் உதவியாளர் ஆகியோரும் பதிவு செய்தல் வேண்டும். ஜல்லிக்கட்டில் பங்குபெறும் காளைகளின் பதிவு, ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிநடைபெறுவதற்கு 3 நாட்களுக்கு முன்பே முடிக்கப்பட வேண்டும்.

அரசின் கொரோனா தடுப்பு நடைமுறைகளை பின்பற்றி பார்வையாளர்கள் திறந்த வெளி அரங்கின் அளவிற்கேற்ப சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில், அதிகபட்சமாக 150 பார்வையாளர்கள் அல்லது அனுமதிக்கப்பட்ட இருக்கை எண்ணிக்கையில் 50 சதவிகிதத்திற்கு மிகாமல் இவற்றில் எது குறைவோ அந்த எண்ணிக்கையில் பார்வையாளர்கள் அணுமதிக்கப்படுவார்கள்.

மேலும், பார்வையாளர்கள் இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டதற்கான சான்று மற்றும் நிகழ்ச்சி நடைபெறும் தேதியிலிருந்து 2 நாட்களுக்குள் கோவிட் தொற்று இல்லை என்பதற்கான சான்று ஆகியவற்றை வைத்திருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை மேற்பார்வை செய்யும் அனைத்துத் துறை அலுவலர்களும், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களும் இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டதற்கான சான்று மற்றும் நிகழ்ச்சி நடைபெறும் தேதியிலிருந்து 2 நாட்களுக்குள் கோவிட் தொற்று இல்லை என்பதற்கான சான்று ஆகியவற்றை வைத்திருக்க வேண்டும்.

அனைத்து துறை அலுவலர்களும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களும், பார்வையாளர்களும் மற்றும் ஊடகத் துறை சார்ந்தவர்களும் அரசினால்அறிவுறுத்தப்பட்ட நடைமுறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும். வெளியூரில் வசிப்பவர்கள் ஜல்லிக்கட்டு நிகழ்வுகளை தொலைக்காட்சி மற்றும் இணைய வழியாக காண அறிவுறுத்தப்படுகிறது. மேலும், ஜல்லிக்கட்டு இடர்பாடின்றி நடைபெறுவதற்கு பொதுமக்களும், பத்திரிக்கைத் துறையும் மற்றும் தொலைக்காட்சித் துறையினரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் கூறினார்.

இதனிடையே ஜல்லிக்கட்டு போட்டியை வரும் 19ம் தேதி நடத்த ஜல்லிக்கட்டு பேரவையினர் மாவட்ட ஆட்சியரிடம் பரிந்துரை செய்துள்ளனர். இது குறித்தான அறிவிப்பு நாளை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.